தமிழருக்கான எதுவுமே புதிய அரசியலமைப்பில் இல்லையயன்பதை தெளிவுபடுத்த வேண்டும்; தமிழ்க் கூட்டமைப்பிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து
2016-12-06 12:30:24 | General

தமிழ் மக்களுக்கான தீர்வின் அடிப்படையிலான வடக்கு கிழக்கு இணைப்பு, இறைமை, சமஷ்டி இல்லையாயின் அரசியலமைப்பு தொடர்பிலான பேச்சு குறித்து கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


இதற்கான பொறுப்பும் கடமையும் உள்ளதென குறிப்பிட்ட அவர் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் ஏன் இந்தியாவின் உதவியை நாடவில்லையென்பது கேள்வியாகவுள்ளதெனவும் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் யாழ்.ஊடக மையத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;


புதிய அரசியலமைப்பில் தீர்வு தொடர்பான விடயம் இடம்பெறுவதால் இதனைக் குழப்பும் வகையில் கருத்து பரிமாறக் கூடாதென தலைவர் இரா.சம்பந்தன் முன்னர் தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வு டிசம்பரில் கிட்டுமென நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 


இது இவ்வாறிருக்க, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தீர்வுத்திட்டம் தொடர்பான அடிப்படை விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.


அதாவது, வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, இறைமை மற்றும் சமஷ்டி என்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவற்றை அடிப்படையாக வைத்தே தேர்தல் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. தலைவர் சம்பந்தன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வு முழுமையான தீர்வாக இருக்க முடியாது என எல்லாக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்தார்.


இவ்வாறான நிலையில் அவர் திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில், அரசியலமைப்பு விடயத்தில் வடக்குகிழக்கு இணைப்பு எட்டப்படவில்லையெனக் குறிப்பிட்டிருந்தார்.  வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வடக்கு கிழக்கு இணைப்பு உடனடி சாத்தியமில்லையென தெரிவித்துள்ளார்.


வடக்குகிழக்கு இணைப்பு, இந்திய  இலங்கை உடன்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்டு 18 வருடங்கள் அவை இணைந்திருந்தன. 2006 இல், இரு மாகாணங்களும் தவறான முறையில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்ற நடைமுறையூடாக பிரிக்கப்பட்டன. 


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தில் வடக்குகிழக்கு இணைக்கப்பட்டதாக உள்ளது.அம்பாறை தவிர்ந்த கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஒரு அலகாகவும் மட்டக்களப்பு, திருமலை இன்னொரு அலகாக வடக்குடன் இணைக்கப்பட்டதாகவும் காணப்பட்டன. சந்திரிகாவினால் வடக்கு கிழக்கு இணைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இவ்வாறான சூழ்நிலையில் தலைவர் சம்பந்தனும் பேச்சாளர் சுமந்திரனும் கூறிய விடயங்கள் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லையென்பது தெளிவாகின்றது. மேலும் பேச்சாளர் சுமந்திரன் இறைமையை தமிழ் மக்கள் வலியுறுத்தவில்லையென பாராளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு எனக் கூறுகின்றனர்.


எனவே தமிழ் மக்களுக்கான தீர்வின் அடிப்படை விடயங்கள் நிராகரிக்கப்பட்டதாக அரசியலமைப்பு தொடர்பான பேச்சுக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
1972 குடியரசு யாப்பு ,1978 ஜே.ஆரின் அரசியலமைப்பு ஆகியவற்றில் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி பங்குபற்றவில்லை.

தாம் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால் அரசியலமைப்பில் பங்குகொள்ளவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தலைவர் சம்பந்தன் புதிய அரசியலமைப்புக்காக வாக்களிக்க வேண்டுமென கூறியதற்கு அமைய தமிழ் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்தனர். 16 ஆசனங்கள் கிடைத்தன.

இவ்வாறு வடக்கு கிழக்கு இணைப்பு சமஷ்டி, சுயநிர்ணய உரிமை போன்ற அடிப்படை விடயங்கள் ஏற்கப்படாத சூழ்நிலையில், புதிய அரசியலமைப்பு தொடர்பிலான விடயங்கள் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.


வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே அரசியலமைப்பில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுண்டா என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பு தலைவர் சம்பந்தனுக்கு உண்டு.


வடக்குகிழக்கு இணைப்பு என்பது தீர்வில் மிச்சசொச்சமாகவுள்ள விடயம். அது சாத்தியமில்லையென தற்போதைய சூழ்நிலையில் கூறுவது கேலிக்குரிய விடயமாகும். தலைவர் சம்பந்தன் சர்வதேச ஆதரவு உள்ளதாக கூறுகின்ற நிலையில் இது தொடர்பில் இந்தியாவின் உதவியை நாடவில்லையென்பது கேள்வியாகவுள்ளது.

தமிழ் இயக்கங்களால் வடக்கு, கிழக்கு இணைப்பு ஏற்கப்பட்டு நிரந்தரமாக்கப்படுமென உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.  அதே தமிழ் தரப்பு இணைப்பு சாத்தியமில்லையெனக் கூறுவது வெட்ககேடான செயல்.
வேறு யாரும் பேசக் கூடாது குழப்பக்கூடாது எனக் கூறும்போது அரசியலமைப்பு என்ன அடிப்படையில் பேசப்படுகின்றது. என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும். அரசாங்கத்துடன் என்ன பேசினார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.


கடந்த காலப் போராட்டங்கள் பெரும்பான்மைவாதத்துக்கு பெரும்பான்மையினர் சொல்வதை கேட்க வேண்டும் என்பவற்றுக்கு எதிராக இருந்தன. இப்போது பெரும்பான்மை சொல்வதை ஏற்கும் தீர்வு இருந்ததால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வாக இருக்காது.


பாதிக்கப்பட்ட மக்களுக்கே வலி தெரியும். போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள், வலியை உணராதவர்கள், போராட்டத்திலிருந்து தூர விலகி நின்றவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வை வைப்பார்களா என்பது கேள்விக்குறியாகவுள்ளதாகவும் தெரிவித்தார். 

TOTAL VIEWS : 2283
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0bert
  PLEASE ENTER CAPTA VALUE.