பொலிஸ் மா அதிபரில் புலனாகும் அரசின் வெட்கக் கேடும் சாலைகளில் துலங்கும் அரசு மீதான வேக்காடும்
2016-12-05 13:38:40 | General

நல்லாட்சி அரசாங்கம் வெட்கப்பட வேண்டியதும் தலைகுனிய வேண்டியதுமான மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடயமே பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் "சேர்' போட்ட தொலைபேசி உரையாடல் நாடகமாகும். தொழில் தர்மமும் தார்மிகமும் சாகடிக்கப்பட்ட அம்சமாக கருதப்படுகிறது.

வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரம் வெளியே எள்ளிநகையாடப்படுகின்றது. உள்ளகத்தே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தவறை ஒப்புக் கொள்கின்றனர். மூன்றாவது நம்பிக்கைக்கு உரியவர்களையும் பிரதமர் இழந்து விடுவாரோ என்கிற கேள்விகளும் உண்டு.


புலமை புலப்பட்டதா?


தொழில்வாண்மை புலப்படச் செய்யாத பொலிஸ்மா அதிபர் ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதில் தடுமாறியுள்ள தருணத்தை பாராளுமன்றம் மாத்திரமல்ல முழு நாடுமே பேசுகிறது. ஏற்கனவே ஜனாதிபதியின் நையப்புடைத்தலுக்கு உள்ளான பூஜித ஜெயசுந்தர, இரட்டைக் கண்டிப்புக்கு உள்ளாகிவிட்டார்.

முன்னதாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் சந்திரவை கைது செய்தமை தொடர்பில் பின்பற்றப்பட்ட படிமுறைகளில் கேள்விக்கணை தொடுத்து ஜனாதிபதியின் கண்டிப்புக்குள்ளாகி சில தினங்களில் மீண்டும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ள நிலைமைகளை அறிந்து கொண்டிருக்கிறோம். 


உண்மையில் முன்பதாக யாருக்கும் பூஜித"சேர்' போட்டவர் என்ற விடயம் நகைச்சுவையாக அலைமோதிய போதும் பின்னர் படிப்படியாக அமைச்சர் ஒருவருக்கு அவ்வாறு  சேர் போட்டிருக்கலாம் என பிரதமர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். என்றாலும் யார் அந்த அமைச்சர் என பெயர் குறிப்பிடவில்லை.

எவ்வாறாயினும் பலரதும் எண்ணப்பாடுகளும் ஊகங்களும் துறைசார் அமைச்சரான 
சாகல ரட்ணாயக்கவையே நோக்கி நகர்கின்றன. சேர் என அழைக்கப்பட்ட அரசியல்வாதி அவரே என நம்பப்படுகிறது. தொலைபேசி உரையாடல் நகர்ந்த விதத்தில் அமைச்சர் பொலிஸ் மா அதிபர் உரையாடலானது முதிர்வையோ அல்லது மேன்மைத்துவத்தையோ வெளிப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.


நில மேக்காக  நிலைமை மாறியதா?


 ஒலிவாங்கிகளுக்கு முன்னால் நின்று கொண்டு பேசுகையில் பேச்சுகளை கருப்பொருள் வெளியாகா வண்ணம் பார்வையாளர்களுக்கு புரியாவண்ணம் கருமமாற்றியிருக்கலாம். தனக்கு வந்த அழைப்புக்கு ஹலோ நீங்கள் யார் அல்லது நீ யார் என்று கேட்ட தருணத்தில் அவர் அமைச்சர் என அறிந்ததுமே ஹலோ குட்மோர்னிங் சேர் இதுஒரு அவசர விவகாரமா சேர், நான் உங்களைத் தொலைபேசியில் அழைப்பேன் என்று கூறியவுடன் சமயோசிதமாக பேச்சுகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம்.

இங்கு முதலில் நீங்கள் யார் என்கிற முறைமையே சரியானதல்ல. அழைப்பது யார் என்பதை தெரிந்து கொள்ளலாமா என்பதே உரையாடல் முறைமையின் மரியாதையாகும். நீங்கள் யார் எனக் கேட்குமளவுக்கு தனது துறைசார் அமைச்சரின் குரல், தொலைபேசி இலக்கங்கள் பற்றி பொலிஸ் மா அதிபர் அறியாதவராக உள்ளாரா? உண்மையில் அமைச்சர் சாகல தான் கோல் பண்ணியிருப்பாராயின் அவரின் நிலைமையை விசாரித்து விட்டு பேச்சை தொடர்ந்திருக்க வேண்டும்.

பஸ்நாயக்க நிலமேயின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நிலமே கைதாகாமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நிலைமையைப் பற்றி யோசிக்காமல் அல்லது கேட்டறியாமல்  முயற்சி பண்ணிய அமைச்சரின் பாங்கு உங்களுக்கு கோல் பண்ணுவேன் என பொலிஸ் மா அதிபர் கூறிய பிற்பாடும் உரையாடல் தொடர்ந்ததில் புலப்படுகிறது.

நிலமே எந்த வகையிலும் நிச்சயமாக கைது செய்யப்பட மாட்டார் என பொலிஸ் அதிபர் கூறும் வரையில் அமைச்சர் அழைப்பில் இருந்துள்ளமை உணர முடிகிறது. தகவல் பெற்றுக் கொண்டு உங்களோடு தொடர்பு கொள்வேன் என்ற பிறகும் திட்டவட்டமாக  நிலமே கைதாகார்.

தனது அனுமதியின்றி தன்னிச்சையான முறையில் அவரைக் கைது செய்ய வேண்டாமென நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன் எனவும் சேருக்கு பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தமை தெரியவருகிறது.


உண்மை ஊர்ஜிதமானதா?


இடம் காலம் நேரம், காரண காரியம் அறிந்து கொள்ளப்படாமல் சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான முக்கிய இரு தலைகள் நடந்துகொண்டமை நல்லாட்சிக்கு ஒரு பாரிய  இழுக்காகவே நோக்கப்படுகிறது. 


சற்று விலகி நின்று நிலமே விவகாரத்தின் நிலைமைகளை கூறுகின்ற அறிவும் அம்சமும் அத்தருணத்தில் துணைக்கு வராமல் போனமை  பொலிஸ் அதிபரின் துரதிர்ஷ்டமாகும். இவ்வாறு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருப்பவரின் நடத்தையும் நடவடிக்கையும் கேள்விக்குள்ளாவிட்டது.

எது எவ்வாறானாலும், பொலிஸ் அதிபர், அமைச்சர் போன்றோர் விசாரிக்கப்படுகின்றனரோ  விளக்கம் கோரப்படுகின்றரோ நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவின்  செயற்பாடு, அது நகரும் விதம் எவ்வாறு என்பது உலகத்துக்கு அம்பலமாகிவிட்டமை ஊர்ஜிதமாவதாக பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர். நல்லாட்சியின் சுயாதீனத் தன்மை ஒரு தொலைபேசி அழைப்பிலும் ஊசலாடுகிறது. சுட்டிக்காட்டப்படுகிறது. 


தொட்டாலும் பட்டுக்கு மாய்வதா?


தொட்டால் பட்டுக்கு மாய்கின்ற படலத்தை இராஜாங்க முகம் தொடர்ந்து காட்டிய வண்ணமுள்ளது. ராஜபக்ஷ சங்கத்தின் அந்திம காலப்பகுதியில் பார்த்ததையும் கேட்டதையும் சமகாலத்தில் மக்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளதா என்கிற அங்கலாய்ப்பு பரிணாமம் பெறுகிறது. எங்கும் எதிலும் காலூன்ற முடியாத பின்புலம் தலைவிரித்தாடுகிறது.

எடுத்ததற்கெல்லாம் ஜனாதிபதி செயலகம் நோக்கிய படையெடுப்பையும் பாராளுமன்றத்திற்குள்ளேயே உடைத்துக் கொண்டு உட்புக முனைகின்ற கோஷங்களினதும் ஆர்ப்பாட்டங்களினதும் பின்னணியை எண்ணி அரசாங்க ஆதரவாளர்கள் கவலைப்படுகின்றனர். எல்லா முனைகளும் வினைகள் நிறைந்ததாகவே புலப்படுகின்றன.

இந்த இலட்சணத்தில் மாகாணங்களுக்கும் அதிகாரம் வழங்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் அரசின் முயற்சிக்கு எதிராக பாராளுமன்ற சுற்று வட்டத்தை சம்பந்தப்பட்ட தரப்புகள் நாடமாட்டாது என்பதற்கு எத்தகைய உத்தரவாதமுமில்லை.


அபசகுனமா?


ஐ.தே.க. தலைவரின் நியமனம் என கருதப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் பதவியிறக்கப்பட்டார். ஐ.தே.க. வினருக்கு  ஆதரவானவர் என ஊகிக்கப்பட்ட லஞ்ச, ஊழல்  ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டில்றுக்ஷி ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்குட்படுத்தப்பட்டார்.

ரணிலுக்கு  விசுவாசமானவர் எனப் பேசப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர விளக்கம் கோரப்பட்டுள்ளார். பதவி இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறார். ஐ.தே.க.  நிதியமைச்சர் என பார்க்கப்படுகின்ற ரவி 2016 க்கு பட்ஜெட் வாசித்தார். பலரும் துவம்சம் செய்தனர். எம்.பி.க்கள் பலர் இம்சித்தனர்.

புத்திஜீவிகள் கூட பிழை பிடித்தனர். தற்போது 2017 க்கான பட்ஜெட் வாசிப்பின் பின்னர் பிரதிநிதிகள் விமர்சிக்கின்றனர். போதாக்குறைக்கு ரூபா 25,000 தண்டப் பணம் சாலை மறியல் போராட்டத்தை மாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் தோற்றுவித்தது. மேலும் ஒரு படி நகர்ந்து முழு நாட்டு சாலைகளையும் வெறிச்சோடச் செய்தது.

இவ்வாறு ஏதோ அடிப்படையில் வருமானமீட்ட அரசு முயற்சித்தாலும், எதிர்மறையான நடவடிக்கைகள் தோன்றி அபசகுனமாகிவிடுகிறது. அதன் காரணமாக இலக்குகள் தவிடுபொடியாகின்றன. நோக்கங்கள் சுக்குநூறாகிவிடுகின்றன. வருமான மார்க்கங்கள் தடைப்படுகின்றன. சில விடயங்கள் தொடர்பான மன்றாட்டம் அரசுக்கு திண்டாட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதிகாரப் பசி பீடித்திருக்கும் அரசியல் வாதிகளின் ஊக்கப்படுத்துகை பின்னாலிருக்காது எனக் கூறுவதற்கில்லை.


ஒழுக்கமுள்ள சமுதாயமா? அவசர ஆத்திரமா?


ஒழுக்கமுள்ள சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்காக முனைகின்ற தருணத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் ஒழுக்கமிருக்கிறதா என்ற கேள்வியுமுண்டு. சாலைகளில் ஒழுக்கத்தை நிலைநாட்ட எடுத்த முயற்சிக்கு பூர்வாங்கமாக கிடைத்தது கல்லெறியும் பொல்லெறியும் என்ற ஒழுக்கமற்ற செயல்களே.

முன்னைய அரசாங்கத்தின் ஒழுக்கமற்ற பங்குதாரர்கள் சிலர் இன்னுமே தற்கால அரசுடன் ஒட்டிக் கொண்டிருப்பதாக  பலர் சுட்டிக்காட்டுகின்றனர். அரசு எனும் வீட்டுக்குள் ஒழுக்கமில்லாத போது எவ்வாறு வீதிகளில்  ஒழுக்கத்தை நிலைநாட்டுவது? என்பது பொதுவான கேள்வியாகும். எவ்வாறாயினும், தண்டம் விதிப்பதாகக் கூறப்பட்ட தலைப்புகள் அனைத்துமே சரியாக அமுல்படுத்தப்பட்டால் கொழுத்த வருமானத்தை அரசுக்கு நாளாந்தம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

அந்த வகையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தனியார் போக்குவரத் துத்துறையின் பணிப்பகிஷ்கரிப்பு  சட்ட விரோதமாக செயற்படுவதற்கு பாராமுகம் என்ற சட்டபூர்வத்தை வேண்டி நின்றதற்கு சமமானது எனலாம். என்றாலும் 25,000/ தண்டப்பணம் செலுத்துவதற்கு நாம் எங்கே போவது என்பதே 
சாதாரண சாரதிகளின் கேள்வியாகும்.


எவ்வாறாயினும் சட்டத் திருத்தம் உடனடியாக அமுலுக்கு வராத்தன்மை பின்புலமாக இருக்கத்தக்கதாக அவசரத்தாலும் ஆத்திரத்தாலும் பொறுமை இழந்த தனியார் போக்குவரத்து தரப்பினர் ஒரிரு நாள் வருமானத்தை இழந்ததே மீதம். இந்த நிலையில் குறித்த தரப்பினரின் பிரச்சினைகளைப் பற்றி ஆராயவென குழு தயாராகிறதே ஒழிய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 25000  தண்டப் பணத்தை விலக்கிக் கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளிக்கவில்லை. தப்பித் தவறி ஜனாதிபதியின் நியமனக் குழு குறித்த 25000 ரூபா தண்டப் பணத்தை உறுதிப்படுத்தினால் யாது செய்வது என்ற கேள்வியுமுண்டு. 


எது எப்படியிருப்பினும், 25000 தண்டப்பண சமாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலைமையில் அது இழுபட்டுக் கொண்டு போகலாம். வாகனங்கள் வீதிகளில் ஓடலாம். அதேவேளை பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு பூஜிதவின் இருப்பை பாதுகாக்க வேண்டும் எனும் தோரணையில் பிரதமர் உரைக்கிறார்.


சாகல ரட்ணாயக்கவும் அவருக்கு அதிஉன்னத விசுவாசத்திற்குரியவர். இந்த நிலைமையில் ஜனாதிபதியால் கோரப்பட்ட விளக்கம் ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுடனான ரணிலின் இன்றைய நேர்முகம், பூஜிதவை நியமித்த அரசியலமைப்பு பேரவையின் அணுகுமுறைகள் போன்றவற்றின் பெறுபேறுகள் பொது மக்களால் எதிர்பார்க்கப்படலாம்.


கட்டுரையாளர் சட்டத்தரணி சுயாதீன தேசிய முன்னணியின் தலைவர் ஒலி ஒளிபரப்பாளருமாவார். 

TOTAL VIEWS : 1787
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yl5cw
  PLEASE ENTER CAPTA VALUE.