எல்லை நிர்ணய நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் தாழ்ந்த மட்டத்திலேயே; கலாநிதி தவலிங்கம் கூறுகின்றார்
2017-12-11 13:39:17 | General

சமூகங்களை வேறுபடுத்தும் விதத்தில் சாதி, இன, மத அடிப்படையில் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முழுநாட்டிலும் பிளவுகளை மட்டுமே அது உறுதிப்படுத்துவதாக இருந்தது என்று எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் கலாநிதி கே. தவலிங்கம் தெரிவித்திருக்கின்றார். 

2017 இலக்கம் 17 மாகாண சபைகள் தேர்தல் (திருத்த) சட்டம் அண்மையில் இயற்றப்பட்டமை தொடர்பாக "சிலோன் ருடே' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் விவரித்திருக்கிறார். 

இனம் மற்றும் மதம் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை இது குறிப்பிடுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். எல்லைகளை வரையறைப் படுத்துதல் மற்றும் ஒவ்வொரு சமூகமும் எதிர்கொள்ளும் விவகாரங்கள் தொடர்பான நடைமுறை விடயங்களில் இணக்கத்தை ஏற்படுத்துவதில் பிரச்சினைகளுடனான அனுபவத்தை குழு கொண்டிருந்தது என்று அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

சில தருணங்களில் சிறுபான்மையினருக்கு வழங்குவதற்கு அங்கு ஆசனங்கள் இல்லாதிருந்தனவெனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் எல்லை நிர்ணயக் குழுவானது சமூகங்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதில் உறுதிப்பாட்டுடன் இருந்தது.

அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கால வரையறைக்குள் எல்லை மீள்நிர்ணயத்தை மேற்கொள்ளும்போது, சமூகங்களின் கவலைகளுக்கும் கரிசனைகளுக்கும் தீர்வு காண்பதில் குழு பற்றுறுதியுடன் இருந்தது என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். பேட்டி வருமாறு;

கேள்வி: தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட இலக்கு யாது?

பதில்: தொகை மதிப்பீட்டுடன் பொது மக்களின் கருத்துகளை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆசனங்களுக்காகப் பிரிக்க வேண்டியுள்ளது. 2017 இலக்கம் 17 மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலத்தில் வெளிப்படுத்தப்பட்ட விதத்தில் பிரிக்க வேண்டியிருந்தது.

கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக பத்திரிகைகளில் நாங்கள் விளம்பரப்படுத்தினோம். சுமார் 250 எழுத்து மூலக் கருத்துக்களை பொது மக்களிடமிருந்து நவம்பர் 2 காலக்கெடுவிற்கு முன்பாகப் பெற்றுக் கொண்டோம்.

அதன் பின்னர் நாங்கள் மாவட்டங்களுக்கு சென்றோம். அவர்களும் எழுத்து மூல கருத்துகளை சமர்ப்பித்திருந்தனர். அத்துடன் வாய்மூலமும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தனர். 2012 சனத்தொகை மதிப்பீட்டின் பிரகாரம் பொது மக்களின் கருத்துகளைப் பெற்று, எல்லைகளை வரையறைப்படுத்த ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தது.

ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆசனங்களாக பிரிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக கொழும்பை எடுத்துக்கொண்டால், மாகாண சபைகள் சட்டமூலத்தின் பிரகாரம் மொத்தம் 14 உறுப்பினர்கள் இருப்பார்கள். அந்த இலக்கத்தை தேர்தல் ஆணைக்குழு வழங்குகின்றது. அவர்களின் கடமை 4 மாவட்டங்களில் இந்த உறுப்பினர்களை பிரித்து வழங்குவதாகும்.

1987 மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 40 ஆயிரம் பேருக்கு ஒரு உறுப்பினர் இருக்க வேண்டுமென சட்டம் குறிப்பிடுகின்றது. மேல் மாகாணத்தில் 99 உறுப்பினர்கள் சனத்தொகை அடிப்படையில் உள்ளனர். பிரதேசத்தை தளமாகக் கொண்ட 3 உறுப்பினர்கள் உள்ளனர். அவற்றுடன் சேர்த்து மொத்தம் 102 உறுப்பினர்களாவர். இலக்கத்தை தேர்தல் ஆணைக்குழு எமக்கு வழங்குகிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு 40 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது. அந்த 40 உறுப்பினர்களில் 20 பேர் தேர்தல் தொகுதிகளிலிருந்தும், 20 பேர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் பிரகாரமும் தெரிவு செய்யப்படுவார்கள். வடபகுதிகளை எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்திற்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர்.

அவர்களில் 8 பேர் தொகுதிவாரியாகவும் ஏனைய 8 பேர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் பிரகாரமும் தெரிவு செய்யப்படுவார்கள். விகிதாசார உறுப்பினர்கள் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. தேர்தல் தொகுதி பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளோம். உதாரணமாக நாங்கள் பிரிக்க வேண்டியுள்ளது. கொழும்பு மாவட்டத்தை 20 தொகுதிகளாகப் பிரிக்க வேண்டியுள்ளது.

இதனைச் செய்வதற்கு நாங்கள் எல்லைகளை மீளக் குறிப்பிட வேண்டும். எமது அடிப்படை எல்லை வரையறை கிராம சேவையாளர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். நாங்கள் எங்கும் கிராம சேவையாளர் பிரிவுகளைப் பிரிக்கமாட்டோம். ஏனைய உள்ளூராட்சி அதிகார சபைகளை நீங்கள் பார்த்தால், ஒரு கிராம சேவை பிரிவானது 2 அல்லது 3 ஆக பிரிபட்டுள்ளது.

நாங்கள் அதனைச் செய்யமாட்டோம். பிரதேச செயலகங்கள் செயற்படுவதற்கு சிறப்பான முறையில் நாங்கள் வைத்திருக்க முயற்சிப்போம். எமக்கு வழங்கப்பட்ட ஆணை சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எவ்வாறு எல்லையை வரையறுக்க வேண்டும் என்பது தொடர்பாக சட்டமூலத்தில் வரையறைப்படுத்தியுள்ளனர்.

2017 இலக்கம் 17 மாகாண சபைகள் சட்ட மூலத்தின் (மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலத்தின்) பிரகாரம் எஸ் 3 முழுமையாக எல்லை மீள்நிர்ணயக் குழுவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு தொகுதியும் சமனான உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதை நாங்கள் பேண வேண்டியுள்ளது.

சராசரி ஒரு இலட்சமாக இருந்தால் அங்கு 90,000 வாக்காளர்களை நாங்கள் அண்ணளவாக ஏற்றுக்கொள்வோம். சமூகங்களின் இன, மதத்தை உள்ளீர்த்துக் கொள்வதற்கு 10% ஐ நாங்கள் கொண்டுள்ளோம். மனிதர்களின் செயற்பாடுகளை நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன் தொகுதிகளை வரையறைப்படுத்தும் போது இனம் மற்றும் அபிவிருத்தியையும் பார்க்க வேண்டியுள்ளது.

2012 சனத்தொகை மதிப்பீட்டின் பிரகாரம் எல்லை வரையறையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்தத் தருணத்தில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்வதற்கு அங்கு ஆசனங்கள் இருக்கவில்லை. 2017 இலக்கம் 17 மாகாண சபைகள் (திருத்தச்) சட்டமூலத்தின் இரு பந்திகள் மட்டுமே இன, மதம் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் எனக் குறிப்பிடுகின்றன. 

கேள்வி: சிறிய கட்சிகளை இது எவ்வாறு பாதிக்கும்?

பதில்: சிறிய கட்சிகள் பற்றி நான் கதைப்பது கடினமானதொன்றாகும். அதனைத் தீர்மானிப்பவர்கள் பொதுமக்களே. தொகுதிகளை, எல்லைகளை வரையறுப்பவர்கள் அல்ல. உதாரணமாக கொழும்பில் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், மனோகணேசன் மட்டுமே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

முன்னர் அவர்கள் பேரம்பேசும் பாணியைக் கொண்டிருந்தனர். அங்கு சிறிய கட்சிகள் ஆசனங்களுக்கான வலியுறுத்தல்களைக் கொண்டுள்ளன. இங்கு அது குறைவாக உள்ளது. இரு முறைமைகளிலும் நாங்கள் 50% ஐ கொண்டிருந்தாலும்கூட, விகிதாசார முறைமைக்கு அதிகளவாகவோ அல்லது குறைந்தளவாகவே இது இருக்கின்றது.

வாக்குகள் எவ்வாறு கணிப்பிடப்படுகின்றன என்பதை இது காண்பிக்கின்றது. செல்லுபடியான வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகின்றன என்பது முதலாவதாக உள்ளது. அதன் பின்னர் சகல கட்சிகளும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் வீதம் பார்க்கப்படுகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு ஆசனம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தேர்தல் தொகுதியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை அவர்கள் பரிசீலிப்பார்கள். உதாரணமாக கட்சி "ஏ' க்கு பத்து ஆசனங்கள் என்ற வீதம் வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது இது. ஆனால் தேர்தல் அடிப்படையில் 5 ஆசனங்களை மட்டுமே வென்றிருப்பார்கள். அவர்களுக்கு 10 ஆசனங்கள் வழங்கப்படுகின்றன. அதனால், அந்தக் கட்சி பாதிக்கப்படமாட்டாது.

செல்லுபடியான வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கட்சிகள் இரு ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டால் ஆனால் அவர்கள் 3 ஆசனங்கள் வெற்றி பெற்றிருந்தால் அந்த மூன்றும் அவர்களுக்கு கொடுக்கப்படும். சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை உள்ள பிரச்சினையானது அவர்கள் தனியாக போட்டியிட்டாலோ அல்லது அவர்கள் விகிதாசாரத்தின் அடிப்படையில் தனியாக போட்டியிட்டாலோ அவர்கள் ஆசனங்களைப் பெறுவார்கள். அவர்கள் பெரிய கட்சியுடன் இணங்கியிருந்தால், அவர்களைப் பெரிய கட்சிகள் உள்ளீர்த்துக் கொள்ளாவிடில் அவர்கள் இழந்துவிடுவார்கள். 

கேள்வி: எல்லை மீள் நிர்ணயத்தை நீங்கள் எப்போது மேற்கொள்வீர்கள்? உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மற்றம் மீள்குடியேற்ற விடயங்களை என்ன மாதிரி மேற்கொள்கின்றீர்கள்?

பதில்: நீங்கள் மன்னார், புத்தளத்தை எடுத்துக் கொண்டால், புத்தளத்தில் அதிக எண்ணிக்கையான முஸ்லிம்கள் உள்ளனர்.சில சமயங்களில் அவர்கள் புத்தளத்தில் பதிவு செய்திருக்கக்கூடும். இந்நிலையில் அவர்கள் அங்கு வாக்களிக்க இயலும். 

கேள்வி: அம்பகமுவவுடன் தொடர்புபட்ட விடயம் என்ன?

பதில்: அம்பகமுவ பிரதேச சபை பாரிய பிரதேசமாகும். வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர் 3 பிரதேச சபைகளாக அம்பகமுவ பிரிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி 1 மற்றும் வர்த்தமானி 2 என்பனவற்றைப் பாதிக்காத விதத்தில் அதனைச் செய்வதன் மூலம், முதலாவது வர்த்தமானியின் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.

2ஆவது வர்த்தமானியின் அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தது. வாக்குகளின் தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றை செய்யும்போது சில விடயங்கள் ஸ்ரீபாத தொடர்பாக மேலெழுந்திருந்தன. அந்த விடயம் தொடர்பாக விபரமாக நான் அறிந்திருக்கவில்லை.

அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் இது முன்னர் வந்திருந்தது. இப்போது இல்லை.இதற்கு எதிரான ஆட்கள் அத்துடன் இந்தப் புதிய பகுதியிலுள்ள பிரதான சனத்தொகையினர் தமிழர்களாவர். ஸ்ரீபாத ஆலயமென்பதே சர்ச்சையாகவுள்ளது. தமிழ்ப் பகுதியாக அது வரையறுக்கப்பட்டிருக்கின்றது. இதன் பின்னணியிலுள்ள சரியான கதை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நான் அறிந்தவரை இது ஸ்ரீபாத மட்டுமன்றி ஸ்ரீபாதவுக்கு செல்கின்ற பாதையாகும். 

கேள்வி: சில சமயங்களில் நடைமுறை நோக்கங்களுக்காக, சர்ச்சையைப் பொருட்படுத்தாமல், நீங்கள் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த விடயங்களை எவ்வாறு நீங்கள் கையாள்கின்றீர்கள்?

பதில்: எம்மால் இயன்றளவிற்கு அவர்களுக்கு நாங்கள் விளக்கமளிக்க முயல்கிறோம். சராசரியாக தொகுதியொன்றில் 80,000 மக்கள் இருந்தால் அவர்கள் தமக்கென சொந்தமான தொகுதியொன்றைக் கேட்பார்கள்.

அது சாத்தியமானது அல்ல என்று நாங்கள் அவர்களுக்குக் காண்பிப்போம். அபூர்வமாக அவர்களுக்கு தொகுதியொன்று வழங்கப்படுகின்றது. மற்றொரு மக்கள் தொகையினருக்கு நாங்கள் நேர்மையற்றவராக இருக்க முடியாது. இதனை அவர்களுக்கு நாங்கள் விளங்கப்படுத்துவோம். அத்துடன் அவர்களை தீர்மானம் எடுக்கும் காரணியாக உருவாக்குவதற்கு எம்மால் முடிந்தளவு செய்ய முயற்சிப்போம். அநேகமான மக்கள் புரிந்துணர்வுடன் உள்ளனர். 

கேள்வி: கடந்த காலத்தில் எல்லை நிர்ணயம் சாதி மற்றும் மத சமூகங்களின் அடிப்படையில் விதிமுறையாக இடம்பெற்றது. எல்லை நிர்ணயத்தின்போது இதுவும் பரிசீலனைக்கு எடுக்கப்படுகின்றதா?

பதில்: சமூகங்களை முழுமையாக வேறுபடுத்துவதன் மூலம் முழு நாட்டையும் நாங்கள் வேறுபடுத்திவைக்கப் போகின்றோம். நாங்கள் ஒன்றாக வாழ வேண்டியுள்ளது. 

நீங்கள் முஸ்லிம்கள், தமிழர்கள், பௌத்தர்களை வேறுபடுத்தினால்,  பிளவுகள் சென்றுகொண்டேயிருக்கும். அம்பாறை மாவட்டத்தை 
நீங்கள் பரிசீலனைக்கு எடுத்தால், அங்கு சுமார் 302,000 முஸ்லிம்கள் உள்ளனர். 267,000 சிங்களவர்களும் இதிலும் பார்க்க குறைந்த எண்ணிக்கையான தமிழர்களும் உள்ளனர். 

ஆதலால் முஸ்லிம்கள் 3 ஆசனங்களைப் பெற வேண்டியுள்ளது. சிங்களவர் 2 ஆசனங்களையும் தமிழர் ஒரு ஆசனத்தையும் பெறுவர். அந்த ஒரு ஆசனம் பிரச்சினையாக இருக்கின்றது. 700,000 வாக்குகள் இருந்தால் 3 ஆவது ஆசனத்தைப் பெற்றுக்கொள்வது பிரச்சினையாக இருக்கின்றது. ஆனால் இதனை கணித ரீதியாக நீங்கள் பார்த்தால், அதிக எண்ணிக்கையானவர்களாக சிங்களவர்கள் இருக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை நீங்கள் பார்த்தால் அங்கு 6 ஆசனங்கள் உள்ளன. அவற்றில் 4 தமிழர்களுக்கும் 2 முஸ்லிம்களுக்கும் போக வேண்டும்.  இரு ஆசனங்களை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு எம்மால் இயன்றளவிற்கு சிறப்பாக நாங்கள் முயற்சிப்போம். பேருவளையில் கூட இது சாத்தியமானதாகும். ஆனால், கொழும்பில் இது சிறிதளவு கடினமானது. ஏனெனில் சிறுபான்மையினர் ஆங்காங்கு சிதறியிருக்கின்றனர்.

இத்தகையதொரு நிலையில் நாங்கள் அதனைச் செய்ய முடியாது. ஆதலால் தீர்மானிக்கும் காரணியாக அவர்களை நாங்கள் உருவாக்குவோம். அவர்கள் ஒரு பெயரை பட்டியலுக்கு கொடுத்தால் அவர்கள் போதியளவு ஆதரவைப் பெற்றுக்கொள்வார்கள். எங்குமே சமூகங்கள் தமது நலன்களையே சிந்திக்கின்றன. வெலிஓயாவில் சிங்களவர்கள் தங்களுக்கு ஆசனமொன்றை வலியுறுத்துகின்றனர்.

நுவரெலியாவுக்குச் சென்றால் தமிழர்கள் தங்களுக்கு ஆசனமொன்றை விரும்புவதாக கூறுவார்கள். ஆனால் இது கடினமானதாகும். விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும்கூட முஸ்லிம்களும் தமிழர்களும் கேகாலையில் ஆசனமொன்றை பெற முடியாது. ஹரிஸ்பத்துவ போன்ற பகுதியை எடுத்துக் கொண்டால் சிங்களவர்கள் வாக்களித்தாலும் கூட ஒவ்வொரு தடவையும் முஸ்லிம் ஒருவரே தெரிவு செய்யப்படுகிறார்.

ஏனெனில் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வே அதற்குக் காரணமாகும். 1940 களில் முதலாவது எல்லை நிர்ணயம் இடம்பெற்ற போது, கொழும்பு மத்திக்கு 3 உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டார்கள். ஒருவர் தமிழர் மற்றவர் முஸ்லிம் மற்றவர் சிங்களவராவார். தமிழர் ஒருவர் ஒருபோதும் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் பீற்றர் கெனமனுக்கு ஆதரவளித்திருந்தனர்.

அதே போன்றே ஏனைய விடயங்களும் உள்ளன. அங்கு  தொகுதியில் மாற்றம் வேட்பாளர்களிலேயே தங்கியிருக்கின்றது. ஆனால் இது எமது விவகாரம் அல்ல. நாங்கள் எல்லை நிர்ணயத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்துகிறோம். 

கேள்வி: மலைநாடு பல்வேறு சமூகங்களைக் கொண்டது. தமிழர்களும் 
சிங்களவர்களும் சாதி அடிப்படையில் பிரிந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில்  எவ்வாறு நீங்கள் எல்லை நிர்ணயத்தை முகாமைத்துவப்படுத்துகின்றீர்கள்? 

பதில்: நுவரெலியாவிற்கு சென்ற போது அனுபவத்தை நாங்கள் பெற்றிருந்தோம். எமது குழு மிகவும் சமநிலையானது. அங்கு ஒருவர் இந்தியத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். பேராசிரியர் ஹிஸ்புல்லா முஸ்லிமாவார். அனிலா டயஸ் பண்டாரநாயக்கா சிங்கள கிறிஸ்தவராவார். பி.எம். 
சிறிவர்தன சிங்களவராவார், சங்கரன் விஜயச்சந்திரன் மலையகத் தமிழராவார். நாங்கள் மிகவும் சமத்துவமான தன்மையைக் கொண்டிருக்கின்றோம்.

குழு என்ற ரீதியில் நாங்கள் அதிகளவுக்கு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் ஒவ்வொரு சமூகத்தினதும் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டிருந்தோம். நீண்ட காலத்திற்கு முன்னர் மத்துரட்ட என்று அழைக்கப்பட்ட தொகுதியொன்றிருந்தது. அது இப்போது இல்லை. அத்தொகுதி இப்போது ஹங்குராங்கெத்த என்று அழைக்கப்படுகின்றது. அவர்களைப் பார்ப்பதற்கு எவருமில்லையென அவர்கள் முறையிட்டனர். எவ்வாறு அவர்களை உள்ளீர்த்துக் கொள்வதென நாங்கள் பரிசீலிப்போம். 

கேள்வி: கடந்த 2 மாதங்களாக எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் 
நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் எதிர்கொண்ட பிரதான சவால் என்ன?

பதில்: காலமே பிரதான விடயமாகவுள்ளது. 4 மாதங்களுக்குள் சகலவற்றையும் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் சிறிதளவு வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றோம். தினமும் 2 மாவட்டங்களுக்கு செல்கின்றோம். ஆனால் பொதுமக்கள் மத்தியிலான பதிலளிப்பு மிகவும் தாழ்ந்த மட்டத்திலிருப்பதே பிரதான விடயமாகும்.

ஏனெனில் சவால்களை அடையாளப்படுத்த முடியாது. எமது பிரதான சவால் இந்த வேலையை முடிப்பதாகும். முன்னைய குழுவை விட எமது குழு சிறிதளவு வேறுபட்டதாகும். இந்த 5 உறுப்பினர்களில் மூவர் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்களாவர். ஆணைக்குழு 19 ஆவது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.

எமது குழு அண்மைய மாகாண சபைகள் சட்டமூலத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டது. எமது ஆணைக்குழு பாராளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமேயானதாகும். ஆதலால் 3 உறுப்பினர்கள் குழுவிற்குள் உள்ளீர்க்கப்பட்டிருந்தனர். நாங்கள் நிர்வாக விவகாரங்களைக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு சிறிய தொகை அலுவலர்களேயுள்ளனர்.

ஆயினும் அவர்கள் மிகவும் திறமையானவர்கள். வார இறுதியிலும் பணிபுரிகின்றனர். எம்மால் அவ்வப்போது அலுவலர்களை அமர்த்த முடியாது. நில அளவை மேற்கொள்வதிலும் எல்லை நிர்ணயத்திலும் திறமையான ஆட்கள் எமக்குத் தேவை. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீனமான அடையாளத்தை நாங்கள் கொண்டு பணிபுரிகின்றோம். எவரின் செல்வாக்கிற்கும் நாங்கள் உட்படுவதில்லை. நாமே எமது தீர்மானங்களை மேற்கொள்கின்றோம்.

TOTAL VIEWS : 1040
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xkcg9
  PLEASE ENTER CAPTA VALUE.