அளித்த வாக்குறுதிகளை கொழும்பு மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டுகின்றது ஒக்லாண்ட் நிறுவனம்
2017-03-21 12:08:27 | General

சர்வதேசத்திற்கான உறுதிமொழிகளை இலங்கையின் நிர்வாகம் கேலிக்கூத்தாக்கும் போக்கை கொண்டிருக்கும் நிலையில் கொழும்பை பதிலளிக்கும் கடப்பாடு கொண்டதாக்குவது சர்வதேச சமூகத்திற்கு  அவசியமான விடயமாக உள்ளது என ஒக்லாண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.


ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையின் நிலைமாற்று நீதி, மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சந்திப்பை மேற்கொண்டுள்ள நிலையில் அந்த அமைப்பு இதனைத் தெரிவித்திருக்கிறது. 


நீதி மறுக்கப்பட்ட விடயமானது பல விடயங்கள் தொடர்ந்துகொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவும் காணி விடுவிப்பும் மீள்குடியேற்றமும் தொடர்ந்தும் பிரச்சினையாக இருந்து வருவதாகவும் நிலைமாற்று நீதி தொடர்பாக சர்வதேசத்திற்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 


இலங்கை இராணுவம் பாரியளவு நிலப்பகுதிகளில் தொடர்ந்தும் நிலைகொண்டிருக்கிறது. அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணியும் தரம் குறைந்ததாக காணப்படுகிறது. பலர் தமது வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு இது தடையாக அமைந்திருக்கிறது.

உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடமைப்பு மற்றும் உள்சார் கட்டமைப்பு தேவைகள் பாரியளவில் நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது. மீள்குடியேற்றம் தொடர்பாக எப்போதுமே காலவரையறைகள் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த விடயம் அரசாங்கத்தின் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 


2009 இல் யுத்தம் முடிவடைந்த போதிலும் நாட்டின் இராணுவத்திற்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு இரண்டு மடங்காக இருந்து வருகிறது. வடக்கு
கிழக்கை இராணுவ சூனியமயமாக்கும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்த இந்த விடயம் பாரதூரமான சந்தேகத்தை எழுப்புகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 8 வருடங்கள் ஆகின்றன.

ஆயினும் பல்லாயிரக்கணக்கானோர் இப்போதும் இடம்பெயர்ந்தோர்களாக நாட்டில் உள்ளன. இந்தியாவில் இப்போதும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் அகதிகள் உள்ளனர்‘ என்று ஒக்லாண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டல் தெரிவித்திருக்கிறார்.


"இந்த நிலைவரங்களில் இராணுவ முகாம்களுக்காக காணிகளில் இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பது கவலைக்குரியதாகும். அத்துடன் வர்த்தக  நடவடிக்கைளிலும் ஈடுபட்டிருக்கிறது. அத்துடன் வடக்குகிழக்கில் ஆடம்பர சுற்றுலா விடுதிகளையும் நடத்துகிறது' என்றுஅவர் கூறியுள்ளார்.

"மறுக்கப்பட்ட நீதி' என்ற தலைப்பிலான இந்த அறிக்கை கடந்த 16 மாதங்களாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாற்று நீதி குறித்து தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட செயற்பாடுகளையும் பரிசீலித்துள்ளது. வல்லுறவு, சித்திரவதை, கடத்தல், பொதுமக்கள், சிறைக்கைதிகள், நிவாரணப்பணியாளர்கள், கொலைகள் உட்பட போர்க்குற்றங்களுக்கு நீதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சியாக அந்த தீர்மானம் அமைந்திருந்தது.

நீதி முறைமையின் கீழ் குற்றங்கள் இழைத்தவர்கள் தண்டிக்கப்படாமலும் நீதி, தீர்வு காணப்படாமலும் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதேவேளை யுத்தத்தின் இறுதியில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான விவகாரங்களுக்கும் தீர்வு காணப்படவேண்டுமென கோருவதாக ஐ.நா.தீர்மானம் அமைந்திருந்தது.


இந்தப் பரிசீலனை நீதி தொடர்பான கவலையான பிரதிமையை வெளிப்படுத்துகின்றது. நீதி மறுக்கப்படுகின்றது. நாட்டில் உள்ள தண்டனை விலக்கீட்டுச் சிறப்புக் கலாசாரத்தை முன்னிறுத்திக் காண்பிக்கின்றது. அரசாங்கம் தனது உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்கியுள்ளது. போர்க்குற்ற நீதிமன்றத்தில் சர்வதேச சட்ட நிபுணர்களை உள்ளீர்த்துக்கொள்வதென்ற தனது வாக்குறுதியிலிருந்தும் பின்வாங்கியுள்ளது.

இராணுவத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக எவராவது குற்றஞ்சாட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட அச்சுறுத்தப்படுகின்றது. அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது என்று மிட்டல் கூறியுள்ளார். நிலைமாற்று நீதி தொடர்பான முன்னேற்றமாக இது  அமைந்திருக்கவில்லை.

சிறிசேன நிர்வாகத்தின் போக்கு அதன் சர்வதேச கடப்பாடுகளைக் கேலிக்கூத்தாக்குகின்றது. நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகம் பதிலளிக்கும் கடப்பாடு கொண்டதாக்குவது அத்தியாவசியமானதாகும் என்றும் அனுராதா மிட்டல் கூறியுள்ளார். 


இலங்கையை யுத்தத்துக்குப் பின்னரான மனித உரிமைகள் துஷ்பிரயோங்கள், காணி விவகாரங்கள் என்பனவற்றை பரிசீலிக்கும் ஒக்லாண்ட் நிறுவனத்தின் 4 ஆவது அறிக்கையாக மறுக்கப்பட்ட நீதி என்ற அறிக்கை அமைந்திருக்கின்றது. 
ஒக்லாண்ட் நிறுவனமானது சுயாதீனமான கொள்கை பற்றிய புத்திஜீவிகள் அமைப்பாகும்.

நெருக்கடியான சமூக, பொருளாதார, சுற்றாடல் விவகாரங்கள் தொடர்பாக துணிச்சலான செயற்பாட்டை மேற்கொள்ள புதிய சிந்தனைகளை ஏற்படுத்தும் புத்திஜீவிகள் அமைப்பே இந்த நிறுவனமாகும். 

TOTAL VIEWS : 1208
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5ffir
  PLEASE ENTER CAPTA VALUE.