தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படவில்லை; திலகர் எம்.பி.
2017-12-28 11:20:17 | General

தலவாக்கலை நிருபர்


மாற்றமடைந்து வரும் அரசியல் கலாசார சூழலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். 

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகம், கொழும்பு உள்ளடங்கலாக மொத்தமாக ஏழு மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியாக யானைச்சின்னத்திலும் ஒருமித்த முற்போக்கு கூட்டணியாக ஏணி சின்னத்திலும் போட்டியிடுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பு மனு தயாரிப்பு பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் நுவரெலியா மாவட்ட வேட்பு மனுக்களின் உள்ளடக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவ அமைப்பாக யானைச்சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளான தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து வேட்பு மனு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டன. 

ஒன்பது பிரதேச சபைகள், இரண்டு நகர சபைகள், ஒரு  மாநகர சபை உள்ளடங்கலாக பன்னிரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் பன்மைத்துவ பண்புகளுடனானதாக சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அறுபது சதவீத இட ஒதுக்கீடும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு நாற்பது சதவீத இட ஒதுக்கீடுகளும் என்பதாக இணக்கம் காணப்பட்டு அதற்கு அமைவாக வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்ற போதும் கூட தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக மாத்திரம் இருபத்தைந்து சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இதில் பட்டியல் வேட்பாளர்கள் மாத்திரம் அன்றி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களாகவும் பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்படி நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை  லிந்துலை நகரசபை, ஹட்டன் டிக்கோயா நகர சபை, நுவரெலியா பிரதேச சபை,  அக்கரப்பத்தனை பிரதேச சபை, கொட்டகலை பிரதேச சபை, மஸ்கெலியா பிரதேச சபை ஆகியவற்றுக்கு தலா ஒரு வீதமும் வலப்பனை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை ஆகியவற்றில் தலா இரண்டு வீதமும் பெண்கள் நேரடியாக வட்டார வேட்பாளர்களாக தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடுகின்றனர்.

 அனைத்து சபைகளிலும் பட்டியல் உறுப்பினர்களாகவும் பெண்களுக்கு அதிகளவான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர சபையில் மூன்று வட்டார வேட்பாளர்கள் இரண்டு பட்டியல் வேட்பாளர்கள் என ஐவரும்; தலவாக்கலை லிந்துலை நகரசபையில் நான்கு வட்டார வேட்பாளர்கள் நான்கு பட்டியல் வேட்பாளர்கள்  எட்டு பேரும் ஹட்டன் டிக்கோயா நகர சபையில் நான்கு வட்டார வேட்பாளர்கள் 3 பட்டியல் வேட்பாளர்கள் என 7 பேரும்  ஹங்குராங்கத்தை பிரதேச சபையில் ஒரு வட்டார வேட்பாளர் இரண்டு பட்டியல் வேட்பாளர்கள் என மூவரும் வலப்பனை பிரதேச சபையில் எட்டு வட்டார வேட்பாளர்கள், நான்கு பட்டியல் வேட்பாரள்கள் பன்னிருவரும், கொத்மலை பிரதேச சபையில் பன்னிரண்டு வட்டார வேட்பாளர்கள் ஐந்து பட்டியல் வேட்பாளர்கள் என பதினேழு பேரும், நுவரெலியா பிரதேச சபையில் ஏழு வட்டார வேட்பாளர்கள் ஐந்து பட்டியல் வேட்பாளர்கள் என பன்னிருவரும், அக்கரப்பத்தனை பிரதேச சபையில் எட்டு வட்டார வேட்பாளர்கள் ஐந்து பட்டியல் வேட்பாளர்கள் என பதின்மூன்று பேரும் கொட்டகலை பிரதேச சபையில் பத்து வட்டார வேட்பாளர்களும் ஆறு பட்டியல் வேட்பாளர்களுமாக பதினாறு பேரும், நோர்வூட் பிரதேச சபையில் ஒன்பது வட்டார வேட்பாளர்களும் ஐந்து பட்டியல் வேட்பாளர்களும் என பதின்மூவரும், மஸ்கெலியா பிரதேச சபையில் பத்து வட்டார வேட்பாளர்களும் நான்கு வட்டார வேட்பாளர்களும் என பதினான்கு பேரும் அம்பகுமவ பிரதேச சபையில் நான்கு வட்டார வேட்பாளர்களும் ஐந்து பட்டியல் வேட்பாளர்கள் என ஒன்பது பேரும் மொத்தமாக நுவரெலியா மாவட்டத்தில் 132 வேட்பாளர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடுகின்றனர்.

 அவற்றுள் 34 பேர் பெண்களாவர். இருவர்  தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பான சிங்கள வேட்பாளர்கள் என்பதும் சிறப்பம்சமாகும். புதிதாக உருவாக்கபட்ட நான்கு பிரதேச சபைகளிலும் அதிகளவான வேட்பாளர்களை களமிறக்கியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளின் அனைத்து வட்டாரங்களிலும் கூட்டணி வேட்பாளர்களையே களமிறக்கியுள்ளது.

 வேட்பாளர்களில் தெரிவுகளில் நான்கு பட்டதாரி ஆசிரியர்கள், மூன்று அரச ஊழியர்கள், ஒரு வைத்தியர், ஒரு கணக்காளர், ஒரு ஊடகவியலாளர், மூன்று தொழிற்சங்க மூத்த உறுப்பினர்கள், ஐந்து தொழில் உறவு அதிகாரிகள், இரண்டு இளைஞர் பாராளுமன்ற அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக தோட்டத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சுயதொழில் செய்வோர், பெண்ணிலைச் செயற்பாட்டாளர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், தொழிற்சங்க காரியாலய உத்தியோகத்தர்கள் என பன்முகத்தன்மை பிரதிபலிக்கிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிகளான தொழிலாளர் தேசிய முன்னணி 57 சதவீதமான வேட்பாளர்களையும்  மலையக மக்கள் முன்னணி 40 வீதமான வேட்பாளர்களையும் கொண்டிருப்பதோடு, 3 சதவீதம் பொதுவான வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஆசனப்பங்கீட்டிலும் வேட்பு மனு தயாரிப்பு பணியிலும் மலையக மக்கள் முன்னணியினதும் கூட்டணியினதும்  செயலாளர் அ.லோரன்ஸீம் முழுமையாக பங்கேற்றிருந்ததோடு நாட்டின் எப்பாகத்திலும் த.மு.கூ வேட்பு மனுக்களோ வேட்பாளர்களோ நிராகரிக்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

 

TOTAL VIEWS : 995
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
fg3pj
  PLEASE ENTER CAPTA VALUE.