காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து உண்மையை கண்டறிவதற்கான பொறிமுறை அவசியம்
2017-11-04 11:39:39 | General

 

நம்மூரில் சிலர் தங்களால் வெளியூரில் செய்யமுடியாத வேலையொன்றை  அதை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இன்னொருவரிடம் சொல்லும்போது, போய்வரும் போக்குவரத்துச் செலவைத் தருகிறேன்.

சாப்பாட்டுச் செலவையும் சேர்த்துத் தருகிறேன். மேலதிகமாக கைச்செலவுக்கும் பணந்தருகிறேன். இந்த வேலையை எனக்காக முடித்துத் தாருங்கள் அல்லது செய்து தருவீர்களா? எனக் கேட்பதையும் கூறிக் கொள்வதையும் இன்றும் கூட சில பிரதேசங்களில் காண்கிறோம்.


அதேபோலத்தான் இந்நாட்டின் அதியுட்ச அதிகாரத்திலிருக்கும் ஜனாதிபதி (நிறைவேற்று அதிகாரம்) அண்மையில் வடபுலத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் அப்பிரதேசத்தில் ஏற்பாடாகியிருந்த பல்வேறான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

அந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் காணாமல் போன உறவுகளினால் நடத்தப்பட்டிருந்த போராட்டக் களத்திற்கு சென்று காணாமல்போன உறவுகளுடனும் சினேபூர்வமாக உரையாடியிருந்தார்.


அப்போது உறவினர்களின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்த சகல கருத்துகளையும் செவிமடுத்திருந்த ஜனாதிபதி கூடிய விரைவில் இதற்கான முடிவுகளை எடுப்போமெனவும் தெரிவித்திருந்தார். அவ்வேளையில் காணாமல்போன உறவுகளினால் எங்கள் பிள்ளைகள் இரகசியமுகாமொன்றிலேயே தடுத்து சிறைவைக்கப்பட்டிருப்பதாகவும் நாம் அறிகின்றோம்.

இறுதி யுத்தம் முடிவுற்று இத்தனை வருடங்களாகியும் எங்கள் பிள்ளைகள் எங்களுடன் இல்லையெனும் போது... எங்களுடன் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்த எங்கள் பிள்ளைகளின் கவலைகள் மனதைப் பிசைகிறது.


எனவே எங்கள் பிள்ளைகளை எப்படியாவது நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டுமென மன்றாடிக் கேட்டிருந்தனர். அவற்றையெல்லாம் செவிமடுத்திருந்த ஜனாதிபதி, நான் உங்களுக்கு வாகனம் தருகிறேன். உங்களுக்கான முழுமையான பொலிஸ் பாதுகாப்புத் தருவதற்கு உத்தரவாதமளிக்கிறேன். உங்களுடைய பிள்ளைகள் எந்த இரகசிய தடுப்பு முகாமில் இருக்கின்றார்களென்பதை நீங்களே கண்டு பிடியுங்கள். அதன் பின்பு அவர்களை விடுதலை செய்வதற்கு நான் ஆவன செய்கிறேனெவும் கூறியிருந்தார்.


இக்கருத்தைப் பார்க்கும் போது எவ்வளவு சிறுபிள்ளைத் தனமானது என்பதை சிந்திக்க வேண்டியிருக்கிறது.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள்? எத்தகைய நிலையில் உள்ளார்கள்? அவர்கள் உயிருடந்தானா இன்றும் இருக்கிறார்கள்? எங்கு? எந்த முகாமில் (இரகசிய) தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்ற விடயங்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் உண்மைகளை கண்டறிவதற்கான ஒரு பொறிமுறையை எவ்வாறு? உருவாக்குவதென்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.


இத்தகைய பணியை காணாமல்போன உறவுகளைக் கண்டறியும் அலுவலகத்தினாலும்  அவ்வலுவலகத்தில் கடமைபுரியும் சுயாதீன அதிகாரிகளின் செயற்பாட்டினாலும் சில தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் ஜனாதிபதியின் கூற்றுப்படி நோக்கினால் கூட இந்நாட்டில் இருக்கக் கூடிய சகல படைத்துறையின் பிரதான தளங்கள் தொடக்கம் சகல இராணுவ மையங்கள் தொடர்பான உட்கட்டுமான சகல இரகசியங்களும்  தகவல்களும் இராணுவத் தளபதியூடாக அரச தலைவர் இலகுவாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அது தொடர்பாக இராணுவத் தளபதி மற்றும் உயர்மட்ட இராணுவப் பிரதானிகளுடன் விரிவாகப் பேசி சகல விடயங்களையும் கண்டறிவதற்கான சகல அதிகாரமும் அவரிடமே காணப்படுகிறது.

அவ்வாறான விடயங்களெதனையும் கவனத்திற் கொள்ளாமல் தான் அவ்விடயத்திலிருந்து (காணாமல் போனவர்கள்) தப்பித்துக் கொள்வதற்காக இப்படியானதொரு கருத்தை அரசுத்தலைவர் அந்த அப்பாவிகளான காணாமல் போன உறவுகளிடம் சாதாரணமாகக் கூறியிருக்கிறார் அன்றைய சந்திப்பில்.
இந்தக் கருத்தின் ஆள  அகலங்கள் என்னவென்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சில சிங்களப் பத்திரிகைகள் இந்தச் சந்திப்பையும் வடபுலத்திற்கான ஜனாதிபதியின் விஜயத்தையும் ஊதிப்பெருப்பித்து தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தமையையும் தமிழ் மக்கள் நோக்க வேண்டும்.


இறுதிக்கட்டப் பேரவலம் நிறைவுற்று எட்டுவருடங்கள் கழிந்திருந்தும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான எந்தவித முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்திலும் அதற்கு முன்பும் கைது செய்யப்பட்டவர்களுக்கும், படைத்தரப்பிடம் சரணடைந்தவர்கள், வெவ்வேறான நிலைமைகளில் உறவினர்களால் நேரடியாகக் கையளிக்கப்பட்டவர்களுக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய அவர்களின் உறவுகள் பெருத்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.


இவர்களுள் குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளே ஏழு அப்பாவித் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் வரவைக் காணாமல் ஏக்கத்தில் மன அழுத்தம் காரணமாகவும், உளரீதியாக நோய்வாய்ப்பட்டும் தங்களது உயிரை மாய்த்திருக்கின்றார்களென்ற செய்தியும் இன்றும் பலமடங்கு வேதனையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
யுத்தத்திற்குப் பின்னரான இத்தகைய நிலைமைகளையெல்லாம் நோக்கும்போது இன்றுவரை அரசுடன் குதூகலித்துக் கொண்டு "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' எனும் பெயர்ப் பலகையையும் பயன்படுத்திக் கொண்டு "தமிழரசுக் கட்சி' செய்து வருகின்ற அத்தனை அரசைக் காப்பாற்றுவதற்கான சகல முட்டுக் கொடுப்புகளுக்கும் எதிர்காலத்தில் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் உருவாகுமென்பதையும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உள்ளக் குமுறல்களாக வடக்கு  கிழக்கில் வெளிப்பட்டு நிற்கின்றன.


இவ்வாறான சூழலில் யுத்த நிறைவுக்கு முன்னரும்  பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என இன்று பட்டியலிடப்படும் எவரும்  உயிருடன் இல்லையென்பதே எழுதக் கூடாத  எழுத முடியாத வரிகளாக அடையாளப்படுத்த முடிகிறது. யுத்தம் முடிந்த கையோடு குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளேயே அவர்கள் அனைவரினதும் "உயிர்வாழ்தல்' தொடர்பான நிலைமை கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டதென்பதே உண்மையெனவும் இன்று நம்பப்படுகிறது.


அவர்கள் எவருமே இன்று உயிருடன் இல்லையென்றால் அத்தக்கவலை ஏதோ ஒருவிதத்தில் தங்களுடைய உறவுகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் அவர்களுக்கு உண்மை நிலைமை நிலையினைச் சொல்லியாக வேண்டும். இன்னுறும் எவ்வளவு காலத்திற்கு உண்மைகளை மறைப்பதென்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

அவர்கள் எவராவது (சிறைகளில் இன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 132 பேரைத் தவிர) இன்று எங்காவது தடுத்து வைக்கப்பட்டாலோ  சிறைப்படுத்தப்பட்டிருந்தாலோ அவர்கள் உடன் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அல்லது அவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லையென்றால் அந்தக் கஷ்டமான செய்தியையாவது அவர்களின் உறவுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.


அதேவேளை, நம்பிக்கையுடன் வெயில், மழை, குளிர், நுளம்புத் தொல்லை போன்றவற்றையெல்லாம் தள்ளாத வயதிலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு தமது உறவுகளை எப்படியும் காணலாமென எதிர்பார்க்கும் அவர்களுக்கு இந்தச் செய்தி அவர்களை நிலைகுலைய வைக்கலாம். அல்லது அவர்களைத் தூக்கிவாரிப் போடலாம்.


ஆனாலும் புதிய அரசாங்கம் இவ்விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டிருக்கிறது. இன்றைய மைத்திரி  ரணில் கூட்டு அரசாங்கம் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் மேற்சொன்ன முடிவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தால் இறுதிக்கட்ட யுத்தத்தில் போர்க்குற்றங்கள்  மனித உரிமை மீறல்கள் உண்மையில் நடைபெற்றுள்ள என்பதைத் தாங்களே ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடுமென்பதாலோ என்னவோ இனியும் காலத்தை வீண்விரயம் செய்ய முற்படுகிறது.


அதேநேரம், முல்லைத்தீவு  கோதாபாய கடற்படை முகாமின் எல்லைக்குட்பட்ட பிரதேசமானது. இன்று பல சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கும் இந்த இடத்திற்கும் ஏதும் தொடர்பு நிலைகள் உள்ளதா? என்ற சந்தேகங்களும் தற்போது வலுப்பெற்று வருகின்றன. இதுதொடர்பில்  நாம் தமிழர் கட்சியின் தலைவர், இயக்குனர் சீமான் இவ்விவகாரம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.


எது எப்படியிருப்பினும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இனிமேல் நிச்சயம் எழுந்து வரப்போவதில்லையென்பதே இன்றிருக்கக்கூடிய களநிலைமை. அதற்கேற்றால் போல் அரசும் தமது செயற்பாடுகளைத் துரிதப்படுத்துதல் அவசியமாகின்றது.
இழப்பைச் சந்தித்த உறவுகளுக்கான நியாயமான இழப்பீட்டுத் தொகை மற்றும் இதர உதவிகளையும் வழங்குவதற்கு அரசு முனைவதுடன், அவர்களின் பொருளாதார மேம்பாடுகள் முதல் அவர்களுடைய எதிர்கால வாழ்வு இனிமேலாவது செழுமையாக மாற்றம் பெறுவதற்கான சகல முயற்சிகளையும்  முறையான திட்டங்களையும் தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.


தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இன்றைய அரசாங்கமல்ல. இலங்கையில் எத்தகைய ஆதரவைப் பெற்ற அரசாங்கமெனினும் இழப்புகளை ஏற்படுத்தியிருக்கும். தரப்புகள் மீது எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லையென்பதுதான் தமிழர்களின் அனுபவங்களிலிருந்து வெளிப்பட்டு நிற்கின்ற உண்மையாகும்.

TOTAL VIEWS : 1906
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nl2rp
  PLEASE ENTER CAPTA VALUE.