தொடரும் துன்பம்
2017-03-29 11:28:43 | General

தமிழக அகதிமுகாம்களிலிருந்து எதிர்பார்ப்புகளுடன் தாயகம்
திரும்பியவர்களின் தற்போதைய நிலைமை என்ன?

 

2015இல் மதுரையிலுள்ள மல்லங்கினாறு முகாமிலிருந்து விஜயராணி தனது கணவனுடனும் இரு பிள்ளைகளுடனும் தாயகம் திரும்பியிருந்தார். மீனவப் பெண்ணான அவர் இப்போது சிறிய கடை ஒன்றை நடத்துகிறார். அவரின் கணவர் தனியார் கம்பனியில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.

இலங்கையில் இனப் போர் முடிவுக்கு வந்த பின்னர்  சமாதானத்திற்கான எதிர்கால உறுதிமொழி அகதிகள் மத்தியில் நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் தங்கள் நாட்டை விட்டு தசாப்த காலத்திற்கு முன்னர் வெளியேறியிருந்தார்கள். அவர்களில் பலர் தாயகத்திற்கு திரும்பி வந்துள்ளார்கள். மேலும் பலர் வருவதற்குள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வரவேற்பாக அது அமைந்திருக்கின்றதா?  


தரையில் வெட்டப்பட்ட துணித் துண்டுகள் காணப்பட்டன. கவிதாமதி ஜெயமூர்த்தியின் தனிமையான வாழ்வில் இதுவே நம்பிக்கையை ஊட்டுகின்றது.  இரு தையல் மெசின்கள் சுற்றும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவர் புன்முறுவலுடன் அன்பாக வரவேற்றார். அவரின் கடந்த  காலத்தை ஒரு கணம் மறப்பதாக அமைந்திருந்தது. மரூண் நிறத்தில் சல்வார் அணிந்திருந்தார்.

அமைதியாக காணப்பட்டார். ஆனால் கிளிநொச்சியில் இலங்கையராக அவர் வாழ்ந்த போதும் பின்னர் தமிழகத்தில் அகதியாக இருந்த போதும்  எதுவும் அற்றவராக அவர் இருந்தார். 


1983 இல் இனப் போர் வெடித்து 6 வருடங்களின் பின்னர் பெரும்பான்மை 
சிங்களவருக்கும் சிறுபான்மை தமிழருக்குமிடையில் பதற்ற நிலை ஏற்பட்டது. அச்சமயம் ஏழு வயதாக இருந்த கவிதாமதி தனது பெற்றோருடனும் சகோதரருடனும் இந்தியாவுக்குச் சென்றார். தமிழ் நாட்டின் ஒந்தாச்சி மடத்திலுள்ள முகாமில் அகதியாக அவரின் வாழ்க்கை ஆரம்பித்தது. அங்கு ஜெயமூர்த்தியை அவர் திருமணம் செய்தார்.

இப்போது அவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். 2002 இல் யுத்த நிறுத்தம் ஏற்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் கணவருடனும் பிள்ளைகளுடனும் அவர் நாடு திரும்பினார். யுத்தம் விரைவில் நிறைவடைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் நிலைமை மோசமடைந்தது. அந்தக் குடும்பம் இலங்கையிலுள்ள கதிர்காமர் தடுப்பு முகாமிற்கு செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  அச்சமயம் கவிதாமதியின் தாயார் ஒந்தாச்சி மடம் முகாமிற்கு திரும்பி வருமாறு கேட்டிருந்தார்.

ஆனால் கவிதாமதி மறுத்துவிட்டார்.  கிளிநொச்சியிலுள்ள இரத்தினபுரத்தில் தனது காணியில் வீடொன்றை நிர்மாணிக்க விரும்பியிருந்தார். கிளிநொச்சிக்குத் திரும்பி வருவதற்கு மேலும் ஏழு வருடங்கள் அவருக்கு எடுத்தது. இறுதியாக வீட்டுக்குத் திரும்பினார். வெளிநாட்டில் வாழ்ந்த பின்னர் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து பல மைல்கள் தூரம் குடும்பத்துடன் நடந்து சென்று  யுத்த காலத்தில் இராணுவ வாகனத்தில் ஏறியிருந்து சொர்க்கத்தை தேடி நரகக் குழியாக அவர்களின் வாழ்க்கை மாறியிருந்தது. 


இன்று கவிதாமதிக்கு 40 வயது. அவரின் சகோதரி கயல்விழிக்கு 37 வயது. சேலைக்கான சட்டைகள் , சல்வார்கள் இருவரும் தைக்கின்றனர். மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா சம்பாதிக்கின்றனர்.   இப்போது கவிதாமதி தனது தாயார் மற்றும் சகோதரரின் குடும்பத்தை விரும்புகின்றார். அவர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாகவே தங்கியிருப்பதை விரும்பியுள்ளனர்.  

"எனது தாயார் கிளிநொச்சியை இப்போதும் பழைய பின்தங்கிய மாவட்டமாக மின்சார வசதியோ அல்லது மருத்துவ வசதியோ இல்லாத ஒன்றாக நினைக்கிறார். தனது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி இங்கு கிடைக்காது என எனது சகோதரர் நினைக்கிறார். ஆனால் சகலமும் மாறி விட்டது என்று கவிதாமதி கூறுகிறார்.  

எனது சொந்த நகரான கிளிநொச்சியிலிருந்து 1000 வருடங்களுக்கு பின்னர் வாழ்ந்து வருவதாக நான் கருதுகிறேன். நான் முழுமையாக ஆறுதலடைந்துள்ளேன். ஏனெனில் எனது தாய் நாட்டிற்கு திரும்பி வந்துள்ளேன். வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும் கூட தாய்நாட்டிற்கு திரும்பி வந்ததையிட்டு ஆறுதலடைகிறேன்' என்று அவர் கூறுகிறார். 


இத்தகைய கதைகள் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுவானவையாக இருக்கின்றன. இலங்கையில் யுத்தம் குடும்பங்களை துண்டாடி விட்டது. வெளிநாட்டு வாழ்க்கை இந்தியாவில் அவர்களில் பலரை ஒன்றுபடுத்தியிருந்தது. தமிழகத்தில் 110 அகதி முகாம்கள் உள்ளன. பலர் தாயகத்திற்கு திரும்பி வர விரும்புகின்றனர். ஆயினும் தமது துயர் நிறைந்த பழைய வாழ்க்கையை நினைத்தும் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற நிலமையினாலும் தாயகத்திற்கு திரும்பி வர தயக்கத்துடன் உள்ளனர்.  


2009 இல்  யுத்தம் முடிவடைந்த பின்னர் 64 நாடுகளில் 146098 அகதிகள் தங்கியிருந்தனர்.  அவர்களில் 20102016 இற்கு இடையில் குறைந்தது 75 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பி வந்துள்ளனர். 2009 2016 இற்கிடையில் தமிழ் நாட்டிலிருந்து சுயவிருப்பத்தின் பேரில் குறைந்தது 8200 பேரும் மற்றும் வெளியிடங்களில் தங்கியிருந்த 3083 பேரும் இலங்கைக்கு திரும்பி வந்துள்ளதாக தமிழக அகதி மற்றும் புனர்வாழ்வு திணைக்களம் இலங்கை, இலங்கை அரசாங்கம் யு.என்.எச்.சி.ஆர்,  ஈழம் அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு ஆகியவற்றின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 


இது மிகவும் சாதகமான தன்மையாகும். எமது மக்கள் சுய விருப்பத்துடன் திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர் என்று புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்  கூறுகிறார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் புதிய அரசாங்கத்துடன் சமாதானம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திரும்பியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 2990 ஏக்கர் காணிகளையும் திருகோணமலையில் ஆயிரம் ஏக்கர்களையும் நாங்கள் விடுவித்திருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். 


தாயகம் திரும்பி வருதல் என்பது துன்பப்பட்ட அகதிகளுக்கு மகிழ்ச்சியான முடிவை தந்திருக்கவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. 
கல்யாணி அருணகிரிநாதர் (வயது36) தனது கணவன் மற்றும் இரு பிள்ளைகளுடன் 2016 ஒக்டோபரில் திருகோணமலையிலுள்ள தேவ நகரில் இருந்த தனது உடைந்த வீட்டிற்கு வந்துள்ளார். கல்யாணியின் கறுப்பு நிற பாவாடையும் சாம்பல் நிற சட்டையும் கிழிந்து காணப்பட்டன. வீட்டு உதவியாளராக அவர் பணிபுரிகிறார். மாதம் 4500 ரூபா சம்பாதிக்கிறார். அவரது கணவர் விசேட தேவையுடையவர். நாங்கள் திரும்பி வந்த பின்னர் அமைதியான வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என நினைத்தோம். அமைதி இருக்கிறது.

ஆனால் எங்கிருந்து வாழ்க்கையை ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியாது என்று கல்யாணி கூறுகிறார். எதுவும் இல்லை. வாழ்க்கையை கட்டியெழுப்ப பணம் இல்லை. நிதிஉதவி இல்லாததால் பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க முடியாது.  அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களில் எவ்வளவு காலத்திற்கு நான் தங்கியிருக்க முடியும் என்று கல்யாணி கேள்வி எழுப்புகிறார்.  

அதேவேளை தோட்டத்தில் வேலை செய்வதற்கு வேலை தேடி பல மைல் தூரம் தான் நடந்து செல்வதாக கல்யாணியின் தாயார் மகேஸ்வரி செல்வம் கூறுகிறார்.  இங்கிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் பண்ணை ஒன்று உள்ளது. அங்கு விரைவில் எனக்கு வேலை கிடைக்கும் என்று அப்பெண் தெரிவித்தார். 


இலங்கை அரசாங்கத்தின் ஆவணத்தின் பிரகாரம் சுமார் 4200 அகதிகள் திரும்பி வந்துள்ளனர். அவர்களில் 30 சதவீதத்தினர் அமைதியான வாழ்வை முன்னெடுத்துள்ளனர். அவர்களில் அநேகமானோர் தமது காணியை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். அல்லது அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் கடனைப் பெற்றுக்கொள்ளப் போராடுகின்றனர். அல்லது வேலை வாய்ப்பை பெறவோ தமது பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்க்கவோ போராடுகின்றனர். 


எட்டு வயதில் மன்னாரை விட்டு இந்தியாவுக்கு சென்றவர் வேலாயுதம் ஸ்ரீதரன். அவர் 2015 இல் தனது குடும்ப உறுப்பினர் நால்வருடன் திரும்பி வந்துள்ளார்.   சென்னையின் புறநகர் பகுதியிலுள்ள ஏரி ஒன்றில் விழுந்து எனது மூத்த மகன் இறந்து விட்டார். அதனால் நாங்கள் திரும்பிச் செல்வோம் என தீர்மானித்தோம் என்று வேலாயுதம் கூறுகின்றார். மகனின் நினைவால் தொடர்ந்தும் எங்களால் முகாமில் தங்கியிருக்க முடியவில்லை.

வவுனியாவில் வைத்து எமது ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க முடியும் என நாங்கள் நினைத்தோம் ஆனால், ஒவ்வொரு நாளும் புதிய போராட்டமாக அமைந்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 


வேலாயுதம் (வயது38) இப்போது தனது மைத்துனரின் தோட்டத்தில் வேலை செய்கிறார். பப்பாசி, நிலக்கடலை, தக்காளி போன்றவை அங்கு செய்கை பண்ணப்படுகின்றன. எமது தோட்டத்தில் தண்ணீர்  இல்லை. குழாய்க்கிணறு தோண்டவும் எம்மிடம் வசதியில்லை என்று வேலாயுதத்தின் மனைவி சுகந்தினி கூறினார்.  அகதி முகாமில் இருந்த போது சென்னையில் சவர்க்காரம் தயாரிக்கும் கம்பனி ஒன்றில் மேற்பார்வையாளராக சுகந்தினி தொழில் பார்த்தவர்.  இங்கு வேலை கிடைப்பது கடினமாக உள்ளது என்று கூறிய அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பட்டப்படிப்பை அவர் மேற்கொண்டவராவார்.  

அவரும் அவரின் இரண்டு பிள்ளைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் கணவருக்கு உதவுகின்றனர். இன்னமும் வேலாயுதம் தனது பிள்ளைகளுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் முகாமில் பிறந்தவர்கள். 
கிறிஸ்டா செரோமி அருள்நாயகம் (வயது29)  கொழும்பின் களுபோவிலவில் வசிக்கின்றார்.  

வேறு வழி இன்றி தனது 9 வயது மகள் கிறிஸ்ரிகாவை தமிழ் மொழி மூலப் பாடசாலை ஒன்றில் சேர்த்திருக்கிறார். ஆங்கில மொழி மூலப் பாடசாலைக்கு மகளை அனுப்பி வைப்பதற்கான வசதி அவரிடம் இல்லை. ஏனெனில் இங்குள்ள பாடசாலைகளின் பாட விதானங்கள் தமிழ் நாட்டில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கப்படுவனவற்றிலும் பார்க்க வேறுபட்டவை. இலங்கையில் பயன்படுத்தப்படும் தமிழ் வார்த்தைகள் வேறுபட்டவையாகும். எனது மகள் தமிழ் நாட்டிலுள்ள பாடசாலையில் கற்றதிலும் பார்க்க இவை வேறுபட்டவையாக இருக்கிறது என்று கிறிஸ்ரா கூறுகிறார். அவர் தாதியாக பணியாற்றுகிறார்.  


ஜஸ்மின் (வயது15) ஈரோட்டிலுள்ள அகதிகள் முகாமில் பிறந்து வளர்ந்தவர்.  யாழ்ப்பாணத்தில் கோப்பாய்க்கு அருகிலுள்ள தனது பாடசாலையில்  அவரின் நண்பர்கள், ஆசிரியர்களுக்கு அவர் சிரிப்பானவராக காணப்பட்டார். இலங்கைத் தமிழ் வார்த்தைகளில் பலவற்றை அவர் அறிந்திருக்கவில்லை.  குரக்கன் என்ற இலங்கைத் தமிழ் வார்த்தைக்கு அவர் கேழ்வரகு என எழுதியிருந்தார்.  எனது மகளுக்கு தமிழ் தெரியாது என ஆசிரியர்கள் முறைப்பாடு தெரிவித்தனர்.

அதனால் அவர் உயர்வகுப்பிற்கு தரமுயர்த்துவதற்கு முடியாமல் போய்விட்டது என்று ஜஸ்மினின் தாயார் கமலராணி கூறுகிறார். அதனால் ஜஸ்மினுக்கு விசேட தனிப்பட்ட வகுப்புகளை ஏற்பாடு செய்திருந்தார். ஜஸ்மின் டாக்டராக வருவதற்கு விரும்புகிறார். ஆனால் இது கடினமான இலக்காக கமலராணிக்கு காணப்படுகிறது. கமலராணியின் கணவர் சிவகணேசன் கணபதிப்பிள்ளை விசேட தேவையுடையவர்.

இப்போது கமலராணி வீடொன்றைக் கட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் தனது வளையல்களை அடைமானம் வைக்க வேண்டியிருந்தது.  50 ஆயிரம் ரூபாவிற்கு அடைமானமும் மற்றும் நட்புறவு ரீதியில் 3 இலட்சம் ரூபாவும் அவர் வீட்டைக் கட்ட கடன் பெறவேண்டியிருந்தது. அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் அவருக்கு 7 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா கிடைத்திருந்தது.  

வீடமைப்பு திட்டத்தில் சிறிய மாற்றத்தை மேற்கொள்ள இந்தத் தொகை போதாமலுள்ளது. எனது சம்பாத்தியத்தை விட எனது கடன் அதிகமாகும் என்று அவர் கூறுகிறார்.  அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டம் இலங்கையில் அகதிகளுக்கு மட்டுமன்றி உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கும்  பயனளித்துள்ளது.

இலங்கையின் புனர்வாழ்வு மீள்குடியேற்ற திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் பிரகாரம் மீள்குடியேற்றத்திற்கு 14000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட, கிழக்கு  மாவட்டங்களுக்கு வீடமைப்பு திட்டங்களுக்காக 8634 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 


ஆனால், பல விண்ணப்பங்களை அனுப்பியிருந்தும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் பரந்தனைச் சேர்ந்த முத்தையா வேலாயுதபிள்ளை போன்றவர்களுக்கு கிடைக்கவில்லை. அத்துடன், விசுவமடுவிலுள்ள அவரின் காணியையும் அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் 65 வயதுடைய அந்த மனிதர்  ஐந்து ஏக்கர் காணியை 5 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளார்.

தனது மனைவியின் நகையை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தினால் ஒரு பகுதி பணத்தை அவரால் திரட்ட முடிந்தது. மதுரைக்கு அருகே உச்சப்பட்டி முகாமில் அகதியாக இருந்த போது 23 வருடங்களாக பால்காரராக சம்பாதித்த பணம் அவருக்கு உதவியிருந்தது. இப்போது ஒரு அறை வீட்டில் அவர் தனியாக வாழ்கிறார். வீட்டைச் சூழ நெல் வயல் காணப்படுகிறது. அவரின் மனைவி, இரு மகன்மாருடன் கொழும்பில் வாழ்கிறார். அவரின் மூத்த மகன் சாரதியாவார். இளையமகன் சி.சி.ரி.வி கம்பனியில் பணி புரிகிறார். 


தாயகம் திரும்புவோர் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினையாக வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது. உதாரணமாக ராஜ்மோகன் அப்துல் கனி (வயது28) திருச்சிராப்பள்ளியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நுண்உயிரியலில் எம்.பில். கற்றிருக்கிறார்.  அவரும் அவரின் தாய் மற்றும் சகோதரியும் 1990 களில் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர்.

அவரின் தந்தை அப்துல் கனி புலியில் இருந்தவர். கொல்லப்பட்டார். 2014 இல் ராஜ்மோகன் திரும்பி வந்துள்ளார். ஆனால் அவரின் தாயார் சீலா, சகோதரி ரஜீவி புதுக்கோட்டை, தோப்புக்கொல்லை முகாமில் தங்கிவிட்டனர். இதுவரை அவர் தொழில் ஒன்றையும் கற்றுக்கொள்ள முடியவில்லை.ஏனெனில், அவர் பெற்றிருந்த பட்டம் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நுண்ணுயிரியல் திணைக்களத்தை ஆரம்பித்திருக்கின்றபோதிலும் விரிவுரையாளர்களாக நியமிக்கப்படும்போது இலங்கைப் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் கூறுகிறார். இப்போது அமைப்பு ஒன்றில் அலுவலக எழுதுவினைஞராக அவர் பணி புரிகிறார்.  திரும்பி வரும் அகதிகள் மத்தியில் செயற்படும் அமைப்பே அவர் பணிபுரியும் இடமாகும்.தான் விரைவில் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வார் என்று அவர் கூறுகிறார். ஆனால் ரம்யா ஆறுமுகம் (வயது26) அவரின் சகோதரி அகிலவேணி (வயது28) ஆகியோர் அதிர்ஷ்டமானவர்கள். தமிழ்நாட்டின் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரம்யா எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார். அவர் கணக்காளராக பணிபுரிகிறார். அகிலவேணி மருத்துவ மாதாக வவுனியாவில் இருக்கின்றார்.

அவர்களின் மூத்த சகோதரன் கேதீஸ்வரன் வர்ணம் தீட்டுபவராவார்.  ஆனால், அதிர்ஷ்டம் எப்போதும் அவர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. அநேகமான இலங்கை அகதிகள் போன்றே படகு அவர்களின் கதையில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. அவர்களின் பெற்றோர் ஆறுமுகமும் சண்முகேஸ்வரியும் 1987  இல் மன்னாரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு சட்டவிரோதமாக படகில் சென்றவர்கள். மைலம்பாடி முகாமில் 3 வருடங்கள் இருந்த பின்னர் 1990 இல் அவர்கள் வவுனியாவிற்கு தமது இரு பிள்ளைகளுடன் திரும்பி வந்திருந்தனர்.

அதன் பின் சில மாதங்களில்  இராமேஸ்வரத்திற்கு சட்ட விரோதமாக அவர்கள் படகில் சென்றுள்ளனர். அச்சமயம் சண்முகேஸ்வரி மூன்றாவது பிள்ளையை வயிற்றில் சுமந்திருந்தார்.  1997 இல் இராமேஸ்வரத்திலிருந்து ஆறுமுகம் தலைமன்னாருக்கு படகில் சென்றார். வீட்டின் நிலவரத்தை அறிந்து வருவதற்காக அவர் பயணம் மேற்கொண்டார். ஆனால் படகு மூழ்கிவிட்டது. சண்முகேஸ்வரி கணவனைத் தேடிச் சென்றார். ஆனால் கண்டுபிடிக்கவில்லை.

அவர் முகாமிற்கு உடைந்த மனதுடன் திரும்பிச் சென்றார். அங்கு பிள்ளைகளைப் பராமரிக்க ஆடைகளை விற்பனை செய்து வந்தார். ஆயினும், பிள்ளைகளின் கல்விக்கான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. கேதீஸ்வரன் பாடசாலையிலிருந்து விலகிவிட்டார். 2004 இல் அகிலவேணி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு சண்முகேஸ்வரியின் பெற்றோரும் சகோதரர்களும் அகிலவேணியைக் கவனித்துக் கொண்டனர். ரம்யா எம்.பி.ஏ. பூர்த்தி செய்த பின்னர் 2014 இல் அக்குடும்பம் இலங்கைக்குத் திரும்பி வந்தது. 


யுத்தத்தின் வடுக்கள் இப்போதும் கே.சூரியனை தோண்டித்துருவிக்கொண்டிருக்கின்றன. 14 வயதில் புலிப் போராளியாக இருந்தவர் அவர். மருத்துவ உதவியாளராக அவர் பணிபுரிந்தவர். காயமடைந்த புலி உறுப்பினர்களுக்கு அவர் சிகிச்சையளித்தவர்.

1995 இல் வன்னிக் காட்டில் அவர் பணிபுரிந்தார். 1996 இல் புலி அமைப்பிலிருந்து விலகி பெற்றோருடன் வசிக்கச் சென்றார். ஆனால், 1997 இல் மீண்டும் புலிகளிடம் திரும்பிச் சென்றுள்ளார். பரந்தனில் இடம்பெற்ற இராணுவத் தாக்குதலில் அவர் தனது இடது காலை இழந்துவிட்டார். இடது காதும் அவருக்கு கேட்காமல் போய்விட்டது. 


சிகிச்சை பெற்ற பின்னர் திரும்ப பெற்றோரிடம் சென்றிருந்ததாகவும் ஆனால் 2004 இல் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவரை புலிகள் விரும்பிய போது தனது சகோதரர்கள் மூவரையும் பாதுகாப்பதற்காக தான் போவதென முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். யுத்தத்திற்குப் பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமிற்கு அவர் சென்றிருந்தார்.

அங்கிருந்து 3 இலட்சம் ரூபா செலுத்தி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். மதுரை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைகளில் அவர் தனது காயத்திற்கு சிகிச்சை பெற்றிருந்தார். 2010 இல் அவர் நாடு திரும்பியிருந்தார். ஆனால் விமான நிலையத்தில்  தடுத்து வைக்கப்பட்டார். காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு தான் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறுகிறார்.

2014 அக்டோபரில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இப்போது அவ்வப்போது கிடைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார். கட்டிட நிர்மாண இடங்களில் அவர் வேலை செய்கின்றார். அவரின் மனைவி சிவதேவி வுவுனியா மருத்துவமனையில் மருத்துவமாதாக பணிபுரிகிறார். அவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ இப்போது விரும்புகிறார்.                

த வீக் 

TOTAL VIEWS : 1303
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ew9vi
  PLEASE ENTER CAPTA VALUE.