மங்களவின் வரவு - செலவுத்திட்டமும் மகிந்தவின் சைக்கிள் அரசியலும்
2017-11-14 11:29:53 | General

தனிநபர் ஒருவருக்கு ஆண்டொன்று போனால் வயதொன்று போவது போன்று பதவியிலிருக்கும் அரசாங்கங்களுக்கு வருடமொன்று போனால் வரவு  செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு என்றாகிவிட்டது. ஒருவருக்கு வயது போனால் அவரது அளகுழப்பம் அவரவர் மட்டிலேயே.

ஆனால் வரவு  செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டால் அளகுழப்பம் அரசியல் வாதிகள், துறைசார்ந்தோர், குடிமக்கள் போன்றோருக்கே எனில் மிகையாகாது.


நல்லாட்சி அரசாங்கத்தின் இரு வரவு - செலவுத் திட்டங்களையும் சமர்ப்பித்து கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து சிறந்த நிதியமைச்சர் என்ற விருதையும் பெற்று படம் காட்டிய ரவி கருணாநாயக்க நிர்ப்பந்திக்கப்பட்டு பதவி விலகிக் கொண்ட நிலையில் அதே நிர்வாகத்தின் மூன்றாவது வரவு  செலவுத் திட்டத்தை தனது முதலாவது திட்டமாக மங்கள சமரவீர முன்வைத்தார்.


புதிய வேலைத்திட்டங்களையும் புதிய புதிய வரி விதிப்புகளையும் அறிமுகப்படுத்தி சர்வதேச கடனடைக்க பணம் திரட்டும் படலத்தில் தற்போதுள்ள பல சட்டங்களை திருத்தி அல்லது நீக்கம் செய்து முன்மொழிவுகளை அமுலாக்குவதற்கு நீலப் பசுமை பட்ஜெட்  தொழில் முயற்சி இலங்கை என்ற பெயரும் சூட்டிக் கொள்ளப்பட்டுள்ளது.

பழைமை வாய்ந்த சட்டங்கள் காரணமாக 1977 இல் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார முகாமை வலுவிழந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்ற பின்புலத்தில் 1869 ஆம் ஆண்டின் சுங்கக் கட்டளைச் சட்டம், 1912 ஆம் ஆண்டில் மதுவரி கட்டளைச் சட்டம், 1939 இல் கல்விக் கட்டளைச் சட்டம், 1972 ஆம் ஆண்டின் வாடகைச் சட்டம் 1958 ஆம் ஆண்டின் நெற்காணிகள் சட்டம், 1973 ஆம் ஆண்டின் விவசாயக் காணிகள் சட்டம் 1954 ஆம் ஆண்டின் கடை மற்றும் ஊழியர்கள் சட்டம் போன்றவை பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


முன்னைய நிதியமைச்சரின் பட்ஜெட் வாசிப்பில் காணப்பட்ட ஸ்மார்ட் தன்மையையும் விட கூடுதலாக மங்களவில் காண முடிந்தது. வடிவமைப்பாளர் தகைமையை இயல்பாகவே கொண்டுள்ள அவர் சிறந்த முறையில் வடிவமைத்துள்ளார்  என்று முன்னேற்பாடின்றி சிலரால் கூறப்பட்ட போதிலும் எதிரணியினர் வாய் திறக்க  ஆரம்பித்த போதில் தான் அதுகுழப்பம் என்ன என்பதை அறிய முடிகிறது.

ராசாவுக்கு வைத்த பால் என்றாலும் சிலர் குடித்துப் பார்க்கவே விரும்புவர். அதுபோன்று பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டால் அது தங்கமானது என்றாலும் உரசிப் பார்க்க எதிரணியினர் தயங்க மாட்டார்கள். ஆனால் அத்தகைய உரசிப் பார்க்கை நியாயமானதாக இருந்தால் அதனை சீர்தூக்கி பார்க்காமலும் இருக்கத் தேவையில்லை.


சூட்சுமமான சுற்றாடல் பாதுகாப்பா?


சுற்றாடலை பாதுகாத்தல் என்ற தலைப்பில் சூட்சுமமான முறையில் காபன் வரி எனும் நாமத்தோடு வரி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே அவ்வப்போதைய வரவு  செலவுத் திட்டங்களினூடாக வாகன அனுமதிப் பத்திரத்தை ஆண்டுக்கொருமுறை பெறுவதற்கான கட்டணம் மோட்டார் சைக்கிள்களுக்கு இதுவரையில் 700 ரூபாவும் மோட்டார்  கார்களுக்கான கட்டணம் 3000 ரூபா வரையிலும் என்றடிப்படையில் உயர்ந்திருக்கிறது. குறைந்த மட்டத்திலிருந்து வரவு  செலவுத் திட்ட முன் மொழிவுகளினூடாகவும் அதிகரிக்கப்பட்ட உள்ளடக்கம் இவற்றிலுண்டு.


தற்போதைய முன்மொழிவுகளின் படி மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் கார்கள், ஆட்டோக்கள் என வாகனங்களுக்கென பத்தாண்டுகளுக்கு மேல் பாவனையிலுள்ள வாகனங்கள், அதற்கும் குறைவான 5 வருடங்களுக்கு குறைந்த பாவனைக் காலத்தையுடைய வாகனங்கள் என சற்று வித்தியாசத்தில் நாளொன்றுக்கான வரி 17 சதம் முதல் 51 சதம் வரை மோட்டார் சைக்கிள்களுக்காகவும் இதுபோன்று இதர வாகனங்களான கார்கள், முச்சக்கர வண்டிகள், பஸ்கள் போன்றவற்றுக்கும் சதக்கணக்கில் அல்லது சில ரூபா வித்தியாசத்தில் சம்பந்தப்பட்ட காபன் வரி அறவிடப்படவுள்ளது.

குறிப்பிட்ட தொகைகள் ஆண்டுக்கான வாகன அனுமதிப் பத்திர விநியோகத்தின் போது சேர்த்துப் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காபன்  வரி விதிக்கப்படக்கூடிய வழிமுறைகள் தொடர்பிலான நுட்பமான, நுணுக்கமான  கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது திணறிய மங்கள சமரவீர தங்களது அடிப்படை நோக்கம் கடனடைக்க பணம் திரட்டுவதே என்று நேரடியாக பதிலளித்தார்.


உண்மையில் சரியான தொழில்நுட்பக் காரணிகளை விளக்கிக் கூற முடியாதளவுக்கு வரிவிதிப்பு மூலம் நிதி திரட்டும் மனப் பதிவும் மன அழுத்தமும் அரசில் குடிகொண்டுள்ளதை வரவு  செலவுத் திட்ட முன்மொழிவுகள்  சுட்டிக்காட்டுகின்றன. காலம், எல்லை நிர்ணயிக்கப்படாத காபன் வரி ஆண்டுக்கொருமுறை ஏனைய வரி விதிப்புகள் போன்று வரவு  செலவுத் திட்டம் மூலமாக அதிகரிக்கப்பட இடமுண்டு. வாகனங்களின் பாவனைக்கால அதிகரிப்பினைத் தொடர்ந்து படிப்படியாக வரியும் அதிகரித்துச் செல்ல இடமுண்டு. 


ஆயிரம் ரூபாவும் பியரும்


வங்கிகளில் கையாளப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாவுக்கும் 20 சதம் எனும் விசேட வரி என்பது ஒரு புதிய பணம் திரட்டும் யுக்தியாகும். இதன் மூலம் பெருந்தொகைப் பணத்தை வருமானமாகப் பெற  அரசு முயற்சிக்கின்றது.

இது தினசரியான 1000 ரூபா நகர்வுக்கானதா அல்லது நிலையான வைப்பு உள்ளிட்ட எத்தகைய ஆயிரம் ரூபாவுக்கானதாகவும் இருக்குமா என்பது தெளிவற்றுக் காணப்படுகிறது? குறித்த வரிவிதிப்பும் அறவீடும் வாடிக்கையாளர்களிடமிருந்தன்றி வங்கிகளிடமிருந்து மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறுகிறார்.

வங்கிகளும் வங்கி முகாமையாளர்களும் ஊழியர்களும் 1000 ரூபாவுக்கு 20 சத வீதம் தத்தமது சொந்தப் பணப் பையிலிருந்தா அரசுக்கு கொடுப்பது? எப்படியும் வாடிக்கையாளர்களின் கொடுக்கல் வாங்கள் கையாள்கையில் இருந்தே அறவிட்டு 1000 ரூபாவுக்கு 20 சதம் வீதம் அரசாங்கத்துக்கு கொடுக்க நேரிடும்.

இத்தகைய வரி அறவீடு மூன்று வருட காலத்துக்கே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்படுகின்ற போதிலும் அது நீண்டு செல்லாது என்பதை மாத்திரம் உத்தரவாதப்படுத்த முடியாது. 


இதேவேளை நிதியமைச்சர் மங்கள சமரவீர பியர் பானம் ஆரோக்கியமானது என்றும் அநேகமானவர் அதனை பருகுவதாகவும் சர்க்கரையின் அளவு அதில் குறைவு எனவும்  புதிய கோட்பாடு ஒன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

சீனி சேர்க்கும், சேர்ந்த அளவுக்கு ஏற்ப வரி விதிப்பை மேற்கொள்ள முனையும் பட்ஜெட் பியருக்கான வரியை நீக்கியுள்ளமையானது விநோதமானதாகவும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமலும் சமநிலைத் தன்மை பேணப்பட முடியாமலும் பண்ணக்கூடிய பானங்களில் சாராயம், விஸ்கி, பிரேண்டி, பியர் போன்ற பல இன்னோரன்ன மதுபான வகைகள் உள்ளடங்க முடியும்.

பொதுவாக போதையூட்டி, மஸ்து தன்மையை ஏற்படுத்தக்கூடிய பான வகைகள் நிச்சயமாக சீனியின் அளவு கூடுதலாக கொண்டதாகவே இருக்க முடியும். எனவே சீனியின் அளவை குறைத்தல், நீரழிவு  நோயை முகாமை செய்தல், அதற்கு மக்கள் பழக்கப்படுவதைத் தடுத்தல் என்ற குறிக்கோள் இருந்திருக்குமானால் திட்டவட்டமாக அதற்கு பியர் விதிவிலக்காக முடியாது எனலாம். இதேவேளை பியர் தொடர்பிலான வரிவிதிப்பின்மை ஜனாதிபதியின் அனுமதி பெறப்பட்ட நடவடிக்கையாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன. 


சைக்கிள் அரசியலா?


இதேவேளையில் நிதியமைச்சர் வரவு  செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகிக் கொண்டிருந்த போது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குழுவினர் சிலர் உந்துருளி அரசியல் செய்தனர். எரிபொருள் நெருக்கடியை காரணம் காட்டி எரிபொருள் நிரப்பப்பட்ட வாகனங்களை பின்னால் விட்டு உந்துருளிச் சவாரி செய்து ஊடகங்களுக்கும் படம் காட்டி அரசியல் நாடகம் நடித்தனர்.

குறைந்த பட்சம் எட்டாம் திகதிய பாராளுமன்ற அமர்வுக்கு உந்துருளிகளில் வந்திருந்தால் கூட மிகச் சொற்ப அளவுக்காவது பொது மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கும். பெற்றோல் நிரப்பிய கப்பல் இலங்கையை தரை தட்டி நெருக்கடி சுமாராக தீர்ந்து விட்டது என்று பொது மக்களும் வாகன ஓட்டுனர்களும் மூச்சுவிடத் தொடங்கி விட்ட நிலையில் தனையனும் தந்தையும் தலைமை தாங்கி சைக்கிள் சவாரி செய்தமை காலத்தைக் கூடக் கவரவில்லை என்பதே அனேகரது கணிப்பீடாகும்.

தங்களது வாகனங்களுக்கு பெற்றோல் இல்லை என்று இருந்திருந்தால் தத்தமது வாசஸ்தலங்களில் இருந்தல்லவா சைக்கிள்களில் உந்தியிருக்க வேண்டும். மீண்டும் திரும்பிச் செல்கையில் கூட அவ்வாறல்லவா பயணித்திருக்க வேண்டும். அதனைக் காண முடியவில்லையே!


குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சியா?


முதன்முதலாக இந்த நாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி அதிகாரத்திற்கு வரத் துடிப்பவர் போன்று மகிந்த ராஜபக்ஷ காண்பித்த புதினம் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முனைந்த கதையாகும்.

மூன்று தசாப்தங்களுக்கு மேல் இலங்கை அரசியலில் வாசம் செய்து கொண்டிருப்பவர், அமைச்சர் பதவிகளை வகித்தவர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர், பிரதமர் பதவி  வகித்தவர், இரு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வலுவான அரசாங்கம் ஒன்றுக்கு தலைமை தாங்கி நாட்டை ஆட்சி புரிந்தவர் இன்று மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சைக்கிள் அரசியல் பாராளுமன்ற வீதிகளில் மாத்திரம் செய்தமை அவரளவில் வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை.


மிகத் தெளிவான முறையில் மகாநாயக்க தேரர்களால் வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் கருத்திற் கொள்ளாமல் தங்களது சுபிட்சமான காலத்தில் கார் ரேஸ் ஓடிய புதல்வர் ராஜபக்ஷ போன்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உந்துருளி அரசியல் செய்திருந்தால் அது ஓரளவுக்கு எடுபட்டிருக்கும் என்றாலும் தந்தை ராஜபக்ஷ உந்தியமையும் பொலிஸாருடன் வாக்குவாதப் பட்டமையும் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.


பாதையில் தந்தையும் தனயனும்


உண்மையில் பாராளுமன்றத்தை நோக்கி சைக்கிள்களில் உந்தியவர்கள் அதிசொகுசு மிக்கவர்களே அன்றி உந்துருளிகளுக்கு உரியவர்கள் அல்ல. வரவு  செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை விடவும் கூடுதலான பிரபல்யத்தைப் பெற்றுக் கொள்ள அவர்கள் எண்ணியிருக்கலாம்.

ஆனால் அது அவர்களுக்கு கிட்டவில்லை. வரவு  செலவுத் திட்டம் தலையங்கங்களை தொட்டன. உந்துருளி ஜோக்கஸ் ஓரங்கண்டனர்.  ஒரு காலகட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில்  தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ஷ தோல்வி சவாரிக்கும் கூட ஹெலிகொப்டரை பயன்படுத்தியே அம்பாந்தோட்டை மெதமுலானைக்குச் சென்றார். இவர்கள் தற்போது தியவண்ணாவில் உந்துருளி அரசியல் சவாரி செய்துவிட்டனர்.

தினசரி அரசியலிலும் உந்துருளிக்கு கூடுதல் கவனம் செலுத்துவார்களாயின் அது சிறப்பானதாக இருக்கும். பெற்றோல் நெருக்கடியை காரணம் காட்டி தங்களது பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அவர்களுக்கு பின்னால் காலால் ஓடவிட்டு அரசியல்  சவாரி செய்தமை மாத்திரமன்றி சந்து பொந்துகள், வீதிகள், நகரங்கள் எங்கும் சைக்கிள் சவாரி செய்து மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிய முடியும்.

விரும்பினால் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கையில் கூட உந்துருளி பிரசார நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லலாம். அதனை விடுத்து ஒரு சில மீற்றர்களை மாத்திரம்  சைக்கிளிலில் பயணித்து பெற்றோலுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கும் தட்டுப்பாட்டுக்கும் எதிர்ப்பைக் காட்ட முடியாது. எவ்வாறாயினும் மைத்திரியும் ரணிலும் முன்னெடுக்கின்ற நல்லாட்சியை ஒரு பொல்லாத ஆட்சியாக நாட்டு மக்களுக்கு காண்பிக்கின்ற பாதையில் தந்தையும் தனயனும் சைக்கிள்களிலும் பயணித்திருக்கின்றார்கள். 


எது எவ்வாறாக இருந்த போதிலும் ஒவ்வொரு நாளும் ஒரு சில லீற்றர் பெற்றோலை வாங்கிக் கொள்வதற்காக மணித்தியாலயக் கணக்கில் கியூ வரிசையில் நிறுத்தி வைத்து பெற்றோல் ஆத்திரத்தை தணிக்கும் வகையில் நிலைமையும் சீரடைந்து 2018 ஆம் ஆண்டுக்கான வடிவமைப்பாளர் வரவு  செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் மூலம் இழந்த வாக்குகளை மீள வெல்லும் புதிய திட்டத்துக்கு முஸ்தீபும் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

2018 ஜனவரி முடிவு எல்லை நிர்ணய பிரச்சினையால் இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுபட்டு நீண்டகாலம் தாமதமடைந்த உள்ளூராட்சி தேர்தலை கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது. வரவு  செலவுத் திட்டத் திட்டத்துக்கு ஒரு நாள் முன்பதாக அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் சிலவற்றின் மீதான வரிக்குறைப்பும் மேற்கொள்ளப்பட்டமை தெரிந்ததே.


கட்டுரையாளர் சட்டத்தரணி சுயாதீன தேசிய முன்னணியின் தலைவர் ஒலி, ஒளிபரப்பாளர். 

TOTAL VIEWS : 691
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yuk4u
  PLEASE ENTER CAPTA VALUE.