மொழியுரிமை பற்றி எதையும் காணவில்லை
2018-01-02 12:26:38 | General

காலங்கள் உருண்டோடுகின்றன. புதிய ஆண்டுகளும் பிறக்கின்றன. மாற்றங்கள் தான் எதிர்பார்த்தபடி எதுவுமே இடம்பெறாதுள்ளன. ஆம் நமது நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, சமூக நல்லுறவு, புரிந்துணர்வு, அபிவிருத்தி, மனித உரிமைகள், பொறுப்புக் கூறல் என்று எதுவுமே இருந்த இடத்திலிருந்து சற்றும் நகரவேயில்லை.

தொடர்ந்து வந்த துயரங்களிலிருந்து மீட்சியில்லை. தேவையான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ வழியில்லை என்ற ஏக்கம் நாட்டு மக்களிடையே பரவலாக நிலவுவதை அவதானிக்க முடிகின்றது. இவற்றிற்கான காரணம் இந்நாட்டில், நம் நாட்டில் தேங்கிக் கிடக்கும் இனவாதம், மொழிவாதம், மதவாதம், பிரதேசவாதம் போன்ற கொடிய முடக்கு வாதங்களே என்பது உணரப்பட வேண்டும். 

எவை எவ்வாறிருந்த போதிலும் தேர்தல்கள் மட்டும் நடத்தப்படுகின்றன. மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் கல்வி மற்றும் எந்தவொரு தகைமையோ தகுதியோ நோக்கப்படாது குறித்த காலத்திற்கு ஊதியம்  மற்றும் வசதிகள் கூடிய தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

நாட்டின், நாட்டு மக்களின் வரிப் பணத்தில் பல கோடி ரூபா செலவில் தேர்தல்கள் நடத்தப்பட்டு அதே பொது மக்கள் வரிப்பணத்திலிருந்து நாட்டை, மாகாணத்தை, மாநகர,  நகர, பிரதேச சபைகளை ஆள வாக்காளர்களால் பலருக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அடுத்த மாதம் எண்ணாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இவ்வாறான தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இந்நாட்டில் கல்வியமைச்சராக, உள்நாட்டமைச்சராக, ஏன் பிரதமராகவும் கூட இருந்த கலாநிதி விஜயானந்த தகநாயக்க அப்பதவிகள் வகிக்கும் காலத்தில் பொதுப் போக்குவரத்து வாகனங்களான பஸ்களில், புகையிரதங்களில் பயணித்தமை வரலாறாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தினர்.

இன்று ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட தனிப்பட்ட வாகனத்தை நாடும் நிலையுள்ளது. அன்று மக்களைக் கண்டு அரசியல்வாதிகளோ அரசியல் வாதிகளைக் கண்டு மக்களோ அஞ்சும் நிலை இருக்கவில்லை. இன்று நிலைமை மாறிவிட்டதை உணர முடிகின்றது. பொது மக்களின் அன்றாட வாழ்க்ககையில் அனுபவிக்கும் நல்லவற்றையும் அல்லாதவற்றையும் அறிந்து தேவைகளை இனங்கண்டு சீர் செய்ய அரசியல் வாதிகள் மக்களுடன் மக்களாக கலந்து இணைந்து வாழ வேண்டுமேயன்றி ஒதுங்கி, மறைந்து வாழக்கூடாது. ஏன் மக்கள் மத்தியில் வர ஆயுதங்களுடன் கூடிய பாதுகாப்பை அரசியல்வாதிகள் தேடுகின்றனர்? என்ற நியாயமான கேள்விக்கு விடை காண வேண்டும். 

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் புகையிரதங்களிலும் பஸ்களிலும் மக்களுடன் தாமும் சரிசமமாகப் பயணித்தனர். மக்களைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லை. இன்றைய நிலையை நோக்கும் போது  நமது அரசியல் பிரதிநிதிகள் ஏன் மக்களை, நம்மைக் கண்டு அஞ்சி, ஒதுங்கி பாதுகாப்புத் தேடுகின்றனர் என்று புலம்பத் தோன்றுகின்றது.

எது எவ்வாறிருப்பினும், நம்மை ஆள, நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நமது அடிப்படை உரிமைகளைப் பெற்று அனுபவிக்க நமது மக்கள் பிரதிநிதிகள் அதாவது ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரையான சகல தர அரசியல் பிரதிநிதிகளும் செயற்பட வேண்டும். அதற்காகவே அவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

நாட்டு மக்களால் நியமிக்கப்படுகின்றார்கள். நாட்டு மக்கள் விரும்பாவிட்டால் மக்கள் பிரதிநிதிகள் என்போர் தாம் அனுபவிக்கும் தொழிலை இழந்துவிடுவர். அவர்களது பிரதிநிதித்துவமென்ற பதவி மக்களால் பறிக்கப்பட்டு வேறொருவருக்கு வழங்கப்பட்டு விடும். இதுவே ஜனநாயகம்.

இவ்வாறுள்ள நிலையில், நமது நாட்டில் வேரூன்றியுள்ள இனவாத, பிரிவினைவாத சக்திகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படவில்லை. இவை அரசியல் நடத்துவதற்கு அவசியம் என எண்ணப்படுகின்றது.

நாடு எக்கேடு கெட்டாலென்ன? நாம் வளமாக வாழ்ந்தால் போதும் என்ற சித்தாந்தத்தில் அரசியல்வாதிகள் செயற்படும் போது எதிர்பார்க்கும் எவையும் நடைமுறைப்படுத்தப்படப் போவதில்லை. முதலில் நாம் நமது குடும்பம், உறவுகள், அடுத்ததே தேவைப்படுமானால் மட்டும் நாடு, நாட்டு மக்கள் என்பது இன்றைய அரசியல்வாதிகளின் வழியாக உள்ளது. அதுவே நாட்டுக்கு கேடாகவும் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தற்போது புதிதாகத் தயாரிக்கப்படும் அரசியலமைப்பு பற்றி விபரிக்கப்படுகின்றது. அதில் பல நன்மைகள் கிட்டவுள்ளன என்று ஒரு சாராரும் இல்லை இல்லை என்று ஒரு சாராரும் வாதப் பிரதிவாதம் செய்கின்றனர். புதிய அரசியல் அமைப்பு வரைவில் தமிழ் மக்களுக்குச் சார்பான நலன் தரும் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அவை வெளித் தெரியாது மறைந்திருக்கின்றன.

அதனால் தமிழ் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை. உரிய உரிமைகள் கிடைக்கும் என்று உறுதியாக பொறுப்பு வாய்ந்த தமிழ் மக்கள் பிரதிநிதியொருவர் அடிக்கடி கூறி வருகின்றார். அவ்வாறிருந்தால் அது வரவேற்கப்பட வேண்டியது. கிடைக்கவுள்ள அந்த உரிமைகள் வெளியில் தெரியாமல் எம்மைத் தமிழர்களை மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்பதுதான் புரியவில்லை.

இறைவா உனக்குப் புரிகின்றதா என்று கேட்போம். விடை கிடைத்தாலும் கிடைக்கும்.
இந்நாட்டிலே இனங்களுக்கிடையேயான பிளவுகளுக்கு, இனப் பிரச்சினைக்கு கால்கோல் இட்டது 1956 இல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். அச்சட்டத்தின் விளைவே தனி நாடு கேட்டு ஆயுதப் போராட்டம் வரை இந்த நாட்டை இட்டுச் சென்ற அந்தச் சட்டம் இன்றில்லை. 

1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தினால் அச்சட்டம் நீக்கப்பட்டு இன்று நாடு முழுவதற்குமான தேசிய மற்றும் நிர்வாக மொழிகளாக சிங்களமும் தமிழும் ஏற்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழாகவும் ஏனைய மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி சிங்களமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், நாட்டின் குடிமகனொருவர் நாட்டின் எப்பகுதியிலும் தான் விரும்பும் மொழியில் தனது அன்றாடக் கடமைகளை அரச அலுவலகங்களில் ஆற்றிக் கொள்ளலாம் என்றும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இரு மொழி நிர்வாகப் பிரதேச செயலகப் பிரிவுகளுமுள்ளன.

அரசியலமைப்பினூடாக தெளிவாகவே பகிரங்கமாக கூறப்பட்டுள்ள தமிழ் மொழிக்கான உரிமைகள் நாட்டிலே நடைமுறைப்படுத்தப்படுகின்றவா? இல்லையென்பதே விடையாகும். தமிழ் மொழியின் உரிமை பறிக்கப்பட்டு விட்டது. தமிழ் மொழிக்காகப் போராடுவோம். இறுதி வரை போராடுவோம் என்று காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் சத்தியாக்கிரகமே செய்து அடியுதைபட்ட தமிழ் அரசியலின் வழிவந்தவர்களில் எவராவது தமிழ் மொழியின் செயற்பாட்டுரிமை தொடர்பில் அண்மைய காலங்களில் குரல் கொடுத்த வரலாறு எங்கும் பதிவேறவில்லை. மொழியுரிமை சமூகத்தின் அடிப்படை உரிமைகளிலொன்று இல்லையா?

சமூக நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டிய தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தமது பதவிக்காலத்தில் என்னவர் அந்நியர் என்ற பாகுபாடின்றி சகலரது தேவைகளையும் நிறைவேற்றும் பொறுப்பு கொண்டவர்கள். இவ்வாறுள்ள யதார்த்த நிலையை உணர்ந்து, புரிந்து கொண்டு இப்புதிய ஆண்டிலிருந்தாவது புதிய சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி புதைந்து கிடக்கின்றது. பௌத்த சமயத்திற்கு முதலிடம் கொடுக்கப்படும் என்றெல்லாம் பல கருத்துகள் கூறுவோர், நாட்டின் மொழிக் கொள்கை தொடர்பாக எதுவும் கூறாமல் மௌனம் சாதிப்பதேன்? அண்டை நாடான இந்தியாவின் வலியுறுத்தலுடன் கூடிய அழுத்தத்தினாலேயே அரசியலமைப்பின் 13 ஆவது மற்றும் 16 ஆவது திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அத்திருத்தங்கள் நமது நாட்டு தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கையை ஏற்று நல்லெண்ணத்துடன் ஏற்கப்பட்டதோ அல்லது நாட்டின் இன உறவை சீர்செய்ய அரசாங்கத்தினால் விருப்புடன் வழங்கப்பட்டதோ அல்ல. வேண்டா வெறுப்புடன் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமாகவே மொழி தொடர்பான திருத்தங்கள் உள்ளன.

எவ்வாறோ கிடைக்கப் பெற்ற மொழியுரிமையை அவ்வாறே புதிய அரசியலமைப்பிலும் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொறுப்பு நம்மவர்களுக்குள்ளது. மொழியின்றேல் மூச்சில்லை. பேச்சில்லை. இந்நாட்டில் தமிழ் மொழியின் அரசியலமைப்பு ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அக்கறை காட்ட வேண்டும்.

இன்றைய ஆட்சியாளருக்கு பக்கபலமாக இருந்து செயற்படும் பாராளுமன்ற எதிர்க்கட்சியும் அதன் தலைவர் பேச்சாளரும் தமிழ் மக்களின் மொழியுரிமைக்காக குரல் கொடுத்து உறுதிப்படுத்த வேண்டும். மொழி உரிமைக்காக போராட வேண்டிய தேவையில்லை. புதிதாக சட்டங்கள் கொண்டுவர வேண்டிய தேவையுமில்லை. ஏற்கனவே நடைமுறையிலுள்ள, அரசியலமைப்பிலுள்ள மொழிகள் தொடர்பான விதிகளை உரியபடி நடைமுறைப்படுத்துங்கள் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதற்கோ வலியுறுத்துவதற்கோ பாராளுமன்றத்தில் வினா எழுப்புவதற்கோ ஏன் தயங்க வேண்டும்?

உரிமைக் குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம் என்கின்றவர்கள் நாம். இன்று அரசியல் ரீதியாக அரசாங்கத்துடன் உறவுக்கு கைகொடுத்து செயற்படும் நமது தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மொழியுரிமைக்கு குரல் கொடுக்காமலிருப்பது கவலைக்குரியது. அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கான செயற்பாட்டுரிமை தெளிவாகக்  குறிப்பிட்டுள்ளதால் அது போதுமானது என்ற எண்ணமா அல்லது அந்த உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்ற தெரியாமையா நமது தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் நிலை?

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் மாகாண சபைகளில் அங்கம் வகிப்போரும் அதேபோல் புதிதாகத் தெரிவு செய்யப்படவிருக்கும் உள்ளூராட்சி சபைகளின் தமிழ்ப் பிரதிநிதிகளும் தமிழ் மொழியை அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள படி நடைமுறையில் செயற்படுத்தத் தேவையான வழிமுறைகளைக் காண ஒத்துழைக்க வேண்டும். இது சமுதாயப் பொறுப்பு.

மொழியுரிமையை உறுதிப்படுத்தக் கேட்பது இனவாதமல்ல. இன உரிமை. கடந்த காலத்தில் தலைநகர, மாநகர சபையொன்றின் தமிழர் பிரதிநிதியாகவிருந்த தமிழர் ஒருவர் தமிழ் மொழியின் உரிமையை உறுதிப்படுத்த செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்த போது மொழியுரிமை கேட்ட தமிழரை, என்னை இனவாதியென்று பெரும்பான்மையோர் மத்தியில் அறிமுகப்படுத்திய அனுபவமுமுண்டு. அவ்வாறானவர்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகளாயிருப்பதில் என்ன பயன்? தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். 

TOTAL VIEWS : 1296
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
u2wdp
  PLEASE ENTER CAPTA VALUE.