தினக்குரலின் 20 வருடங்கள்
2017-04-06 11:28:59 | General

தமிழினம் அரசியல், பொருளாதார ரீதியாக மட்டுமன்றி தம் இருப்பு தொடர்பிலும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்த நேரத்தில், காலத்தின் கட்டாயமாக தமிழினத்தின் எழுச்சிக் குரலாக நாடு முழுவதும் உரிமை முழக்கமிடத் தொடங்கிய தினக்குரல் இன்று 06.04.2017 இல் தனது 20 ஆவது அகவையை பூர்த்தி செய்வதை சாதாரண ஒரு நிகழ்வாக எடைபோட்டுவிட முடியாது.


20 வருட நிறைவென நாம் சொற்களில் மிக இலகுவாக குறிப்பிட்டுவிட்டாலும் இந்த 20 வருட காலத்தில் தன் இனத்துக்காக, அந்த இனத்தின் உரிமைக்காக மட்டுமன்றி சகோதர முஸ்லிம், மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் விடிவிற்காகவும் தினக்குரல் எதிர்கொண்ட சவால்கள், கொடுத்த விலைகள், அனுபவித்த வேதனைகளை நாம் எழுத்துகளில் வடித்துவிட முடியாது.


தினக்குரல் போரிலே பிறந்து போரிலே வளர்ந்ததொரு பத்திரிகையென்பதனால் இப் பத்திரிகைக்காக தம்மை அர்ப்பணித்தவர்களும் ஓர்மம் மிக்கவர்களாகவும் எதற்கும் வளைந்து கொடுக்காதவர்களாகவும் விலைபோகாதவர்களாகவும் தன்மானம் மிக்கவர்களாகவும் இருந்ததாலேயே தினக்குரலுக்கு எதிரான தடைகள், சதிகள், சவால்கள், அச்சுறுத்தல்களையெல்லாம் தகர்த்தெறிந்து தற்போது 20 ஆவது வருட நிறைவை கொண்டாடக் கூடியதாகவுள்ளது.


தினக்குரல் நிறுவுனரான எஸ்.பி.சாமி அவர்கள் இலாபத்தை நோக்காகக் கொண்ட ஒரு தொழிலதிபராக இருந்தபோதிலும் அவரது அடிமனதில் நீறுபூத்த நெருப்பாக இருந்த இனப்பற்றும் சமூக அக்கறையும் அடக்குமுறைகளுக்கு எதிரான உணர்வுமே தினக்குரலை பிரசவிக்க காரணமாயிருந்தன. இதுதொடர்பில் எஸ்.பி. சாமி அவர்கள் குறிப்பிடுகையில்;


உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்த ஒரு காலகட்டத்தில் தினக்குரலை ஆரம்பித்த போது அதை வளர்த்தெடுப்பதில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை நான் அறியாமல் இருக்கவில்லை. ஆனால், எமது மக்களின் அவலங்களை வெளிக்கொண்டு வருவதற்காக துணிவுடன் போராட வேண்டிய கடமையை உணர்ந்த நிலையில், விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இப் பத்திரிகையை ஆரம்பித்தேன்.


பத்திரிகைத் துறையில் சகல பிரிவுகளிலும் அனுபவம் நிறைந்த பணியாளர்கள் குழுவொன்று எனது முயற்சிக்கு துணைவரத் தயாராக இருந்ததால், எனது நம்பிக்கை வலுப்பெற்றதுடன், முதுபெரும் பத்திரிகையாளர்களான அமரர் பொன்.இராஜகோபால், ஆ.சிவனேசச்செல்வன் போன்றவர்களின் வழிகாட்டலுடன், குறுகியதொரு காலகட்டத்தில் தினக்குரலை தமிழ் மக்களின் குரலாக மாற்ற முடிந்தது என்கிறார்.


எஸ்.பி.சாமி அவர்கள் குறிப்பிடுவது போல் அந்நேரத்தில் தினக்குரல் பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு துணிச்சலான குழுவொன்று தன்னை அர்ப்பணிக்க முன்வந்திருந்தமையே தினக்குரலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதனையே தினக்குரலின் அப்போதைய தலைவரான அமரர் எம். செல்லத்துரையும் "தினக்குரல் ஆரம்பிக்கப்பட்ட போது இலங்கையின் வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒரு பத்திரிகையை நாம் ஆரம்பிக்கின்றோம் என்ற பெருமை மனதில் நிறைந்திருந்த போதும் ஒருவித தயக்கமும் எம்மிடம் இருந்தது என்பது உண்மை.

தமிழ் சமூகம் இடப்பெயர்வுகளாலும் பொருளாதாரத் தடை மற்றும் இராணுவக் கெடுபிடிகளாலும் அல்லலுற்றுக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் மற்றொரு தமிழ் நாளிதழுக்கு தமிழ் மக்களிடத்தில் எந்தளவுக்கு இடம் கிடைக்குமென்ற அச்சம் எம்மிடம் இருந்தது. அதேபோல் வர்த்தக ரீதியாக இது வெற்றிபெறுமா என்ற சந்தேகமும் இருந்தது. இவற்றுக்கு மத்தியில் தினக்குரல் ஆரம்பிக்கப்படுவது ஒரு சமூகத்தின் கட்டாயம் என்பதில் தினக்குரலின் நிறுவுனர் உறுதியாக நின்றார்.

தமிழ் மக்கள் கடுமையான துன்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுடைய உணர்வுகளையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு பத்திரிகையின் வருகை அவசியமென்பதில் அவர் தெளிவாக இருந்தார். அதன் விளைவாகவே தினக்குரல் இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.


1997 ஏப்ரல் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதிப்புடனேயே தினக்குரல் தனது பயணத்தை ஆரம்பித்தது. அன்றைய ஆசிரியர் தலையங்கம் "ஆயிரம் மலர்கள் மலரட்டும்‘ என்ற மகுடத்துடன் வெளியாகியிருந்தது. தினக்குரலின் ஸ்தாபக ஆசிரியரான பொன் .இராஜகோபால் அவர்களே ஞாயிறு தினக்குரலை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.

அவருக்கு உதவியாக ஆ.சிவனேசச்செல்வனும் துடிப்பும் துணிவும் மிக்க செய்தி ஆசிரியராக வீ.தனபாலசிங்கமும் அவருக்கு பக்கபலமாக கே.ஆர்.பி. ஹரன், ஆர். பாரதி, நிலாம், பாண்டியன், சீவகன், எம்.தேவகௌரி, மீரா, ஜோன்சன், சிவகுருநாதன் போன்றவர்களும் அப்போது இருந்தனர். 


தன் வாழ்வின் பெரும்பகுதியை பத்திரிகை அலுவலகத்துடனேயே செலவழித்துக் கொண்டியங்கிய பொன்.இராஜகோபால் அவர்களை சரியாக கணிப்பிட தவறிய ஒரு காலகட்டம் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தினக்குரல் வடிவில் எழுதத் தொடங்கியது. பொன். இராஜகோபால் அவர்களே தினக்குரல் என்ற பெயரை தெரிவு செய்திருந்தார். தினக்குரலை ஆரம்பிக்க வேண்டுமென்பதில் அவர் காட்டிய அசாத்திய ஈடுபாடே சாமி அவர்களையும் அதன்பால் ஈர்த்தது.


பத்திரிகை தொடங்குவதென்பதை சாமி அவர்களும் பொன். இராஜகோபால் அவர்களும் இறுதி செய்துவிட்ட நிலையில், அதற்கான ஆளணி வளங்களை திரட்டும் பொறுப்பை பொன். இராஜகோபால் அவர்களே ஏற்றுக்கொண்டார். தற்போதைய சூழலைப் போல் அவர் எவரையும் பணத்திற்கு விலைபேசவில்லை. எமது சமூகத்திற்கு சிறந்ததொரு பத்திரிகையை வழங்கவேண்டும். விரும்பியவர்கள் என்னுடன் வாருங்கள் என்ற அழைப்பை மட்டுமே விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்றே சிறந்தவர்களும் துணிந்தவர்களும் தினக்குரலுக்காக தம்மை உரமாக்க முன்வந்தனர். அதன் பலனே தினக்குரல் இன்று ஒரு விருட்சமாக வீறுகொண்டு எழுந்து நிற்கின்றது.


தினக்குரலின் ஸ்தாபக ஆசிரியரான பொன். இராஜகோபால் தினக்குரலை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காலமாகிவிடவே அது தினக்குரலின் வளர்ச்சிக்கு பேரிடியாக அமைந்தது. எனினும் அவருக்கு அடுத்த நிலைகளில் எதற்கும் தயாராக இருந்தவர்களின் தம்மை மீறிய அர்ப்பணிப்பினால் தினக்குரல் எந்தவித தளம்பலும் இன்றி அதே தைரியத்துடனும் அதே கொள்கையுடனும் அதே இலக்குடனும் தொடர்ந்தும் வீறுநடை போட்டது.


பொன்.இராஜகோபாலின் இடத்திற்கு ஆ.சிவனேசச்செல்வனும் செய்தி ஆசிரியராக வீ.தனபாலசிங்கமும் பிரதி செய்தி ஆசிரியராக கே.ஆர்.பி. ஹரனும் ஞாயிறு தினக்குரலின் ஆசிரியராக ஆர்.பாரதி, பிரதி ஆசிரியராக எம்.தேவகௌரி ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


அப்போது முகாமைத்துவ பணிப்பாளராகவிருந்த தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி. சாமி அவர்களின் மகனான கணேசராஜாவின் அனைத்து ஊழியர்களுடனுமான நட்புறவுடனான நிர்வாகத்திறனும் ஆளணி முகாமையாளராகவிருந்த சற்குணநாதனின் கனிவுடன் கூடிய கண்டிப்பும் நிர்வாக அதிகாரியாகவிருந்த சிறிசேன குமாரகேயின் வழிகாட்டல்களும் தினக்குரலை சிறந்ததொரு கட்டமைப்புடன் வைத்திருந்த அதேவேளை, விளம்பர முகாமையாளராகவிருந்த சுதாகரன், அவருக்கு உறுதுணையாகவிருந்த இரத்தினவேலோன், விநியோக முகாமையாளராகவிருந்த சற்குணம், திலக் பெரேரா ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சியினால் தினக்குரல் மிக சிற்×ழியர்கள் கூட அர்ப்பணிப்புமிக்க சேவையை வழங்கினர்.

2004 ஆம் ஆண்டு ஆ.சிவனேசச்செல்வன் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வுபெற, அப்பதவியை இடதுசாரி பாரம்பரியத்திலிருந்து வந்தவரான வீ.தனபாலசிங்கம் ஏற்றுக்கொள்ள தினக்குரல் புதியதொரு உத்வேகத்துடனும் பன்முகத்தன்மை கொண்ட பார்வையுடனும் புதியதொரு தடத்தில் பயணிக்கத் தொடங்கியதுடன், தமிழ் பேசும் சமூகத்திடம் அசைக்க முடியாத இடத்தையும் பெற்றுக் கொண்டது.

அதன் தொடர்ச்சியாக, தனபாலசிங்கம் தலைமை ஆசிரியராகவும் கே.ஆர்.பி. ஹரன் பிரதம ஆசிரியராகவும் ரி.சிவகணேசன் செய்தி ஆசிரியராகவும் பதவி நிலைகளை பொறுப்பேற்று தினக்குரலின் வளர்ச்சியை வேகப்படுத்தினர். அதேவேளை, ஞாயிறு தினக்குரலும் பிரதம ஆசிரியர் ஆர்.பாரதி தலைமையில் தனக்கேயுரிய பாதையில் பயணித்தது.


தினக்குரலை பொறுத்தவரை ஆரம்பம் முதல் இன்றுவரை போதிய ஆளணி வளமோ, ஏனைய வசதிவாய்ப்புகளோ மிகவும் குறைவு. எனினும் ஒவ்வொரு ஊழியர்களும் இவற்றுக்கு மேலாக ‘தினக்குரல்‘ மீது வைத்திருந்த பற்றுறுதியே ஏனைய ஊடகங்களுக்கு நிகராக தினக்குரலின் தரத்தையும் உயர்த்தியது. குறிப்பாக ஊடகத்துறையில் மிகக் குறைந்த வேதனத்தைப் பெறும் ஆசிரிய பீடத்தினராக தினக்குரல் ஆசிரிய பீடத்தினரே இருப்பர் என்பது எமது கணிப்பு.


அவ்வாறான நிலையில் கூட ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ‘தினக்குரல்‘ என்ற பெயருக்காகவும் ஆசிரிய பீடத்தில் வழங்கப்படும் சுதந்திரமான செயற்பாட்டுக்காகவும் தமக்கு வந்த எத்தனையோ வசதி வாய்ப்புகளையும் உதறித் தள்ளிவிட்டு பலனை எதிர்பார்க்காது கடமையை மட்டும் செய்துவருகின்றனர். குறிப்பாக ஆசிரிய பீடத்தில் உள்ள ஒவ்வொருவரும் 4 பேருக்கு சமம் என்பதை சந்தேகமின்றிக் கூறமுடியும்.


ஆசிரிய பீடத்தினர் சுதந்திரமாக செயற்படுவதற்கு தலைமை ஆசிரியர் வீ.தனபாலசிங்கமும் பிரதம ஆசிரியர் கே.ஆர்.பி. ஹரனுமே கால்கோள் இட்டவர்கள். இளம் ஊடகவியலாளர்கள், தினக்குரலுடன் இணைந்து சிறிது காலத்தை கொண்ட ஊடகவியலாளர்களிடம் கூட பெரும் பொறுப்புகளை ஒப்படைத்து அதில் அவர்களை சிறப்பாக செயற்பட ஒத்துழைப்பதற்கு இவர்கள் இருவரும் ஒருபோதும் பின்நிற்பதில்லை.


இதேபோன்று செய்தி ஆசிரியர் சிவகணேசனின் ஆசிரிய பீடத்தினருடனான அணுகுமுறை போன்றதொன்றை எந்தவொரு ஊடக நிறுவனத்திலும் காணமுடியாது என்பதை அடித்துக்கூற முடியும். நட்பு, நகைச்சுவை, சக ஊழியர்களுடன் தன்னையும் ஒருவராக்கும் எளிமை, சிரித்துக் கொண்டே வேலைவாங்கும் திறமை என செயற்படும் செய்தி ஆசிரியருக்காகவே பலர் தமது கஷ்டத்தையும் மறந்து தமக்குரிய பணிகளுக்கும் மேலாக தமது அர்ப்பணிப்பை வழங்குகின்றனர்.


தினக்குரலே இலங்கை இதழியல் துறை வரலாற்றில் முதலாவது மாகாணப் பதிப்பாக ‘யாழ். தினக்குரல்‘ என்ற சகோதரப் பத்திரிகையையும் வெளியிட்டது. தினக்குரலின் சமூக அக்கறைக்கும் இன உரிமைக்குமான போராட்டத்திற்கு தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பேராதரவு கிடைத்தது. இதுவே தினக்குரலின் வெற்றிக்கு மூலாதாரமாக அமைந்தது. இதன் விளைபயனாக கடந்த 20 வருட காலத்தில் மட்டும் 45 க்கும் மேற்பட்ட ஊடக விருதுகளை வென்றெடுத்தது. இதில் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சிறந்த தமிழ்ப் பத்திரிகையெனவும் தினக்குரல் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.


தினக்குரலின் இந்த வெற்றிக்காக உழைத்த, தம்மை அர்ப்பணித்த பலர் இன்று எம்முடன் இல்லை.சிலர் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டனர் (இதில் தலைமை ஒப்புநோக்குநர் சோதிலிங்கம், பிரபல கார்ட்டூனிஸ்ட் இராமச்சந்திரன் (சாணக்கியன்), ஊடக ஆலோசகர் டேவிட் ராஜ், சுந்தரலிங்கம், ஊடகவியலாளர்கள் மகேந்திரராசா (ரவிவர்மன்), எம்.ஏ.ஸி. முஹம்மத், ரூபன், ஜெயசுந்தர், கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்). இன்னும் சிலர் தமது துணிச்சலான பணி காரணமாக எதிர்கொண்ட அச்சுறுத்தல்களால் நாட்டைவிட்டே சென்றுவிட்டார்கள்.

இன்னும் சிலரோ பொருளாதார நிலைமை கருதி வேறு ஊடகங்களுக்கும் வேறு நிறுவனங்களுக்கும் சென்றுவிட்டார்கள். ஆனால், புதிதாக வருபவர்களைக் கூட புடம்போடுவதில் தினக்குரலுக்கு நிகர் எதுவுமில்லையென்பதனால், புதிதாக வந்தவர்களும் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு என்பவற்றுக்கு தம்மை தயார்ப்படுத்திவிட்டனர். இன்று வேறு ஊடகங்களில் உயர்நிலைப் பதவிகளில் உள்ள பலர்கூட தினக்குரலில் புடம்போடப்பட்டவர்கள் என்பதைக் கூறுவதில் எமக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.


தினக்குரலைப் பொறுத்தவரை ஆசிரியர் பீடம் மட்டுமன்றி சகல பிரிவுகளும் அதிலுள்ளவர்களும் காட்டிய அதீத ஈடுபாடு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி காரணமாகவே தினக்குரலால் இலங்கை இதழியல் துறை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைக்க முடிந்துள்ளது.


இன்று ஊடகவெளியில் ஊடகசமர் பெருமெடுப்பில் இடம்பெற்றாலும் அதில் தினக்குரலை தோற்கடிக்க முடியாமைக்கு ஆரம்பத்தில் போடப்பட்ட அசைக்க முடியாத அர்ப்பணிப்பு என்ற அத்திபாரமே காரணமாகவுள்ளது. 
அதுமட்டுமன்றி தினக்குரலை பொறுத்தவரை ஆசிரிய பீடத்தின் செயற்பாடுகளில் முகாமைத்துவம் எந்தவொரு கட்டத்திலும் தலையீடு செய்ததில்லை. அதுவே ஆசிரிய பீடத்தினர் பொறுப்பாகவும் சரியாகவும் செயற்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இதனைத்தான் அப்போது பிரதம ஆசிரியராகவிருந்த வீ.தனபாலசிங்கம் பின்வருமாறு கூறுகின்றார்.


நடு நிலைமை என்ற நாடகமேடையில் ஊடகங்கள் ஆட வேண்டுமென்பதே பாரம்பரியமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும். பக்கச்சார்பின்மை என்பது ஒரு முட்டாளின் அறியாமை அல்லது ஒரு கபட வேடதாரியின் நயவஞ்சகத்தன்மை என்று ஒரு கூற்று இருக்கின்றது. இக்கூற்றை எமது வாசகர்களில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்கின்றார்களோ எமக்குத் தெரியாது.

எமக்கு ஒரு ‘பக்கம்‘ இருக்கவே செய்கின்றது. அது நியாயத்தின் பக்கம். ஆம் நாம் நியாயத்துக்கு பக்கச் சார்பானவர்களே. எம்முடன் இருப்பவர்கள் மத்தியிலும் கூட இக்கருத்துக்கு மாறுதல் உண்டு என்பதே எமது பக்கச்சார்பின் நியாயத்துக்கு சான்று. அதனால் எம்மிடம் நியாயத்தை வேண்டுமானால் எதிர்பாருங்கள். பக்கச் சார்பின்மையை அல்ல.

தினக்குரலின் நியாயத்தின் பக்கம் என்ற கொள்கைக்கு ‘யுத்தம்‘ பெரும் சவாலாகவே இருந்தது. யுத்தம் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில் பல ஊடகங்களும் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த போதும் தினக்குரல் மட்டும் அடங்காது உண்மைகளை உள்ளபடியே வெளியிட்டது. இதனால் அக்காலத்தில் ‘தணிக்கை‘ என்று பேரினவாதத்தின் உண்மையை மறைக்கும் ஆயுதத்திற்கும் தினக்குரலுக்குமிடையே கடும் மோதலே ஏற்பட்டது. இதன் விளைவாக தினக்குரல் பெரும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. 


யுத்த காலத்தில் செய்திகளை வெளியிட வேண்டுமானால் அச்செய்திகள் தயாரிக்கப்பட்ட பின்னர் அரசினால் நியமிக்கப்பட்டிருந்த தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டும். அப்படி தினக்குரலினால் அனுப்பப்படும் பல செய்திகள் அதனை எழுதியவரின் பெயரைத் தவிர மிகுதி அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டிருக்கும். அதனை அப்படியே பிரசுரித்து  இதுதான் நிலைமை என்பதை தினக்குரல் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் 4 ஆம் மாடி விசாரணைக்கு கூட செல்லவேண்டி ஏற்பட்டது.


1997 ஆம் ஆண்டு தனது பயணத்தை போர்க்காலத்துடன் ஆரம்பித்த தினக்குரல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வரும் வரை தான் வரித்த கொள்கையிலிருந்தும் சற்றும் விலகாமல் தன் கடமையை செய்தது. வன்னிக்குள் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற துன்பியல்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்திருந்தது. 2009 வரை போருடன் பயணித்த தினக்குரல் தற்போது தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக தன் பயணத்தை அரசியல் தடத்திற்கு மாற்றியுள்ளது.


தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளரான தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி. சாமி அவர்களின் மகனான டாக்டர் கேசவராஜாவும் தந்தையைப் போன்றே ஆசிரிய பீடத்தினருடன் சிறந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதுடன், அவரும் ஒரு இளைஞராகவே இருப்பதனால் தினக்குரலும் 20 வயதுக்குரிய இளைஞனின் மிடுக்குடனும் துணிவுடனும் தன் இலக்கை நோக்கிய பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது.


தினக்குரலின் முதல் இதழில் வெளிவந்த ‘ஆயிரம் மலர்கள் மலரட்டும்‘ என்னும் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டதைப் போல் எந்த எதிர்ப்புகள், சவால்கள் வந்தாலும் அனைத்தையும் ஏறிமிதித்துக் கொண்டே தினக்குரல் தன் பயணத்தை தொடரும். ஆயிரம் மலர்கள் அல்ல பல்லாயிரம் மலர்கள் மலரும் என்பதை இந்த 20 ஆவது வருட நிறைவில் உறுதியுடன் கூறுகின்றோம்.

TOTAL VIEWS : 1075
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
2msqf
  PLEASE ENTER CAPTA VALUE.