மலையகக் கல்வியும் எதிர்கால சவால்களும்
2017-11-04 10:08:49 | General

இலங்கையின்  பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்ட  ஆரம்ப காலங்களில் எனது மக்கள் இங்கு   நிரந்தரமாக  குடியமர்த்தப்படவில்லை. தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர் தேவைகளின்  இயல்பு  காரணமாகவே  மலையகத்தில் நிரந்தர குடியிருப்புகளின் பின்னரே தோற்றம் பெற்றன.

இதே காலகட்டத்தில் தான் இந்நாட்டில் தேசிய கல்வி முறைமைக்கான அடித்தளமும்  இடப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொதுபோதனாத் திணைக்களமே பின்னர் கல்வித் திணைக்களமாகவும் சுதந்திரத்திற்கு பின்னர் கல்வி அமைச்சாகவும் பரிமாணம் பெற்றது.

அத்துடன் 1943 ஆம் ஆண்டு விசேட கல்வி ஆணைக்குழு தேசிய கல்வி விருத்திக்கான தூர நோக்கு கொண்ட பல விதந்துரைகளை முன்வைத்தது.  அத்தோடு, காலத்துக்குக்காலம் தேசிய அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட கல்விக் கற்கை நெறிகளுக்கு முகம் கொடுக்கத்தக்க இலங்கையின் கல்வி முறைமையில் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.


 இலங்கையின் உயர்தரமான கல்வி அடைவுகள் எவையும் மலையக் கல்வியில்  உள்வாங்கப்படவில்லை. தேசிய கல்வி முறைமைக்கும் அதன் ஒரு  பகுதியாகிய மலையகக் கல்வி என்னும் உப முறைமைக்கும் இவ்வாறான பாரிய இடைவெளி ஏன் ஏற்பட்டது என்பதையும் எவ்வாறு இவ்விடைவெளியை குறைத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் ஆழமாக  சிந்திக்க வேண்டியுள்ளது. 

மனிதன் தான் வாழ்கின்ற  சமுதாயத்தில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள கல்வி என்பது அத்தியாவசிய கருவியாகக் காணப்படுகின்றது.  இதனாலேயே கல்வியின் தேவை தவிர்க்க முடியா தொன்றாகவுள்ளது. மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்ற இக்காலப் பகுதியில் இலங்கை மலையக கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நன்கு பரிசீலிக்க வேண்டும்.


மலையக பெற்றோர்களின் வறுமை, அவர்களின் அக்கறையின்மை, உயர்கல்விக்கான வசதிகள் இன்மை, பாடசாலை வளப்பற்றாக்குறை, பிள்ளைகளின் வருமானத்தால் குடும்ப வறுமையை குறைக்கும் எண்ணம், இளைஞர்களின் நகர்ப்புறங்களினதும் வெளிநாடுகளினதும் உத்தியோகமோகம் போன்ற பல்வேறு சக்திகள் இன்றும் அன்றும் மலையக கல்வியை சீரழிக்கும் கருவியாகச் செயற்படுகின்றன.

இவ்வாறான  இடையூறுகளும் ஆர்வமின்மையும் இவர்களைத் தொடர்ந்தும் தோட்டத் தொழிலாளர்களாக குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களாக வாழ வழிவகுக்கின்றது. கல்வி ஒரு சமூகத்தில் உயரும்போது  அங்கே வாழ்க்கைத் தரமும் உயர்வு பெறும் என்பது பல்வேறு ஆய்வுகளின் பெறுபேறாகின்றது.


மலையகக் கல்வி வரலாற்று ரீதியான பாரபட்சங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனவே மலையக கல்வியை தேசிய கல்வி நிலைக்கு உயர்த்த வேண்டுமெனில் சில விசேட உதவிகள்  தேவைப்படுகின்றன. மலையகக் கல்வியின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய சகல தரவுகளும் தகவல்களும் சேரிக்கப்பட வேண்டும்.

மலையக கல்வி பற்றிய ஒரு கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும். மலையக் கல்வி விருத்தி பற்றிய எமது கோரிக்கைகளுக்கு ஓர் அறிவு ரீதியான தளத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த கல்வித் தகவல் முறைமை அடிப்படையாக அமையும்.


மலையகக் கல்வி பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மலையகக் கல்வி விருத்திக்கான ஒரு பெருந்திட்டத்தை நாம் தயாரிக்க வேண்டும். இதில் இலக்குகள் மத்திய கால, நீண்ட கால இலக்குகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுவதோடு இத்திட்டச் செயற்பாடுகள் முறையாக மேற்பார்வை செய்யப்படவும் வேண்டும்.

மலையக கல்விக்கான  ஒரு செயலகம் நிறுவப்பட வேண்டும். மலையகக் கல்வி பற்றிய தகவல்களைத் திரட்டுதல்,  பல்வேறு அமைப்புகளினதும் பணிகளை இணைப்பாக்கம் செய்தல், தலையீடு செய்ய வேண்டிய கல்விப் புலங்களை அடையாளம் காணுதல், பல்வேறு உரித்தாளர்களையும் ஒருங்கிணைத்தல், மலையகக் கல்வியில் ஏற்படும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் மதிப்பீடு செய்தல் போன்ற பல்வேறு முக்கிய பணிகளையும் ஆற்றும் மத்திய நிலையமாக இந்த செயலகம் இயங்க வேண்டும். இதன்  மற்றுமொரு பணியானது மலையகக் கல்வி மீதான  வருடாந்த கல்வி மாநாடு நடத்துதல், இத்தகைய மாநாடு  நம் செயற்றிட்டத்தின் வெற்றி  தோல்வி பற்றியும் தற்போதைய  நிலைமைகள் பற்றியும் நம் பணிகளின் வினைத்திறன் பற்றியும் மதிப்பிடுவதற்கும் திட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும்.


 மலையக  கல்வியின் கடந்த காலம் பாதகமானது. எதிர்காலமும் அவ்வாறு அமைந்துவிடக் கூடாதெனில் அதற்கான திட்டமிட்ட செயற்பாடுகள்  மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி வளர்ச்சியும் சமூக மேம்பாடும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல இணைந்துள்ளன.  ஒன்றில்லாமல் மற்றதை அடைந்துவிட முடியாது.

எனினும், மலையக மக்களின் பொருளாதார, சமூக மேம்பாட்டுக்கு உறுதுணையாகவும் அடித்தளமாகவும்  அமைய வேண்டியது கல்வி அபிவிருத்தி  தான் என்பதில் எவ்வித மாறுபாடான கருத்தும் இருக்க முடியாது. இன்று மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மட்டங்களிலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விளக்கமும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு இன்னும் அதிகமாக பரவலாக்க வேண்டும்.


 வசதி குறைந்த மாணவர்கள் தொடர்ந்து கற்பதற்கு நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும். மலையகத்தில் மட்டுமல்லாது பின்தங்கிய சமூகத்தில் யாவரும் தமது பிள்ளைகளை பொருளாதார அலகாகவே பயன்படுத்துகின்றனர்.  அவர்கள்  தமது பிள்ளைகளை  கற்பிக்க வேண்டுமெனில் பிள்ளைகளினால் குடும்பத்துக்கு கிடைக்கும் உதவிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இல்லையெனில், அவர்களால் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு  அனுப்ப முடியாது. சமூகத் தலைமைகள் இவ்வாறான மாற்று ஏற்பாடுகளை வழங்குவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மலையக மக்களுக்கு அரசியல் வழங்குவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மலையக  மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் இருப்பதைப் போல் கல்வித் தலைமைத்துவமும் கட்டியெழுப்பப்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது. இத்தகைய கல்வித் தலைமைத்துவம் அரசியல் தலைமைத்துவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்.


 மலையக கல்வி வளர்ச்சி குறித்து மலையகக் கல்வியியலாளர்களினால் முன்வைக்கப்படும் கருத்துகள், முன்மொழிவுகள் யாவும் அரசியல் முனைப்புகளின்றி நடைமுறைப்படுத்த முடியாது என்பது நாம் அறிந்த விடயமே.  எனவே  மலையகத்தின்  கல்வித் தலைமைத்துவம் முன்வைக்கின்ற மலையக கல்வி விருத்திக்கான  ஆலோசனைகளை மலையகத்தின் அரசியல் தலைமைத்துவத்தின் உதவியுடன் முன்னெடுக்க முடியுமாயின் மலையகக் 
கல்வியும் தேசிய கல்வி முறைமைக்குச் சமனாக வளர்ச்சியடைவது சாத்தியமானதாகும்.
 

செ. சேகர் 
ஆசிரியர், க/ சரஸ்வதி மத்திய கல்லூரி
புசல்லாவ  

TOTAL VIEWS : 567
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
j4qxe
  PLEASE ENTER CAPTA VALUE.