பெற்றோல் தட்டுப்பாடு; விதியா? சதியா?
2017-11-08 10:36:59 | General

இலங்கையின் புதுப்பிக்கக்கூடிய சக்தி வளங்களின் உற்பத்தி மிகக் குறைந்தளவிலேயே இருக்கின்றது. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகின்ற சக்தி வளங்களை நம்பியே இலங்கை இருக்கின்றது.

அவ்வாறான நிலையில், அவற்றில் தட்டுப்பாடுகளோ அல்லது கலப்படங்களோ மேற்கொள்ளப்படுமிடத்தில் அவற்றை நம்பியிருக்கின்றவர்கள் பெரும் நட்டத்தை சந்திக்க வேண்டியேற்படுகின்றது. தற்போது கடந்த சில நாட்களாக இலங்கையில் பெற்றோலுக்கான தட்டுப்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.

இதனால் வாகன ஓட்டுனர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதுடன்,  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.


இலங்கையில் மனிதருக்கு இல்லாத பாதுகாப்பு பெற்றோலுக்கு வழங்கப்பட்டிருப்பதை கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்க்க முடிந்தது. எனவே இதன்மூலம் இதன் முக்கியத்துவத்தையும் உணர முடிகின்றது.

இதுவொரு செயற்கையான தட்டுப்பாடென்றே அரசாங்கத்தால் விபரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு செயற்கையான நெருக்கடி நிலையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தக்கூடிய தனி மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் இலங்கையில் இன்னும் இருக்கின்றனவா? என்ற கேள்வியை நாம் எமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனம் இறக்குமதி செய்த பெற்றோல் தரக்குறைவானது என்பதால் எரிபொருள் விநியோகத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டதாக அரசாங்கம் விளக்கமளித்தது.


இதனால் மக்கள் பெற்றோலை சிக்கனமாக பயன்படுத்துமாறு பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில் ஐ.ஓ.சி. நிறுவனம் தருவித்த பெற்றோல் தரக்குறைவானதென கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதனை விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டு கப்பலும் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.

இதுவே பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணமாக இருப்பதாக அரசாங்கத்தால் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பெற்றொலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் கையிருப்பு தொடர்பில் எவற்றையும் அறிந்திருக்கவில்லையா? எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் மேற்பார்வை செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பதுவே மக்களுடைய பொதுவான கேள்வியாக இருக்கின்றது.

பெற்றோல் பாவனைக்கு தட்டுப்பாடு இல்லையென்று கூறினால் மக்களை சிக்கனமாக எரிபொருளை பாவிப்பதற்கு அறிவுறுத்துவது ஏன்? மக்கள் எரிபொருளைக் கொண்டுசென்று குடிப்பதற்கோ ஏனைய வீட்டுப் பாவனைகளுக்கோ பயன்படுத்துவதில்லை. அதிகமாக வாகனங்களை இயக்கவே பயன்படுத்துகின்றனர்.

வாகனங்களின் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை நம்பியே பெரும்பாலான வாகனச் சாரதிகள் இருக்கின்றனர். அதேபோலவே பயணிகளும் வாகனப் போக்குவரத்தையே அதிகம் நம்பியிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் கவனயீனமாக இருப்பது கண்டனத்துக்குரியதாகும். 


குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் தன் அன்றாட வருமானத்தை நம்பியே இருக்கின்றனர். இதனால் இத்தட்டுப்பாடு விடயமானது இவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தோடு மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தமது வாகனங்களுக்கான எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.

உலகளவில் அதிகமான மக்கள் உணவு மற்றும் சக்தி வளங்களுக்காக அதிக தொகையினை செலவு செய்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகின்ற எரிபொருளில் 40 வீதமானவை பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகின்றது.

இலங்கையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்கள் குறித்த நேரத்தில் இலங்கையை வந்தடையவில்லையென தெரிவிக்கப்படுகிறது. அது மேலும் தாமதமானால் நாடு முழுவதுமான போக்குவரத்துச் சேவைகள் பாரிய நெருக்கடியினை சந்திக்க வேண்டியேற்படலாம்.

இலங்கையில் ஒரு நாளைக்கு 18002000 மெற்றிக் தொன் வரையான எரிபொருளானது நுகரப்படுகின்றது. ஆனால் 2500 மெற்றிக் தொன் எரிபொருளே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் இலங்கையை வந்தடையும் வரை நுகர்வோரின் தேவையை எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்கள் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.


இதனால் ஏற்பட்ட சர்ச்சைகளே நுகர்வோர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணமாக இருந்திருக்கின்றன. மத்திய கிழக்கு துறைமுகத்திலிருந்து எரிபொருட்கள் கப்பலில் அக்டோபர் 26 ஆம் திகதியே அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 29 அக்டோபர் வரை அச்செயற்பாடானது இடம்பெற்றிருக்கவில்லை. இதேவேளை இந்தியாவின் எண்ணெய் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெற்றிக் தொன் பெற்றோலும் பாவனைக்கு உகந்ததல்ல என்ற காரணத்தால் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுகூட பரிசோதனையில் தரம் குறைவென நிரூபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலையில் இருக்கின்ற எண்ணெய்க் குதங்களில் 15 ஐ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்க வேண்டுமெனக் கூறப்பட்ட போதிலும் 10 ஐ மட்டுமே வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்திய எண்ணெய் நிறுவனம் உள்ளூர் எண்ணெய் சந்தையில் 20 வீதமான பங்குகளை கொண்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய பொது ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர்  ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்குத் தேவையான 80 வீதமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஆனால் 10,000 மெற்றிக் தொன் எரிபொருளே கையிருப்பில் இருப்பதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு 10000 மெற்றிக் தொன்களே இருக்குமாயின், அது இரண்டு நாட்களுக்கே போதுமானதாக இருக்கும். ஆனால் இலங்கையில் ஒரு நாளைக்கு 4000  5000 மெற்றிக் தொன்கள்  எரிபொருள் பாவனைக்குத் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் பெற்றோலிய வளத்துறை அமைச்சால் உடனடியாக கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்டது. இருப்பினும் நிராகரிக்கப்பட்ட பெற்றோல் தொகுதி திருகோணமலை துறைமுகத்தில் இன்னமும் காணப்படுவதாகவும் அதன் நோக்கம் என்னவெனத் தெரியவில்லையெனவும் பெற்றோலிய கூட்டுத்தாபன பொது ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஐ.ஓ.சி. முகாமைத்துவத்தினர் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உயரதிகாரிகளைச் சந்தித்துள்ளனரென தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் நிராகரிக்கப்பட்ட தொகுதியை மீள அனுமதிப்பதற்கான நடவடிக்கையென்றுதான் தாம் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய வரட்சியான காலப்பகுதியில் ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறையினால் எரிபொருள் இறக்குமதியானது இரு மடங்காக அதிகரித்திருந்தது. இந்நிலைமையானது சில காலங்களாகவே இலங்கையில் நீடித்து வந்திருந்தது. தெற்காசிய நாடுகளில் கடந்த 40 வருடங்களாகவே மோசமான வரட்சி நிலைமை நீடித்து வருகின்றது.


இவ்வருடம் ஜனவரி மாதம் 260,750 க்கும் அதிகமான பரல் டீசல் இறக்குமதி செய்யப்பட்டது. இது 2016 டிசம்பர் மாதத்தைவிட அதிகமாகும். மற்றும் 260,000 பரல் எரிபொருள் எண்ணெயும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையானது ஒரு நாளைக்கு அண்ணளவாக 26000 - 32000 பரல் டீசலும் 6000 - 10000 வரையான எரிபொருள் எண்ணையையும் இறக்குமதி செய்கின்றது.

அத்தோடு இலங்கையில் எரிபொருள் எண்ணெய்க்கான கிராக்கி 14 வீதமாக அதிகரித்து 2017 இல் ஒரு நாளைக்கு 24000 ஆக காணப்பட்டதுடன், டீசலுக்கான கிராக்கி 7 வீதமாக அதிகரித்து ஒரு நாளைக்கான இறக்குமதி 53000 பரல்களாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


அதேவேளை கடந்த சில மாதங்களாக  பெற்றோலியப் பொருட்களுக்கான விலையினை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வந்திருந்தது. ஆனால் அவ்வாறானதொரு கோரிக்கை எவையும் முன்வைக்கப்படவில்லையென பெற்றோலியத்துறை அமைச்சு குறிப்பிட்டிருந்தாலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற ஒரு லீற்றர் பெற்றோலில் 16 ரூபாவும் ஒரு லீற்றர் டீசலில் 6 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை பல்வேறு தருணங்களில் ஏற்ற இறக்கமாகவே இருந்துள்ளது. 2015 ஜனவரியில் 50.23 அ.டொலர், 2016 ஜனவரி 29.49 அ.டொலர், 2016 டிசம்பர் 54.63 அ.டொலர், 2017 இல் 51.49 அ.டொலர் என்ற அளவிலேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இவ்வாறு இலங்கையில் எரிபொருட்கள் பல்வேறு ரீதியில் விமர்சனங்களைப் பெற்று வந்திருக்கின்றன. இறுதியாக சமீபத்திய தட்டுப்பாடு காணப்படுகிறது. இவை திட்டமிட்டதொரு செயற்பாடெனக் கூறப்பட்டாலும் அதற்கான முகாந்திரம் தொடர்பில் விரிவான விளக்கமில்லை.

இந்த பெற்றோல் தட்டுப்பாடானது மக்களை அதிகம் பதற்றத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியிருக்கிறது. ஆட்டோவில் பாடசாலை செல்கின்ற மாணவர்கள் அதிகமாகவே சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். அதைவிடவும் தொழிலுக்குச் செல்பவர்கள், மோட்டார் வண்டிகளில் பயணத்தை அமைத்துக் கொள்பவர்களென சகலரும் எரிபொருள் நெருக்கடியால் சிக்கலை எதிர்கொண்டிருந்தனர்.


வீதியை மொய்த்துக் காணப்படும் ஆட்டோக்கள் கடந்த சில நாட்களாக விடுமுறை எடுத்துக் கொண்டது போல் காணாமல் போய்விட்டன. சில ஆட்டோக்களில் அதிக கட்டணங்களை வசூலிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. கடந்த மூன்று நாட்களாக ஆட்டோ சாரதிகள் வருமானத்தை ஈட்டுவதிலும் அதிக பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர்.

நாடு முழுவதிலும் இந்திய எண்ணெய் கம்பனிக்குச் சொந்தமான 199 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 850 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாட்டினால் இடையூறுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாரதிகள் மணிக்கணக்கில் காத்திருப்பதையும் சில எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் முடிந்து பெற்றோல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சில நிரப்பு நிலையங்களில் அமைதியின்மை மற்றும் மோதல் நிலைமைகளையும் காணக் கூடியதாகவிருந்தது. சிலர் தேவைக்கதிகமாக போத்தல்களிலும் கேன்களிலும் பெற்றோலை கொள்வனவு  செய்து வெளியில் விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு பல்வேறு நெருக்கடிகள் நாடு பூராகவும் பெற்றோல் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ளன. எனவே இவ்வாறான நிலைமைகளை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த நெருக்கடி நிலைமையினை பயன்படுத்தி கள்ளச் சந்தைகளில் அதிக இலாபம் பெற முயற்சிப்பதையும் தடுக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் நாட்டின் அனைத்து மக்களும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிக பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி வரும். 

TOTAL VIEWS : 901
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
rolo4
  PLEASE ENTER CAPTA VALUE.