தமிழரசுக் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததால் பங்காளிக் கட்சிகள் பலவீனமடைந்தன; தொடர்ந்தும் அவர்களுக்கு பதவி ஆசை சுரேஷ் பிரேமச்சந்திரன்
2017-08-08 11:19:58 | General

கூட்டமைப்பிற்கும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் 05.08.2017 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: 


கொழும்பில் இரா. சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, வடமாகாணசபையின் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுடன் பேசி ஒரு முடிவை எட்ட வேண்டும் என்று திரு. சம்பந்தன் கூறிய கருத்திற்கிணங்க, கடந்த 5 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இல்லத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலுக்கு நான்காம் திகதி இரவு ஒன்பதரை மணிக்கு சம்பந்தனது அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. 


இது முதலமைச்சர் கையாள வேண்டிய விடயம் என்பதாலும் இதில் அங்கத்துவக் கட்சிகள் பேச வேண்டிய விடயம் எதுவும் இல்லை என்ற காரணத்தினாலும் இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற ஏனைய பல பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினாலும் முக்கியமாக புதிய அரசியல் யாப்பு அல்லது திருத்தம், மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் போன்ற பல விடயங்கள் இருக்கையில், அவற்றிற்காக கட்சித் தலைவர்கள் கூடிப் பேசுவதை விடுத்து, ஒரு வருட காலமே எஞ்சியுள்ள ஒரு மாகாண சபைக்கு முதலமைச்சரே தான் விரும்பிய அமைச்சர்களை தெரிவு செய்யக்கூடிய அதிகாரம் பெற்றிருக்கையில், இத்தகைய ஒரு கூட்டம் அவசியம் என்று ஈபிஆர்எல்எவ் கருதவில்லை.  


இதனால் அந்தக் கூட்டத்தில் பங்குபற்றுவதில்லை என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் 5 ஆம் திகதி முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வேண்டிய ஒரு தேவை எமக்கு ஏற்பட்டது.  


மாகாண சபையின் பெரும்பான்மை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கிணங்க ஊழல் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கென ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, அந்த விசாரணைக்குழு ஒரு அறிக்கையைக் கொடுத்ததன் அடிப்படையில், இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டும், ஏனைய இருவரின் விசாரணை முழுமையாக நிறைவடையாததன் காரணத்தால், மீண்டும் அந்த விசாரணை நடைபெற வேண்டும் என்ற முடிவும் எட்டப்பட்டிருந்தது.  
இந்த நிலையில் தான் சம்பந்தன்  தலையிட்டு, முதலமைச்சர் அவ்விசாரணைகளைத் தொடராமல் நிறுத்தியதுடன், ஏனைய கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவெடுக்கும்படி கூறியிருந்தார். 


ஏற்கனவே இரண்டு அமைச்சர்களை மாற்றிய சூழலில், ரெலோவின் சார்பில் நியமிக்கப்பட்ட டெனீஸ்வரனை மாற்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் அமைச்சர் சத்தியலிங்கத்தை மாற்றுவது தொடர்பான ஒரு விடயமே மிகுதியாக இருந்தது.  


அவரை மாற்றுவதை எதிர்த்து தமிழரசுக் கட்சி காட்டிய கடும்போக்கின் காரணமாக, மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய கூட்டம் இரவு 9.30 மணிவரை நீண்டு சென்றது. இதில், ஈ.பி.ஆர்.எல்.எவ்.வைப் பொறுத்தவரை, முதலமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த மாற்றங்கள் தொடர்பில் முதலமைச்சர் முடிவெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  


ரெலோவின் செயலாளர் சிறீகாந்தாவும் அதேசாரப்பட வலியுறுத்தினார். புளொட் அமைப்பும் இதனை ஏற்றுக்கொண்டது. தமிழரசுக் கட்சியை இணங்க வைப்பதற்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. இறுதியில் மாவை சேனாதிராஜாவும் அதனை ஏற்றுக்கொண்டார். இருந்த பொழுதிலும், முதலமைச்சர் சட்டபூர்வமாக விசாரணைக் குழுவை அமைக்கவில்லை என்றும், இருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகள் இருந்தன என்றும் ஏனைய இருவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் சேனாதிராஜாவால் சுட்டிக்காட்டப்பட்டது. 


இந்த விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தனது கருத்தைத் தெரிவிக்கையில் ;    
மாகாண சபை ஒரு வினைத்திறன் மிக்க சபையாக, ஊழலற்ற சபையாக, மக்களுக்கு விரைந்து சேவையாற்றக்கூடிய சபையாக இருக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டென்றும் சுட்டிக்காட்டியது.  


ஆகவே, இங்கு சட்டங்களை முன்வைத்து ஊழல்களை மறைக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்று வலியுறுத்தப்பட்டது. 


இந்தச் சந்தர்ப்பத்தில் முதலமைச்சரும் சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சர்களும் இராஜிநாமா கடிதங்களைக் கொடுப்பதனூடாக தான் இலகுவாக மாற்றங்களைச் செய்ய முடியும் என்று கூறினர்.  


அவ்வாறில்லாத பட்சத்தில் அவர்கள் விசாரணைக்கு சமுகமளிப்பதற்குத் தயாராக இருந்தால் விசாரணையை நடத்த முடியுமென்று கூறினார். விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்கா விட்டால், தனக்குரித்தான அதிகாரங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார்.  


இதில் ரெலோ சார்பிலான அமைச்சர் டெனீஸ்வரனிடமிருந்து இராஜினாமா கடிதத்தைப் பெற்றுக்கொள்வது கடினம் என்று செல்வம் அடைக்கலநாதன் கூறினார். ஆனால், சத்தியலிங்கத்திடமிருந்து இராஜினாமா கடிதத்தை வாங்க முடியும் என்று மாவை சேனாதிராஜா கூறிய போதிலும், ஊழல் செய்யாதவரிடமிருந்து அதனை ஏன் பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். 


அவ்வாறு இராஜினாமா கடிதம் பெறப்பட்டாலும் ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். இதன் பின்னணியில் மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன. 


* முதலமைச்சர் தனது அதிகாரத்தின் அடிப்படையில் செயற்படுவதை அனைவரும் ஏற்றுக்கொள்வது. 


*  அமைச்சர்களை மாற்றுவது என்பது அவர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தப்படுத்தலாகாது. 


*  புதிய அமைச்சர்களை நியமிக்கும்போது அந்தக் கட்சிகளின் ஆலோ
சனைகளும் பெறப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. 


இதன் அடிப்படையில், தமிழரசுக் கட்சிக்கான ஒரு ஆசனத்தை அனந்தி சசிதரனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பதையும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கான ஆசனமும் வழங்கப்பட்டுள்ளது என்றும் புளொட்டுக்கும் ரெலோவுக்கும் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தான் முடிவெடுத்திருப்பதாகவும் கூறினார்.  


ஆனால் அது தமிழரசுக் கட்சியினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திருமதி அனந்தி சசிதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தற்காலிகமாக அவர் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஆகவே அவருக்குக் கொடுத்த அமைச்சுப் பதவி தமிழரசுக் கட்சிக்குக் கொடுத்ததாகாது என்றும் கூறினார்கள்.  இதில் தமிழரசுக் கட்சிக்கு மற்றுமொரு ஆசனமும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.  
இந்தநிலையில் மாகாண சபையின் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் முதலமைச்சர் மற்றும் அனந்தி சசிதரன் ஆகிய நால்வரும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்றும் ஏனைய கட்சிகளுக்கு ஒவ்வொரு அமைச்சுப் பதவியே வழங்கப்படுகிறது என்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், கடந்த காலத்தில் புளொட் அமைப்பிற்கு ஒரு அமைச்சுப் பதவியும் கொடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.  


ஆனால், இந்த விடயங்களையும் தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. அவ்வாறாயின், அனந்தி சசிதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே அவரை நீக்கி மற்றொருவருக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சி விரும்புகிறதா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.  


அதுபற்றி திட்டவட்டமாக பதில் சொல்லத் தயங்கிய மாவை சேனாதிராஜா தங்களுக்கு மற்றுமோர் அமைச்சுப் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் நான்கு அமைச்சுப் பதவிகளே இருக்கக்கூடிய ஒரு சூழலில், அவ்வாறு கொடுக்கப்பட்டால் இன்னுமொரு கட்சி பாதிக்கப்படும் என்பதையும் முதலமைச்சர் தெளிவுபடுத்தினார். 


இதேநேரம், வடக்கு மாகாண சபை தொடர்பாக அதன் முதலமைச்சரை வெளியேற்றுவது தொடர்பாகவும், மார்ட்டின் வீதி, தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை உருவாக்கி அதனை ஆளுநரிடம் கையளித்ததைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர்,  
அந்த முயற்சியில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏதோவொரு முறையில் முதலமைச்சரை வெளியேற்றும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாகவும் இருப்பதை ஈ.பி.ஆர்.எல்.எவ். சுட்டிக்காட்டியது. 


மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசம் இருந்த 30 ஆசனங்களில் 15 ஆசனங்கள் தமிழரசுக் கட்சியின் வசமும் ஏனைய பதினைந்து ஆசனங்கள் ஈபிஆர்எல்எவ், புளொட் மற்றும் ரெலோ ஆகிய அங்கத்துவக் கட்சிகளிடமும் உள்ளன. 
மாகாண சபையில் இத்தகைய ஒரு நிலை இருந்ததன் காரணமாக தமக்கு பெரும்பான்மையை உருவாக்கினாலே முதலமைச்சரை வெளியேற்ற முடியுமென்று தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. அதன் பிரகாரம் இறுதி ஆண்டில் புளொட்டிற்குக் கிடைக்க வேண்டிய போனஸ் ஆசனத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் தமிழரசுக் கட்சி மிகவும் இரகசியமாக தனதாக்கிக் கொண்டது என்றும் ஈபிஆர்எல்எவ் சுட்டிக்காட்டியது.  


இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு தமிழரசுக் கட்சியிடமிருந்து எத்தகைய பதிலும் வரவில்லை. தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையிலிருந்து புதிய அரசியல் சாசனம், மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை,  அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய சூழலில், அவையெல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளி ஒரு அமைச்சுப் பதவிக்காக நீண்டநேரம் வலியுறுத்துவதானது தமிழரசுக் கட்சி பதவிகளின் மீது கொண்டுள்ள அக்கறையையே வெளிப்படுத்துகிறது.

வேட்புமனு தாக்கல் செய்கின்ற போது ஆசனங்கள் சமனாகப் பிரிக்கப்பட்டிருந்தால் தமிழரசுக் கட்சி இன்று மிகவும் பலவீனமான கட்சியாகவே இருந்திருக்கும். ஏனைய கட்சிகள் ஐக்கியத்தின் மேல் கொண்ட பற்றுறுதியின் காரணமாக தமிழரசுக் கட்சிக்கு பல விட்டுக்கொடுப்புகளைச் செய்திருந்தன.  


இதன் காரணமாகவே தமிழரசுக் கட்சிக்கு 15 ஆசனங்கள் கிடைத்திருந்தன. மாகாண  சபை மற்றும் பாராளுமன்றத்தில் கிடைத்த ஆசனங்களை வைத்து தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய தமிழரசுக் கட்சியினர், அதனை விடுத்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் ஏனைய பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதிலுமே ஆர்வமாய் இருக்கின்றனர். 


ஆகவே, தமிழரசுக் கட்சியினர் அற்ப சொற்ப பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் விலை போகாமல் இனியாவது தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தி, தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு முன்வர வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எதிர்பார்க்கின்றது.

 

TOTAL VIEWS : 925
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
a0hcy
  PLEASE ENTER CAPTA VALUE.