வரலாற்றுப் பின்புலத்தில் தினக்குரல்
2017-04-06 11:20:15 | General

உளநெருக்கீடும் உளப் பதகளிப்பும் நிலவிய போர்ச் சூழலிலே செய்தி மற்றும் தகவல் கையளிப்புக்கும் மேலான ஆக்கப்பணியை மேற்கொண்டமை இலங்கையின் தமிழ் நாளிதழ்களுக்குரிய சமூகப் பரிமாணம். 


செய்தித் தணிக்கை என்பது இயல்பாகவே மக்கள் மனங்களிலே பதகளிப்பை (Anxiety) ஏற்படுத்தக்கூடிய அரசியற் கவிநிலையில், மிகவும் சாதுரியமாகச் செயற்படும் இதழியல் நுட்பங்களை இலங்கையின் நாள் இதழ்கள் முன்னெடுத்தன. சமூக நீதியின் எழுத்துவழி முன்னெடுப்பில் உயிர் பறிக்கப்பட்ட இதழியலாளர்கள் பலர். அத்தகைய ஒரு சமூக இதழியற் பின்புலத்தில் தோற்றம் பெற்றதே "தினக்குரல்'.


எழுத்தறிவு விரிவாக்கமும் மக்களாட்சியின் நீட்சியாக நிகழ்ந்த அரசியற்பங்கு பற்றலும் "நாளிதழ் வாசிப்பு' என்ற தோற்றப்பாட்டை மேலெழச் செய்தன. இந்தத் தோற்றப்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே முகிழ்த் தெழத் தொடங்கியது.
இலங்கைத் தமிழ் சூழலிலே முதலில் தோற்றம் பெற்ற இதழாக "உதயதாரகை' (1841) குறிப்பிடப்பட்டாலும் அது முதலில் மாத இதழாகவும் பின்னர் வார இதழாகவுமே வெளிவந்தது. நாள் இதழ் என்ற வடிவம் அக்காலத்தில் உருவாக்கம் பெறவில்லை.


சமயக் கருத்தியலோடு தொடர்புடையதாகவே உதயதாரகை அமைந்திருந்தாலும், கல்வி, வரலாறு, ஆட்சி மாற்றங்கள், பயிர்ச் செய்கை முதலான அறிவூட்டல்களையும் அந்த இதழ் மேற்கொள்ளத் தொடங்கியது. அதாவது, இதழின் உள்ளடக்கத்தில் விரிவு ஏற்படலாயிற்று.


சமய விரிவாக்கம், கல்வி விரிவாக்கம், கருத்துப் பகிர்வில் நிகழ்ந்த விரிவாக்கம் முதலியவற்றின் பின்புலத்தில் பல்வேறு இதழ்கள் உருவாக்கம் பெறத் தொடங்கின. அவை தமிழ் இதழியலின் ஆரம்பக்காலத்துப் பரிமாணங்களாக அமைந்தன.


தொடர்ந்து சைமன் காசிச்செட்டியவர்கள் "உதயாதித்தன்' (1944) என்ற இதழை உருவாக்கினார். 1845 ஆம் ஆண்டில் "உரைக்கல்' என்ற இதழ் வெளிவந்தது. கல்வி நோக்கில் "வித்தியா தர்ப்பணம்' என்ற இதழை வைமன் கதிரவேற்பிள்ளை வெளியிட்டார். சி.வை. கதிர்வேற்பிள்ளை இலங்காபிமானி' என்ற இதழை 1863 ஆம் ஆண்டிலே பிரசுரித்தார். 1864 ஆம் ஆண்டில் சி. முத்தையாபிள்ளை என்பவர் கொழும்பிலிருந்து "இலங்கைப் பாதுகாவலன்' என்ற இதழை வெளியிட்டார்.
காலனித்துவ சூழலில் சமயமே முதன்மைப் பேசு பொருளாயிற்று.

சமயக்கருத்தாடல்களுக்கு இதழ்கள் களம் அமைத்தன. 1877 ஆம் ஆண்டில் இந்து சமய மேலெழுச்சியை முன்னெடுத்து சின்னத்தம்பி என்பவர் "இலங்கை நேசன்' என்ற இதழை வெளிட்டார். தொடர்ந்து 1889 ஆம் ஆண்டிலிருந்து இந்த சாதனம் இதழ் வெளிவரத் தொடங்கியது.


சமயநிலைப்பட்ட தேசியத்தின் வளர்ச்சி முஸ்லிம் மக்களிடத்தும் இதழ்களை தோற்றுவித்தது. 1873 ஆம் ஆண்டில் வாப்புமரைக்கார் என்பவர் "புதினா லக்கரி' என்ற இதழைக் கொழும்பிலிருந்து வெளியிட்டார். தொடர்ந்து அறிஞர் சித்திலெப்பை "முஸ்லிம் நேசன்' என்ற இதழை 1882 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.


கல்வி விரிவாக்கம், சமய நிலைப்பட்ட பள்ளிக்கூடங்களின் பெருக்கம், வாசிப்புப் பண்பாட்டின் முகிழ்ப்பு முதலானவை இதழ்களின் பெருக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. "இலங்கை நேசன்', "பாலியர் நேசன்' , "உதய தாரகை', "கத்தோலிக்க பாதுகாவலன்', "உதயபானு' முதலாம் இதழ்கள் வெளிவரத் தொடங்கின.


இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த எழு குழாத்தினரது (ELITE) வளர்ச்சியும், கல்விச் செயல்முறையால் நிகழ்த்தப்பட்ட மேல் நோக்கிய சமூக அசைவியமும் (SOCIAL MOBILITY) அரசியல் விடுதலையை நோக்கிய விழிப்புணர்வும் நாள் இதழ்களின் தேவையைத் தோற்றுவித்தன. "நாளாந்த செய்தி வாசிப்பு' என்ற புதிய பண்பாடு வளர்ச்சி பெறலாயிற்று. அவற்றின் பின்புலத்தில் "வீரகேசரி', "தினகரன்' முதலாம் தமிழ் நாளிழிதழ்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின.


இலவசக் கல்விச் செயற்பாடு, தாய்மொழிக் கல்வி வளர்ச்சி, தமிழ்த் தேசிய சிந்தனைகளும் இயக்கங்களும் வலிமை பெற்று மேற்கிளம்பியமை, முதலிய விசைகளுடன் நாள் இதழ் வாசிப்பு மேலும் பெருக்கமடையத் தொடங்கியது. தேசிய நாள் இதழ்களுடன் பிரதேச நாள் இதழ்களும் வெளிவரத் தொடங்கின.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய "ஈழநாடு' முதலில் பருவ இதழாகி பின்னர் "நாள் இதழ்' என்ற ஏற்றம் பெற்றது. "ஈழ நாடு' என்ற பெயர்க் கருத்தாக்கமே முழு இலங்கையையும் நோக்குவதாக இருந்தது. ஆயினும் அதன் விநியோக எல்லை வட புலத்தோடு மட்டும் கட்டுப்பட்டிருந்தது.


இலங்கையின் சமூக நிலவரங்களை கதிகலங்கவைத்த செயற்பாடுகள் 1956 ஆம் ஆண்டைத் தொடர்ந்து நிகழலாயின. நிகழ்த்தவும் பட்டன என்றும் குறிப்பிடலாம். அத்தகைய சூழலில் தோற்றம் பெற்ற சமூகப் பதகளத்தை அணுகிய தமிழ் நாளிதழ்களின் செயற்பாடுகள் உளவியல் நிலையிலும் வரலாற்று நிலையிலும் செய்திவழியான ஆற்றுப்படுத்தல்களாக அமைந்து வரலாற்றை உருவாக்கும் செயல்முறையாயிற்று.


பதற்றம் நிறைந்த கால கட்டத்தின் சமூகத் தருக்கத்தை எதிர்கொண்டு "தினக்குரல்' மேலெழுந்தது. நாள் இதழை ஆரம்பித்தலும் அதற்குரிய முதலீகளைச் செய்தலும் ஆபத்து விளிம்பிலுள்ள தொழில் எழுகையாக இருந்த பொழுதும், அவற்றை ஓர் அறை கூவலாக ஏற்று தினக்குரல் இதழைத் தொடக்கிய தொழில் அதிபர் எஸ்.பி.சாமியாரினதும் கேசவராஜாவினதும் அபார துணிச்சல் செய்திக் கையளிப்பில் புதுவரவைத் தோற்றுவித்தது.


தமிழ்ச் சூழலிலே தோற்றம் பெற்ற இதழ் நிறுவன முகாமைத்துவத்தின் தனித்துவத்தை இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தினக்குரலின் தொடக்ககால முகாமைத்துவமும் வீரகேசரி நிறுவனத்தால் உள்ளீர்க்கப்பட்ட பின் நிகழ்ந்து வரும் முகாமைத்துவமும் இதழாசிரியர்களின் மாண்புக்கும், புலமைச் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்து வருதல், தமிழ் நாளிதல் வரலாற்றிலே சிறப்பாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய நடப்பியற் பதிவாகும். இந்நிலையில் முகாமைத்துவ மேலாளர் குமார்நடேசனின் இதழியல் முகாமைத்துவம் பாராட்டுதற்குரியது.

தமிழில் புதிய புதிய இதழ்களைத் தோற்றுவித்து வாசிப்பு நிலையில் புத்தாக்கங்களை ஏற்படுத்துதல் அவர் மேற்கொள்ளும் பிறிதோர் ஆக்க நடவடிக்கை. செய்திக் கையளிப்பில் ஆற்றலும் அனுபவமும், நடைமுறைப்பிரச்சினைகளுடன் ஊடாட்டம் கொண்டவர்களும், உணர்ச்சிக் கோலால்களோடு இழுபட்டுச் செல்லும் அறிகைத் தளம்பல்களுக்கு உட்படாதவர்களுமான இதழியற் புலமையாளாரின் அணி தினக்குரலின் செய்தி வளத்துக்கும், ஆக்க வளத்துக்கும் அடிப்படையாயிற்று.
ஆசிரியர் பீடத்தின் எழுத்தாளுமை கொண்டவர்களின் கூட்டு முயற்சி தினக்குரலை வளமான இதழாக முன்னெடுப்பதற்கு வலுவூட்டியது. வினைத்திறன் மிக்க செய்திக்கையளிப்பும் அறிவுக்கையளிப்பும் தினக்குரலால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இருபது ஆண்டுகால வளர்ச்சியில் தினக்குரல் ஈட்டிய  வெற்றியில் ஆசிரிய பீடத்தினரதும், நிர்வாகக் கட்டமைப்பைச் சேர்ந்ததோரதும் கூட்டுமுயற்சி விதந்து குறிப்பிடப்பட வேண்டியுள்ளது. அளிக்கை நிலையில் தினக்குரல் தனக்கே உரிய தனித்துவமான தளக்கோலத்தை (LAYOUT) அமைத்துக்கொண்டமை கூட்டுழைப்பின் வழியாக மேலெழுந்த ஆக்கமலர்ச்சியாகும்.


தலைநகரில் இருந்து வெளிவந்த தினக்குரல், யாழ்ப்பாணத்திலும் யாழ். தினக்குரலை வெளியிடத் தொடங்கியமை இருபது ஆண்டுகாலத்தில் நிகழ்ந்த பிறிதொரு நிகழ்ச்சியாகும். அந்த இதழின் வெற்றியில் இதழியல் நோக்கும் சமூகநோக்கும் ஒன்றிணைந்து மேலெழுந்த ஊக்கவிசை தனித்துக் குறிப்பிடப்படவேண்டியுள்ளது.


அமரர் நடராசா முன்னெடுத்த "கருணைப் பாலம்' செயற்பாடு தினக்குரலின் நடைமுறைச் சமூகப்பணிக்கு வலுவூட்டியது. போரினால் பாதிப்புக்கு உள்ளாகிய மக்களுக்கு உதவும் கரமாக அது நீட்சி கொண்டது. 


நவீன எண்ணிமப் புரட்சி செய்திகளை உடனுக்குடன் கைப்பேசிக்குள் கொண்டுவந்து விட்டது. அந்நிலையில் செய்தி இதழ்கள் செய்திகளோடு மட்டும் கட்டுப்பட்டிருக்காது, அறிவின் விரிவாக்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு உந்தப்பட்டுள்ளன. அவ்வகையில் நவீன கட்டுரை இலக்கியத்தில் தினக்குரலின் ஈடுபாடு நிகழத் தொடங்கியமை விதந்து குறிப்பிடப்பட வேண்டிய இதழியல் பதிவாகும்.


இன்று உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் புனைகதை சாரா (NON FICTION) எழுத்தாக்கங்களின் வாசிப்பே பிரவாகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அத்தகைய நடப்பியலைக் கருத்திற் கொண்டு, அரசியற் கட்டுரை, பொருளாதாரக்கட்டுரை, சமூகப்பிரச்சினைகளை அடியொற்றிய கட்டுரை, இலக்கியக்கட்டுரை, பெண்ணியக்கட்டுரை, இளைஞர் இயல் தொடர்பான கட்டுரை, அறிவியற்கட்டுரை, உலகில் மேற்கிளம்பும் புதிய சிந்தனைகள் தொடர்பான கட்டுரை முதலியவற்வறை தினக்குரல் வெளியிடத் தொடங்கியது.


நவீன உலகம் பண்பு நிலை ஏற்றத்தை அனைத்துத் துறைகளிலும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. கல்வியிலே தரம், நுகர்ச்சிப் பொருள்களிலே தரம், எங்கும் தரம், எதிலும் தரம் என்பது பேசுபொருளாகவும் நடைமுறைப் பொருளாகவும் நீட்சிகொண்டுவருகின்றது.


செய்தியிலே தரம், வெளியிடப்படும் கட்டுரைகளிலே தரம், ஆசிரியர் எடுத்துரைப்பிலே தரம் முதலியவற்றில் கவனம் செலுத்துதல் தினக்குரலின் இதழியல் நோக்கு.


தமிழ் இதழியல் பாரம் பரியம் ஆசிரியர் தலையங்கத் தரச்சிறப்பில் கவனம் செலுத்திவருதல் சிறப்பான பரிமாணமாகின்றது. ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு நூலுருப்பெற்று அறிவுக் கையளிப்பை மேலோங்கச் செய்தமை பிறிதொரு முக்கியமான நிகழ்ச்சியாகும். அவ்வகையில் சபாரத்தினம் (ஈழநாடு), வீ.தனபாலசிங்கம் (தினக்குரல்), ஆர். பிரபாகரன் (வீரகேசரி) ஆகியோரின் ஆசிரியர் தலையங்க ஆக்கங்கள் நூலுருப்பெற்றன.


நூல்களின் பெருக்கமும் இதழ்களின் பெருக்கமும் சமகாலத்திலே பிரவாக மெடுக்கத் தொடங்கியுள்ளன. அந்நிலையில் பண்புநிலை (QUALITY) ஏற்றமே 
நீடித்தவாழ் வாழ்வுக்கும் பயனுக்கும் இட்டுச் செல்லும். அத்தகைய பிரக்ஞையோடு தினக்குரல் இயங்கிவருதல் குறிப்பிடத்தக்கது.


நாள் இதழ்களுக்கு ஆக்கவலுவூட்டுவது அவற்றில் வெளிவரும் நிழற்படங்களும் கேலிச் சித்தரங்களுமாகும். @நிழற்பட இதழியில் (PHOTO JOURNALISM) என்ற துறை மேலெழுச்சி கொள்ளத் தொடங்கியுள்ளது. நிழற்படக்கலைஞரது செய்தி அளிக்கைப் புலக்காட்சியும் இதழாசிரியரின் செய்தி வழங்கல் புலக்காட்சியும் ஒன்றெனக் கலந்து நிழற்பட இதழியல் எழுச்சி கொள்கின்றது. இத்துறையிலும் தினக்குரல் தனக்கென உரிய தனித்துவத்தை நிலைநிறுத்தி வருகின்றது.


தினக்குரல் ஓர் இதழ் என்ற நிலையையும் கடந்து "தெளிவான வரலாற்றுப் பதிவு' என்ற நிலை மாற்றத்தையும் பெற்றுள்ளது. நேர்காணல், இதழ்க் கீலழங்கள் (இOஃக்MN), நேரடி அறிவிப்புகள், கள நிலவரங்களுடன் உறவாடியும் இடைவினைக் கொண்டும், புதைந்துள்ள தகவல்களை வெளிக்கொண்டுவருதல், புலனாய்வுத் தகவல்களைத் தருதல், விளையாட்டு எழுவினாக்களை முன்வைத்தல், ஆய்வு நிலை பட்ட கருத்துக்களைத் தொகுத்துத் தருதல் , பேசப்படா பொருளைப் பேசுதல் முதலான எழுத்துப் பணிகளினூடே "தினக்குரல்' மேற்கொள்ளும் வரலாற்றுப் பதிவுகள் நீட்சி கொள்கின்றன.

TOTAL VIEWS : 1705
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wm7fu
  PLEASE ENTER CAPTA VALUE.