இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செய்ததொன்றும் இல்லை; மகிந்த கூறுகிறார்
2016-10-05 10:13:11 | General

"நாட்டில் இனங்களுக்கிடையில் காணப்பட்ட பிரச்சினை தீர்ந்துவிட்டது.  விடுதலைப்புலிகள் இல்லை, தற்கொலை குண்டுதாரிகள் இல்லை' என்று உடனடியாக கூறிவிடமுடியாது. அந்த சான்றினை என்னால் வழங்கமுடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றதன் பின்னர் தமிழ் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பத்தரமுல்லையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்து நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். இந்த நேர்காணலில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;  


கேள்வி: இறுதிக்கட்ட யுத்தத்தில் முப்படைத் தளபதியாகவும் நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்த நீங்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் சடலத்தை கண்ணால் கண்டீர்களா? 


பதில்: நான் பிரபாகரனின் சடலத்தை கனவில் கூட காணவில்லை. அத்துடன் சடலங்களைக் கண்டு சந்தோஷப்படும் மனநிலையில் நான் ஒருபோதும் இருந்ததில்லை. அதுமட்டுமல்லாது, நாம் தனிநபருக்கு எதிரான போரினை முன்னெடுக்கவில்லை. நாட்டிலிருந்து தீவிரவாதத்தை ஒழித்து மக்களை காப்பாற்றும் மனிதாபிமான செயற்பாட்டையே  முன்னெடுத்தோம். நான் பிரபாகரனின் சடலத்தை பார்த்ததாகக் கூறுவது முற்றிலும் பொய்யாகும். 


கேள்வி: இறுதிக் கட்ட போரில் சரணடைந்த தமிழ் விடுதலைப்புலி போராளிகள் 12,000 பேரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்த நீங்கள் ஏன் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உங்களது ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை?


பதில்: முன்னாள் போராளிகளுக்கு  புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது தற்போது தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவேண்டுமென்ற கருத்தினை நாம் கொண்டிருந்தோம்.

இன்று இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேசும் சில வழக்கறிஞர்கள் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டுமென தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கைக்கமையவே நாம் அவர்களை நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தினோம். அன்று அவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்தால் இன்று வெளியே இருந்திருக்கலாம்.

தற்போது சிறையிலுள்ள அரசியல் கைதிகளிலும் பார்க்க மிகவும் மோசமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் கூட புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அண்மையில் எனது மகன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் இவர்களை (அரசியல் கைதிகளை) சந்தித்து பேசியதுடன்  இவர்களின் பிரச்சினை தொடர்பில் என்னுடன் பேசினார். எவ்வாறாயினும் இந்தப் பிரச்சினை தொடர்பில் நீதிமன்றமே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .


கேள்வி: இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு ஏன் எதிர்க்கின்றீர்கள்?


பதில்: இலங்கையில் யுத்த குற்றம் இடம்பெற்றதென்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனால் சிலசில சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம். உதாரணத்துக்கு மனம்பேரி என்ற பெண் பாலியல் வல்லுறவு சம்பவத்தை  எடுத்துக்கொண்டால் அக்குற்றத்தை புரிந்த இராணுவ அதிகாரிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

ஆகவே அந்தச் சம்பவத்தை நாம் யுத்த குற்றமென கூறிவிட முடியாது. அத்துடன் குற்றமொன்று இடம்பெற்றால் அதுதொடர்பில் வழக்கொன்றைப் பதிவு செய்வதற்கு முடியும். அத்தோடு காணாமல் போனோர் விவகாரத்திலும் கூட நாம் ஆணைக்குழுவொன்றை அமைத்திருந்தோம். அந்த ஆணைக்குழு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று காணாமல்போனோரின் உறவுகளிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டது.

அதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளுக்கு எமது அரசாங்கம் தயாராக இருந்தபோதும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை தடுத்து நிறுத்தி தற்போது சர்வதேச நீதிபதிகளை கொண்டுவர வேண்டுமென தெரிவித்து வருகிறது. 


வெளிநாடுகளுக்கு செல்லும் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் வெளிவிவகார அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தெரிவிக்கும் கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாகவே காணப்படுகின்றன. ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இலங்கை அனுசரணை வழங்கியதுடன், அத்தீர்மானங்களை நிறைவேற்றுவதாக சர்வதேசத்துக்கு இவ்வரசாங்கம் உறுதியளித்தது. 


கேள்வி: யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்த போதும் உங்கள் அரசாங்கம் வடக்கு மற்றும் தெற்கு மக்களின் மனதினை இணைக்கும் செயற்பாடுகளை சரிவர செய்யவில்லை என்ற தற்போதைய அரசாங்கத்தின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்தென்ன?


பதில்: வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதாக இந்த அரசாங்கம் தற்போது தமிழ் மக்களிடம் அரசியல் செய்துகொண்டு வருகிறது. வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த நாம் அங்கு அரசியல் செய்வதற்கு தவறிவிட்டோம். அதனையே இந்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகிறது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு அகதி முகாமேனும் மூடப்படவில்லை. அகதி முகாமிலுள்ள மக்களை மீளக்குடியேற்றி அங்கிருந்த இராணுவ முகாமினை மூடிய செயற்பாடொன்று இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டதா? என்று கூறுங்கள் பார்ப்போம். அவ்வாறானதொரு நடவடிக்கை இந்த அரசாங்கத்தினால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் தமிழ் மக்களைப் பற்றி எண்ணுவதில்லை.

தங்களது அரசியல் இலாபத்துக்காக மக்களை பயன்படுத்தி வருகின்றனர். பாராளுமன்றத்தில் கூட அதிக வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக சுமந்திரன், சம்பந்தன் போன்றோரை சந்தோஷப்படுத்தும் செயற்பாட்டை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. ஆனால் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செய்ததொன்றும் இல்லை. நான் அன்று தமிழ் மக்களுக்காக ஆரம்பித்த செயற்பாடுகளையே இன்று வடக்கில் இந்த அரசாங்கம் திறந்து வைத்து வருகிறது. 


கேள்வி: வடமாகாண சபைத் தேர்தலை நடத்தியதற்காக நீங்கள் வருந்துகிறீர்களா? வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அண்மையில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் உங்கள் கருத்தென்ன? 


பதில்: நான் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தியதற்காக ஒருபோதும் வருந்தியதில்லை. மக்களுக்கு ஜனநாயகத்தினை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை எண்ணி நான் சந்தோஷமடைகிறேன். பலரும் இந்தத் தேர்தலை நடத்தக்கூடாதென எனக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

ஆனாலும் நான் வடமாகாண சபைத்  தேர்தலை நடத்தவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன். எனக்குத் தெரிந்த அளவில் வடமாகாண சபை முதலமைச்சர் இனவாதியல்ல. ஆனால் அவர் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்து வருகிறார். இந்த அரசாங்கமும் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்களுக்கு செய்ததொன்றும் கிடையாது. தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்திருப்பார்களா?, வடக்கிலுள்ள அகதி முகாம்களை நீக்கியிருப்பார்களா?, வீதியொன்றை அமைத்துக் கொடுத்திருப்பார்களா?, மீள்குடியேற்றங்களை முன்னெடுப்பார்களா?.

30 ஆண்டு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக செல்லமுடியாத மக்களுக்கு நாம் அந்த வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தோம். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடல் பாதுகாப்பு எல்லையினைக் கூட குறைத்துவிட்டது. இவ்வாறான மக்களின் பிரச்சினைகளுக்கு முதலமைச்சரால் தீர்வு காணமுடியாது.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாததாலும் அதனை மூடிமறைப்பதற்காகவும் இவர்கள் இனவாதத்தைத் தூண்டிவிட்டு பிரச்சனையை திசை திருப்புகின்றனர். ஆனால் எந்தவொரு நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் இனவாதியென நான் எண்ணவில்லை. 


இனவாதத்தை பரப்புவது சட்டத்தின் பிரகாரம் தவறில்லையாயின் அவர்களின் செயற்பாடு சரியானதாகும். ஆனால் அடுத்த தரப்பினரும் அதேபோல இனவாதத்தை பரப்புவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அந்த சம அளவில் வழங்கப்படாவிட்டால் அச்செயற்பாடு தவறாகும்.

எனது ஆட்சி காலப் பகுதிகளில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் இனவாத சொரூபத்தில் வந்திருந்தால் அதனை ஒருபோதும் நடத்த அனுமதித்திருக்க மாட்டேன். வடமாகாண முதலமைச்சர் அரசியல் காரணத்துக்காக ஆர்ப்பாட்டத்தை நடத்தினாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையே  முன்வைத்தனர். நெல்லை விற்க முடியாததால் விவசாயி இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டான்.

அதேபோல மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள், வேலையில்லா பட்டதாரிகள், அரச ஊழியர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கைப் பிரச்சினைக்காகவே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மக்களின் தனித்தனி கோரிக்கைகள் இனவாதமாக காண்பிக்கப்பட்டன. இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்த பிரச்சினைகள் அனைத்தும் தெற்கிலும் காணப்படுகின்றன. 


கேள்வி: புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு கிடைக்கும் தீர்வுத் திட்டத்தினை எதிர்த்தரப்பிலுள்ள சுதந்திரக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுகுறித்து உங்களது கருத்தென்ன? 


பதில்: புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு கிடைக்கும் தீர்வுதிட்டத்தினை நாம் எதிர்க்கவில்லை. காரணம் புதிய அரசியலமைப்பில் அவ்வாறு ஏதேனும் தீர்வுத் திட்டம் உள்ளடங்கியுள்ளதா என்பதை அரசாங்கம் இதுவரை தெளிவாகக் கூறவில்லை.

ஆனால் அண்மையில் லால் குமார தலைமையில் அரசாங்கம் வெளியிட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் நாட்டில் தற்சமயம் காணப்படும் இனங்களுக்கிடையிலான பிரச்சினையை மேலும் அதிகரிக்கும் என்பது தெளிவாக புலப்படுகிறது. தமிழ் மக்களிக்களுக்கான தீர்வுத் திட்டத்தை அரசியலமைப்பு திருத்தங்களுடாக செயற்படுத்த முடியுமென நான் நம்புகிறேன்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை திருத்துவதற்கு முன்பாக கொல்வின் ஆர்.டி.சில்வா அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான விவாதத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாகவே கொண்டு வந்தார். ஆனால் இந்த அரசாங்கம் அவசர அவசரமாக புதிய அரசியலமைப்பினை கொண்டுவர முயற்சிக்கின்றது.

புதிய அரசியலமைப்பு ஊடாக என்ன செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்பது எமக்குத் தெரியாது. ஆனால் புதிய அரசியலமைப்புக்கு பதிலாக திருத்தங்களுடன் தீர்வுகளைக் காண முடியுமென்பது எனது கருத்தாகும். நாட்டினை பிளவுபடுத்தி இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. 


கேள்வி: 2015 ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் தோற்றதற்கு பிரதான காரணம் என்னவென்ன  கருதுகிறீர்கள்?


பதில்: எதிர்த்தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரசாரமே அதற்கு காரணமென நான் கருதுகிறேன். பொய்ப் பிரசாரங்களினூடாக மக்களை ஏமாற்றி இனங்களின் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தினார்கள். 


கேள்வி: 2015ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காதமைக்கு என்ன காரணமென நீங்கள் கருதுகிறீர்கள்? 


பதில்: முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடத்தில் பொய்ப் பிரசாரத்தினை கொண்டு சென்று அவர்களை ஏமாற்றினார்கள். 


நீண்டகாலமாக திட்டமிட்டு காலத்துக்கு காலம் பல்வேறு பிரச்சனைகளை சமூகத்தின் மத்தியில் தூண்டிவிட்டனர். கிரீஸ்பேய் போன்றவற்றை உருவாக்கி மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தினர். தற்போது அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன், மக்கள் அதனை புரிந்துகொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் எமது அரசாங்கத்தை வீழ்த்திய செயற்பாட்டினை வீரச்செயலாக கருதி புத்தகங்கள் கொடுத்து உரிமம் கோரி வருகின்றனர்.


தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் எழுதுவதற்கும் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கான அதிகாரத்தினை யார் பெற்றுக்கொடுத்தார்கள்? எமது ஆட்சியிலேயே அதனை நாம் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். அவற்றை அம்மக்கள் மறந்துவிட்டனர். அத்துடன் நாம் தமிழ் மக்களுடன் போர் செய்யவில்லை. ஆனால் அந்த தவறான எண்ணப்பாட்டையே எதிர்தரப்பினர் தேர்தலின் போது மக்களுக்குத் தெரிவித்தனர். 


கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் தோல்வியடைந்ததற்கு பின்னணியில் இந்தியா செயற்பட்டதென்ற தகவல் உண்மையானதா? 


பதில்: அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. இவ்விடயத்தில் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.

TOTAL VIEWS : 1644
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ijz6c
  PLEASE ENTER CAPTA VALUE.