வரலாற்றுத்தவறா சந்தர்ப்பமா? 4 நாள் விவாதத்தில் நடந்தது என்ன?
2017-11-06 11:51:27 | General

கடும் எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்திய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதம் கடந்த 30,31,01,02 ஆம் திகதிகளில் அரசியலமைப்பு சபையில் அரசியலமைப்பு குழுவின் தலைவரும் சபாநாயகருமான கரு ஜெயசூரிய தலைமையில்  நடைபெற்ற நிலையில் எதிர்வரும் 08 ஆம் திகதி புதன் கிழமையும் நடைபெறவுள்ளது.

முதல் மூன்று தினங்கள்  காலை 10.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரையுமே விவாதங்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த போதும் பின்னர் இரண்டாம்  நாளிலிருந்து விவாதத்திற்கான நேரம் காலை 10.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டதுடன் விவாத நாட்களும் மூன்றிலிருந்து ஐந்து தினங்களாகவும் அதிகரிக்கப்பட்டது.


புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீது கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற விவாதங்களில் ஆக்கபூர்வமான கருத்துக்கள், யோசனைககள், முன்மொழிவுகள் எக் கட்சியினாலாவது அல்லது யாராவது ஒரு உறுப்பினரினாலாவது வைக்கப்பட்டதா என்பதை ஆராய்ந்தால் பதில் பூஜ்ஜியமே.பழைய வரலாறுகள் புரட்டப்பட்டதுடன் அதே இனவாத சிந்தனைக்கருத்துக்களும்  தேசப்பற்றுப் பேச்சுகளுமென சிங்களத்தரப்பினரும் பண்டா செல்வா, டட்லி  செல்வா,சமஸ்டி,வடக்கு கிழக்குஇணைப்பு, பிரிப்பு, ஒரே நாடு, சம உரிமை சர்வதேச அழுத்தம் என தமிழ்,முஸ்லிம் தரப்புகளும் அரைத்த மாவையே மீண்டும் அரைத்தனர். 


அரச தரப்பினர் இந்த புதிய அரசியலமைப்பை வரலாற்று சந்தர்ப்பம் என வர்ணித்த அதே வேளை மகிந்த ஆதரவு பொது எதிரணியினர் இதனை வரலாற்று தவறு என்றே விமர்சித்தனர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுதான் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான இறுதி வழி.

இதிலும் நாம் ஏமாற்றப்பட்டால் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும், அதிகரிக்கச் செய்வோம் என்றனர்.. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி. )  இந்த புதிய அரசிலமைப்பை எதிர்க்கின்றதா ஆதரிக்கின்றதா என்று புரிந்து  கொள்ள முடியாத  ஒரு குழப்பகரமான நிலையிலேயே தன்கருத்துக்களை முன் வைத்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் அரசிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தினார்.தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர் அமைச்சர் மனோ கணேசன் சம்பந்தனை வெறுங்கையுடன் தமிழ்மக்கள் முன்பாக அனுப்பிவிடாதீர்கள், அப்படி அனுப்பினால் வரலாறு உங்களை மன்னிக்காது என புதிய அரசியலமைப்பை எதிர்ப்போருக்கு  எடுத்துக்கூறினார் .ஏனைய சிங்களத்தரப்பு உறுப்பினர்கள் பலரின் கருத்தும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தம்போதும்.புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்பதாகவே இருந்தது .


இந்த விவாத நாட்களில் வெறிச்சோடிப்போயிருந்த உறுப்பினர்களின் ஆசனங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை  முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பி,யுமான சிவசக்தி ஆனந்தன் இந்த விவாதத்தில் உரையாற்ற கட்சித் தலைவர் இரா. சம்பந்தனால் அனுமதி மறுக்கப்பட்டமையுமே பலரினதும் கவனத்தை ஈர்த்தன,அத்துடன் விவாத நாட்களில் காலை முதல் மாலை வரை அசையாது தன் ஆசனத்தில் அமர்ந்திருந்து விவாதங்களை எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அவதானித்துக் கொண்டிருந்தமையும் வியப்பை ஏற்படுத்தியது.


புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான முதல் நாள் விவாதம் 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு அரசியலமைப்பு குழுவின் தலைவர் கரு ஜெயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபையில் ஆரம்பமானது.இடைக்கால அறிக்கை தொடர்பாக அரசு தரப்பில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான  எம்.ஏ. சுமந்திரனும் ஆரம்பித்து வைத்தனர்.

கட்சிகள் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அமைச்சர் நிமல் சிறிபால டி  சில்வாவும் மக்கள் விடுதலை முன்னணியில்( ஜே.வி.பி. ) பிமல்  ரத்னாயக்கவும் மகிந்த ஆதரவுப் பொது எதிரணியில் தினேஷ் குணவர்தனவும் ஆரம்பித்து வைத்தனர். இதே வேளை அரசியலமைப்பு குழுவிலிருந்து விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி விலகிக்கொண்டமையால் இவ் விவாதத்தில் அக் கட்சியினரால் பங்கேற்க முடியவில்லை.


வழக்கத்தை விடவும் சுமந்திரன் எம்.பி.யின் முதல் நாள் உரை பலரின் கவனத்தையும் ஈர்த்தது மகிந்த ஆதரவுப் பொது எதிரணியின் குறுக்கீடுகள் ,குற்றச்சாட்டுகள்,குழப்பங்களை சிறிதும் பொருட்படுத்தாது அவற்றுக்கு தனது உரையின் மூலம் பதிலும் பதிலடியும் வழங்கி அவர்களின்  வாய்களை சுமந்திரன் மூட வைத்தார் .அத்துடன் சமஸ்டி தொடர்பான பல வரலாற்று ஆவணங்களையும் அவர் சபையில் சமர்ப்பித்து  தமது சமஸ்டிக் கோரிக்கையின் நியாயத்தை வலுப்படுத்தினார்.ஏனைய  கட்சிகளை சேர்ந்தவர்கள் பழைய பல்லவிகளையே பாடினர். 


பொது வெளியில் மகிந்த ஆதரவு பொது எதிரணியினரால்  நாட்டின் இறைமைக்கு ஆபத்து,நாடு பிளவடையப் போகின்றது,தமிழீழம்  உருவாகப் போகின்றது,வடக்கு,கிழக்கு இணைக்கப்படப் போகின்றது .பௌத்த மதத்திற்கு ஆபத்து வந்து விட்டது என இந்த புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஒரு பயங்கர தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் அரசியலமைப்பு விவாதங்களின் போது அவர்களிடம் இடைக்கால அறிக்கை பற்றிய கடுமையான கருத்துக்களை காண முடியவில்லை.

இதனைத்தான் .மக்கள் விடுதலை முன்னணியின்( ஜே.வி.பி. ) தலைவரான அநுரகுமார திசாநாயக்க,புதிய அரசியலமைப்பின்  இடைக்கால அறிக்கை தொடர்பில் வெளியே மக்கள் மத்தியில் கர்ஜித்தவர்கள், கூக்குரலிட்டவர்கள். இங்கு முனகுகின்றனர். அவர்கள் மக்கள் மத்தியில் செய்தது மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்ற ஆசையிலான "அரசியல் கூச்சல்' எனக் குறிப்பிட்டார்.


விவாதம் முதலில் மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்ததால் மூன்றாம் நாளான புதன் கிழமையே பிரதமர் ரணில் விக்கிரம சிங்க,எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.மக்கள் விடுதலை முன்னணியின்( ஜே.வி.பி. ) தலைவரான அநுரகுமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்  உரையாற்றினர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்  றிசாத் பதியுதீன் ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் இந்த நான்கு நாள் விவாதங்களில்உரையாற்றவில்லை.


மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ஆதரவு பொது எதிரணியின் நிலைப்பாட்டுக்கும் தங்களது நிலைப்பாட்டுக்கும் எந்த வேறுபாடும்  இல்லை என்றும் ஒரே கருத்தையே இருதரப்பும் கொண்டுள்ளதாகவும் ஒரே போடாகப் போட்டார்.


முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான மகிந்த ராஜபக்ஷ, வியாழக்கிழமை இடம்பெற்ற நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றினார். புதிய அரசியலமைப்பை ஏற்படுத்த மக்கள் ஆணை இந்த அரசுக்கு இல்லையென்பதும் சர்வதேச கடனை அடைப்பதற்கான சூழ்ச்சியே புதிய அரசியலமைப்பு என்பதும் இந்த அரசுக்கு தமிழ் தரப்பினர் வழங்கும் ஆதரவை தனக்கு வழங்கியிருந்தால் இதனைவிட அதிகாரங்களை தான் வழங்கியிருப்பேன் என்பதாகவும் அவரது உரை  இருந்தது.


மகிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போது அரச தரப்பு ஆசனங்கள் பெருமளவில் வெறிச்சோடிக்காணப்பட்டன.முதல் வரிசையிலுள்ள 20  ஆசனங்களில் ஒன்றில் மட்டும்  அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.அவரை விட அரச தரப்பில் இரு இராஜாங்க அமைச்சர்களும் 2 எம் பி.க்களும் மட்டுமே இருந்தனர்.

மகிந்தவின் உரை முடிவடையும் நிலையில் அமைச்சர்கள் மனோ கணேசனும் ஜோன் செனவிரத்னவும் வந்து சேர்ந்தனர். எதிர்க்கட்சி பக்கத்திலும் சம்பந்தன் உள்ளிட்ட மிகக் குறைந்தளவானோரே காணப்பட்டனர்.இந்த நான்கு நாள் விவாதங்களில் சில வேளைகளில் சபையில் மூன்று ,நான்கு உறுப்பினர்களே இருந்தனர். அதிலும் சில நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தார்.


இதே வேளை இந்த விவாதம் தொடங்கிய நாள் முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியை சேர்ந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.க்குமிடையிலான பிரச்சினை விடாக் கண்டன் கொடாக்  கண்டனாகவே தொடர்ந்தது.சிவசக்தி ஆனந்தன் உரையாற்றியிருந்தால் கூட  கிடைக்காத பிரபல்யத்தை, ஊடகங்களின் கவனிப்பை தேவையற்ற,அனுமதி மறுப்பின் மூலம் தலைவர் சம்பந்தன் பெற்றுக்கொடுத்து விட்டார்.

சம்பந்தன் இந்த முட்டாள்தனமான  முடிவை ஒரு போதும் எடுத்திருக்கமாட்டார். அவர் இன்னொருவரின் கயிற்றை விழுங்கி விட்டார்.அதனால் தான் தமது பேச்சு உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் போராடிய தமிழ் கூட்டமைப்பிடமிருந்து தனது பேச்சுரிமைக்காக சிவசக்தி ஆனந்தன் போராட வேண்டியேற்பட்டது.எனினும் அவருக்கு  எதிர்வரும் புதன் கிழமையும் அனுமதி கிடைக்காது என்றே தெரியவருகிறது.


சிவசக்தி ஆனந்தனின் பேச்சுரிமை போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக்கட்சித் தலைவர்களான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எந்த தார்மீக ஆதரவையும்  வழங்காதது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உங்களுக்கு சபாநாயகரிடம் பேசி நல்ல பதிலை இன்று மாலைக்குள் பெற்றுத்தருவேன் என சபாபீடத்தில் அமர்ந்திருந்தவாறு வியாழக்கிழமை உறுதி மொழி வழங்கிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அன்று மாலை தான் மட்டும் உரையாற்றிவிட்டு சென்றுவிட்டார்.

தனது உரையில் கூட தப்பித்தவறியும் சிவசக்தி ஆனந்தனுக்கு கட்சித் தலைமையால்  ஏற்படுத்தப்பட்ட அநீதி தொடர்பில் வாய் திறக்கவில்லை.இதே போன்றே தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தனும் தனது உரையில் சிவசக்தி ஆனந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் மௌனியாகிவிட்டார்.


இதேவேளை தனக்கு பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் வியாழக்கிழமை ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கூறிய "பிரதமரிடமும் சபாநாயகரும் அரசியலமைப்பு குழுவின் தலைவருமான கரு ஜெயசூரியவிடமும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை சென்று சிவசக்தி ஆனந்தன் இந்த இடைக்கால அறிக்கைக்கு எதிராகவே பேசவுள்ளார்.

எமது ஏனைய உறுப்பினர்களை நாம் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவாகப் பேச வைத்துள்ள நிலையில் இவர் மட்டும் எதிராகப் பேசினால் ஏனைய உறுப்பினர்கள் எம்மிடம் கேள்வி எழுப்புவார்கள் .ஆகவே நாம் அவர் பேசுவதற்கு அனுமதி கொடுக்க மாட்டோம், கொடுக்குமாறு நீங்களும் கூறக் கூடாது எனக் கூறியுள்ளனர்' என்ற குற்றச்சாட்டு  இடைக்கால அறிக்கைக்கு ஆதரவானோரும்  பேச வேண்டுமென்ற அழுத்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள உறுப்பினர்கள் மீது கட்சித்தலைவரால் பிரயோகிக்கப்பட்டுள்ளதா   என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதிய  அரசியலமைப்பு  தொடர்பான இடைக்கால அறிக்கை மீது கடந்த நான்கு நாட்களாக அரசியலமைப்பு சபையில் நடந்த விவாதங்களையும், முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் பார்க்கும் போது  புதிய அரசியலமைப்பு குறித்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த,ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புகள்முக்கியத்துவங்களை நியாயப்படுத்தும்  அளவுக்கு அமைந்திருக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் வழமையாக  இடம் பெறும்  உப்பு சப்பற்றவிவாதங்களைப் போன்றே இதுவும் காணப்பட்டது. குறிப்பாகச் சொல்வதானால் புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் அது குறித்து நடக்கும் விவாதங்களில் ஒவ்வொரு கட்சிகளினாலும் முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள், கருத்துக்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புகளை விட தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இந்த இடைக்கால அறிக்கையினால் ஏற்பட்டுள்ள பிளவும் 
சிவசக்தி ஆனந்தனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் இழைக்கப்படட ஜனநாயக மறுப்புமே அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றத் குழுக்கூட்டத்தில் எடுத்த முடிவை மாற்ற முடியாதளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் அவ்வளவு கட்டுக்கோப்பான கட்சியோ அல்லது அதில் உள்ளவர்கள் எல்லாம் கொடுத்த வாக்கை மீறாத   கர்ணன்களோ அல்ல.

ஒரு சிறு விட்டுக்கொடுப்புடன் இப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்திருக்க முடியும். ஆனால் ஒரு சிலருக்கு இது ""கௌரவ'' பிரச்சினையாக மாறியதனாலேயே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தி சிரிக்க வைத்து விட்டனர். இந்த நான்கு நாள் விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்த பலன் இது மட்டும் தான்.

 

TOTAL VIEWS : 577
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7fhcp
  PLEASE ENTER CAPTA VALUE.