ரணிலைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தத் துடிக்கும் மகிந்த அணி
2018-01-08 12:14:17 | General

கிராமத்தை சீர் செய்யும் அரசாங்கமே உள்ளூராட்சி சபைகள் எனும் போர்வையில் ஆணை கேட்டு பிரதான கட்சிகளான ஐ.தே.க., சு.க., பொதுஜன பெரமுன, ஜே.வி.பி. போன்ற பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ள தருணம்  பிரசார மேடைகள் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலேயே களை கட்டியுள்ளன.

கிராமங்களுக்கு எந்தக் கட்சியும் இதுவரையில் எதுவுமே செய்யவில்லை எனும் போர்வையிலேயே அத்தனை கட்சிகளும் வாக்குகளை திரட்டவும் சபைகளை கைப்பற்றவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் மத்தியில் கடந்த மூன்றாண்டுகளில் முதன் முதலாகவும் புத்தம் புதியதாகவும் நடைபெறவுள்ள கலப்பு முறையான உள்ளூராட்சித் தேர்தல் கடுமையான விதிமுறைகளாலும் கோட்பாடு மிக்க ஆணைக்குழுவின்  மேற்பார்வையாலும் இறுக்கப்பட்டுள்ளது.

விந்தை என்னவென்றால் சகல கட்சிகளதும் பிரசார கருப்பொருள் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேற்றினை பிணைமுறி மோசடி பற்றிய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு வெளிக்கொணராமை பற்றிய ஆதங்கமாகவுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் பொதுத் தேர்தலுக்காக பிணைமுறி மோசடி தொடர்பாக பேசுவதற்கு பிரசார மேடைகளை பயன்படுத்திக் கொண்ட ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ஷ இன்று பிணைமுறி விசாரணை ஆணைக்குழு பெறுபேறுகளைப் பற்றி விமர்சிப்பதற்காகவும் பிரதமருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை பேசுவதற்காகவும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் தலைமை தாங்குகிறார். 

ஆத்திரமா? கூட்டு பிரளயமா?

எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் எதிர்பார்த்திருந்தோருக்கும் அக்கறையுள்ள தரப்புகளுக்கும் ஏமாற்றமே. அத்தகைய ஏமாற்றத்தின் எதிரொலிகள் ஆத்திரமாகவும் தீப்பொறிகள் போன்றும் கொட்டப்படுவதும் வழமையே. இதனை சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற விதமாக தேர்தல் பிரசாரக் களமும் அமைந்துள்ளமை பலருக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

வெளிப்படையாக தெரியும் உண்மை நிலைமை பொய்யாக்கப்பட்டு விட்டது போன்று பிரமையில் கொதித்தெழுந்துள்ள நிலைமையை பொதுஜன பெரமுன எனக் கூறப்படும் கூட்டு எதிரணியில் அல்லது கூட்டு எதிர்க்கட்சி எனும் பொதுஜன பெரமுனவில் காணமுடிகிறது. 

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் எதிர்பார்க்கப்பட்ட உண்மையான பெறுபேறு மூடி மறைக்கப்பட்டதா எனும் கேள்வி எழுப்பப்படக்கூடிய அளவுக்கு கூட்டு எதிர்க்கட்சி மக்கள் மத்தியில் சந்தேக பிரளயத்தை தோற்றுவித்துள்ளமையை அறிந்து கொண்டிருக்கிறோம்.  கூட்டு எதிர்க்கட்சியின் முதல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சகல அரசியல்வாதிகளும் பிணை முறி மோசடி தொடர்பிலும் காரணகர்த்தாவாக இருந்த பிரதமர் ரணிலை சாடாமல் மேடையை விட்டு இறங்கவில்லை.

மயக்கப்படுத்தலா? மழுங்கடிப்பா?

இதேவேளையில் பிணைமுறி தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பிலான மொழிபெயர்ப்பில் பிரதமர் தொடர்பிலான பிரஸ்தாபங்களை மென்போக்கு கொண்டதாக மாற்றுவதற்கு ஜனாதிபதி அலுவலகம் முனைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அர்ஜுனா மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்காமையும் அவர் மேல் கண்மூடித்தனமான முறையில் நம்பிக்கை கொண்டிருந்தமை பற்றியும் அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதியின் உரையின் போது பின்வருமாறு அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோரால் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் விசேடமாக மகேந்திரனால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை அடியொற்றியே ஆளுநர் நியமனம் இடம்பெற்றதை பிரதமரின் அறிக்கை புலப்படுத்துவதாக  ஆணைக்குழு அபிப்பிராயம் கொண்டுள்ளது. பிரதமர் அதனை செய்திருக்கக்கூடாது என்பதையும் அறிக்கை கூறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. என்றாலும் ஜனாதிபதியின் மொழிபெயர்ப்பு பிரதமரின் பொறுப்புக்கூற வேண்டிய கடமைப்பாட்டை மயக்கப்படுத்தியுள்ளதே தவிர மழுங்கடிக்கவில்லை.

ஏதோ ஒரு வகையில் குருட்டுத்தனமாக அல்லது கண்மூடித்தனமாக போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் நாட்டுத் தலைவரின் உரைக்கேற்றவாறு நாகரிகப்படுத்தப்பட்டுள்ளன என்று கூற முடியும். இருந்த போதிலும் இவ்வளவு பெரிய பதவியை வழங்குகின்ற போது அல்லது பரிந்துரைக்கின்ற போது பரிசீலிக்காததன் நிமித்தம் நியமனத்தின் மூலம் எழக்கூடிய பிரச்சினைக்கு சுயமாகவும் உட்கிடையாகவும் பிரதமர் பொறுப்பாளி என்பதே எதிரணி குற்றச்சாட்டாகும். 

பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திடமா?

எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவும் சிலரால் நியாயப்படுத்தப்படுகிறார். வெற்றியை தேசத்துக்கு கொண்டு வருவாய் என்கிற நம்பிக்கை வைக்கப்பட்டு கிரிக்கெட் அணித் தலைவர் பதவி ஒப்படைக்கப்படுகையில், அணித் தலைவரின் கேவலமான ஆட்டம், அணியின் படுதோல்வி காரணங்களைக் கொண்டு அணித் தலைவர் மீது பழி போட முடியாது தானே என்று நியாயப்படுத்தப்படுகிறார்.

என்றாலும் தோல்வியையும் வேகமான ஆட்டத்தையும் மையமாகக் கொண்டு சம்பந்தப்பட்ட அணித் தலைவர் விலகிக் கொள்ளலாம் தானே என சிலர் தர்க்கிக்கின்றனர். உண்மையில் எதிரணியின் ஒருவரை கோப் குழுவுக்கு தலைமை தாங்கப் பண்ணி அதன் அறிக்கையை குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முதலில் அனுப்பியவர் பிரதமர் ரணிலே ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அதே விதமான ஒரு நடவடிக்கையையே ஜனாதிபதியும் செய்துள்ளார். இடையில் ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு செயற்பட்டுள்ளது.

கண்துடைப்பாகுமா?

சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் ரீதியாக கோவைகளும் அறிக்கைகளும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு மூட்டை கட்டப்பட்டுள்ளன. என்ன நடக்கும்? எது நடக்கும்? என்கிற அடிப்படையில் சகலரது கவனமும் அத்திணைக்களத்தை நோக்கி திசை திரும்பியிருக்கிறது. இராஜாங்கம் தொடர்வதற்கு ஒரு கால அவகாசம், ஒரு கண்துடைப்பு என்று கூறுவோரும் உள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களமும் அரசின் கீழ்வரும் முகவர் திணைக்களமே. சட்டமா அதிபர் அரசின் முகவர். அவ்வப்போது அரசின் ஆலோசனைப்படி செயல்படுபவர்.

அரசுக்கு ஆலோசனையும் வழங்குபவர். முன்னைய ஆட்சிக் காலத்தில் மகிந்த ராஜபக்ஷ தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தை வைத்திருந்தார். எத்தகைய விசாரணைகளை நடத்தவுமில்லை. எத்தகைய ஆவணங்களை அனுப்பி எவருக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முனையவில்லை. மாறாக தற்போதைய ஜனாதிபதி தனது வாளை கூர்மைப்படுத்தி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளார். 

முதல் தருணமா?

எவ்வாறாயினும் தனது சொந்த தவறுகள் தொடர்பில் விசாரித்தறிவதற்காக ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்ததன் மூலம் தனது பாவங்களை வெளிப்படுத்தும் வகையில் தேடுதல் வீச்சை உள்நோக்கி செலுத்தியது. அதிகாரத்திலுள்ள ஒரு அரசாங்கம் இத்தகைய மோசடி ஒன்றை கண்டறிவதற்காக முனைந்த முதல் தருணம் இதுவென சுட்டிக்காட்டப்படுகிறது. தனிக் கட்சி அரசாங்கமாக இருந்திருந்தால் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு தனது சொந்த குளறுபடிகளை ஆராய்வதற்கென இத்தகைய ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதற்கான இணக்கப்பாடு சுமார் 31 வருடங்களுக்கு முன்பு எட்டப்பட்டதாம். 1986 இல் நிறுவப்பட்டதான ஆணைக்குழு தேசிய விமான சேவையான எயார் லங்கா தொடர்புபட்டது. எவ்வாறாயினும் ஆணைக்குழுவின் கண்டறியப்பட்டதான எத்தகைய தகவல்களும் வெளிவரவில்லை என இக்காலகட்டத்தில் நினைவுபடுத்தப்படுகிறது.

சாத்தியமாகுமா நம்பிக்கையில்லா பிரேரணை?

மகேந்திரனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், தகவல்களின் அடிப்படையில் நம்பிக்கை கொண்டார் என்ற அடிப்படையில் அவருக்கு சார்பாக பிரதமர் ரணில் பாராளுமன்றத்தில் அறிக்கை விடுத்தார் என்பதை ஆணைக்குழு தவறு கண்டுள்ள நிலையில், கூட்டு எதிர்க்கட்சி உத்தேச நம்பிக்கையில்லா பிரேரணையை முஸ்தீபு செய்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தை பிழையான முறையில் வழிநடத்தியதாகக் கூறி முன்வைக்க முனைந்தாலும் அதற்கு ஆதரவளிப்பதும் வெற்றி பெறச் செய்வதற்குமான பலத்தின் பின்னணி என்ன என்பது கேள்விக்குரியதாகும்.

ஒரு நம்பிக்கையில்லா தீர்மானமொன்றைக் கொண்டுவர துர்நடத்தை, திறமையீனம் தொடர்பிலான ஆதாரம் கண்டிப்பாக இருக்க வேண்டியுள்ளது. வெறுமனே பாராளுமன்றத்தில் மகேந்திரனை பாதுகாக்கும் வகையிலான ரணிலின் உரையைக் கொண்டும் ஜனாதிபதியின் வார்த்தைகளைக் கொண்டும் துர்நடத்தை, திறனின்மை போன்றவற்றை நிர்ணயிக்க முடியாது போகலாம்.

ஒருவருக்கு நியமனம் வழங்குவதற்கு முன்பு அவர் எவ்வாறு செயற்படுவார் என்பதை கண்காணிப்பதற்கு உள்மனப் பரீட்சையோ திரைப் பரீட்சையோ செய்யக்கூடிய பொறிமுறை இலங்கையில் கிடையாது என்பதை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். 
உண்மையில் இத்தகைய நியமனங்களை மேற்கொள்கையில் வெறுமனே ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோரின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் சிலாகிக்கின்றது. எதிர்கால  மத்திய வங்கி ஆளுநர் போன்ற நியமனங்கள் சுயாதீன ஆணைக்குழுவின் பரிந்துரையில் இடம்பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எதிர் நீச்சலடிப்பா?

இதேவேளை முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தன்மீது இத்தனையளவுக்கு பிரச்சினைகள் எழுந்துள்ள போதிலும் மகிந்த ராஜபக்ஷ போன்று எதிர் நீச்சலடிப்பது போன்று பணியாற்றி வருகின்றமை கூர்ந்து கவனிக்கத்தக்கது. உண்மையில் தனக்குக் கீழ் மத்திய வங்கியோ அது தொடர்பான பொறுப்புகளோ இருக்கவில்லை. அவ்வாறு தனக்கு பொறுப்பாக இராத நிறுவனங்களின் மூலமாக ஏற்பட்ட ஊழல் மோசடிக்கு தான் பொறுப்பாளியல்ல எனக் கூறியுள்ளமை கவனிக்கத்தக்கதே.

என்றாலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொறுப்பாக இருந்த அல்லது இராத அமைச்சர் என்ற வகையிலல்லாது அவர் அனுபவித்த சலுகை மற்றும் அதன் பெயரில் அவரளித்த சாட்சியங்களின் அடிப்படையிலானதுமாகும். எவ்வாறாயினும் அவரது சலனமற்ற அரசியல் நடவடிக்கைகள், முன்னெடுப்புகள் அவரளவிலும் அரசியலளவும் அவரது தூர்ந்து போகாத் தன்மையாகும் எனில் மிகையாகாது.

எது எப்படியிருந்த போதிலும் கூட்டு எதிர்க்கட்சிக்கு வேக்காடு பிடித்திருக்கிறது. எப்படியும் பிரதமரை இராஜினாமா செய்விக்க வேண்டும் என்ற நிலை அழுத்தமாக எழுந்துள்ளது. குற்றவாளிக் கூண்டில் அவரை ஏற்றி அரசியலில் இருந்து  ஒதுங்கச் செய்ய அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இராஜிநாமா செய்கின்ற அரசியல் பாரம்பரியங்கள் இலங்கையில் கிடையாது. ஆணைக்குழு ஐ.தே.க. தலைவரை குற்றம் கண்டிருந்தால் கூட எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தால் கூட அவர் இராஜினாமா செய்திருக்கப் போவதில்லை என்பதை கூட்டு எதிர்க்கட்சி இந்தளவில் உணர்ந்திருக்கும் என்பதை அடித்துக் கூறலாம். தூய அரசியல்வாதி என்ற உணர்வை மகிந்த ராஜபக்ஷவின் பத்தாண்டு கால நிர்வாகத்தைக் கண்டு ரணில் களைந்து விட்டார் போலும்...

கட்டுரையாளர்  சட்டத்தரணி, 
சுயாதீன தேசிய முன்னணியின் தலைவர், 
ஒலி, ஒளிபரப்பாளர். 

 

TOTAL VIEWS : 635
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
cigy6
  PLEASE ENTER CAPTA VALUE.