உள்ளூராட்சித் தேர்தல் முறையில் படிமுறை மாற்றங்களும் பின்னடைவுகளும்
2018-01-09 10:06:24 | General

தற்போது உள்ளூராட்சி சபைக்கான மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருசாராரை மறுசாரார் விமர்சிப்பது, குற்றம் சுமத்துவது, கொள்கையற்றவர்கள், சோரம் போனவர்கள் என்று பலவாறாகச் சேறுபூசும் செயற்பாடுகள் நிறையவே காணக்கிடைக்கின்றன.

மக்களுக்கு, பிரதேசத்திற்கு சேவை செய்யவென்று தேர்தல்களம் இறங்கியவர்கள் குறித்த பிரதேச மக்களிடையே பிளவுகளையும் எதிர்ப்புகளையும் வளர்ப்பதும் இத் தேர்தலில் முக்கிய அம்சமாக விளங்குகின்றது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் படிமுறை மாற்றத்தை மீளவும் தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. குறிப்பாக அரசியல் மற்றும் வரலாற்றைக் கற்கும் மாணவ,ம õணவியருக்கு இது தேவையாகின்றது.

இந்நாட்டில் உள்ளூராட்சித் தேர்தல் முறை மூன்று மாற்றங்களைக் கண்டுள்ளது. அதில் எது பொருத்தமானது. மக்களுக்குப் பயனளிப்பது, அரசியல் கட்சிகளுக்குப் பயனளிப்பது என்பதை ஆராயும் பொறுப்பு மக்களுக்குரியது.

1978 ஆம் ஆண்டு விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முன்பு உள்ளூராட்சி சபைகள் நான்கு வகைப்படுத்தப்பட்டிருந்தன. மாநகர சபைகள், நகர சபைகள், பட்டின சபைகள், கிராம சபைகள் என்பனவே அவை.

தேர்தல்கள் வட்டார ரீதியாக நடத்தப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அவற்றின் தலைவரையும் உப தலைவரையும் தாமே தெரிந்தெடுத்தனர். அக்காலத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடு அரிதாகவேயிருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கைப்பற்ற அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி செயற்படுகின்றன. அதேபோல் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் நிலையுமுள்ளது.

அன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் பாராளுமன்றத் தேர்தலிலேயே கட்சி ரீதியில் போட்டியிட்டன. யாழ்ப்பாண மாநகர சபையில் அல்பிரட் துரையப்பா என்ற சுயேச்சை வேட்பாளரின் குழுவைத் தோற்கடிக்க இருகட்சிகளும் இணைந்து போட்டியிட்டன.

ஆனால், ஏனைய மாநகர, நகர, பட்டின, கிராம சபைகளில் கட்சி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்த முன்வரவில்லை. அதற்குக் காரணம் ஊர் மக்கள் மத்தியிலே பிரிவினையை ஏற்படுத்துவது ஊருக்கு நல்லதல்ல என்று அன்றைய தமிழ்த் தலைவர்கள் கருதியதனாலேயாகும்.

குறித்த உள்ளூராட்சி சபைகளில் வட்டாரங்களில் கௌரவமான, சமூக நோக்குள்ள, செயற்றிறன் கொண்டவர்களைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் அன்றிருந்தது. அதனால்தான் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்த காங்கேசன் துறைத் தொகுதிக்குட்பட்ட அளவெட்டி கிராம சபைத் தலைவராக தொடர்ச்சியாக இலங்கை கம்யூனிஷ்ட் கட்சிப் பிரமுகரான வி. பொன்னம்பலம் செயற்பட முடிந்தது.

அதேபோல் மக்களால் மதிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட வி. தர்மலிங்கம் பிரதிநிதித்துவம் செய்த உடுவில் தொகுதிக்குட்பட்ட சுன்னாகம் பட்டின சபையின் தலைவராக லங்கா சமசமாஜக் கட்சியின் நாகலிங்கம் செயற்பட முடிந்தது. தமிழரசுக் கட்சியின் கோட்டையான திருகோணமலையின் திருகோணமலை நகர சபையின் தலைவராக அக்கட்சியுடன் ஒத்துப்போகாத டாக்டர் எம்.சிவானந்தன்  நீண்டகாலமாகச் செயற்பட முடிந்தது.

யாழ்ப்பாண மாநகர சபையில் கட்சி ரீதியாகப் போட்டியிட்ட போதும் தகைமை கருதி தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸும் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் வெற்றிபெற்ற எஸ். நாகராஜாவையும் துரைராஜ சிங்கத்தையும் முறையே மேயராகவும், பிரதி மேயராகவும் தெரிவு செய்த வரலாறு பதிவிலுள்ளது.

மட்டக்களப்பின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட செல்லையா இராஜதுரையை விட தகுதியானவரென்று சுயேச்சையாக வெற்றிபெற்ற எஸ். தியாகராஜா கட்சி சார்பற்ற முறையில் மட்டக்களப்பு மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இதுபோன்ற கட்சி சார்பற்ற முறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மக்கள் தெரிவுகளும் மக்கள் பிரதிநிதிகளின் தெரிவுகளும் அமைந்தன. அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி சபைகளில் தலையிடாத தன்மை காணப்பட்டது.

இந்நிலை விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டபின் மாற்றமடைந்தது. வட்டார ரீதியில் போட்டியிடும் தகைமையும், செயற்றிறமையும் கொண்டவர்களை நேரடியாக இனங்கண்டு வாக்களிக்கும் உரிமை கைவிடப்பட்டு அல்லது மறுக்கப்பட்டு அரசியல் கட்சிகளோ, சுயேச்சைக் குழுக்களோ நியமிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டது.

கட்சிநோக்காது தகைமைய நோக்கும் உரிமை வாக்காளரிடமிருந்து பறிக்கப்பட்டது எனலாம். இருப்பினும் குறித்த உள்ளூராட்சி சபைப் பிரதேசத்தில் பரந்துவாழும் சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை கட்சியினருக்கு தமக்குரிய பிரதிநிதித்துவங்களை ஓரளவாவது பெற்றுக் கொள்ள வழியேற்பட்டது.

தகைமையற்ற, தகுதியற்ற வேட்பாளர்களை நிறுத்தி அதன்மூலம் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெறவும், வாக்காளர்களிடமிருந்து மக்கள் பிரதிநிதிகள் அந்நியப்படவும் இத்தேர்தல் முறைமை வழிவகுத்தது என்றும் அடையாளமிடலாம்.
தற்போது நடைமுறைக்கு வந்துள்ள உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முறைமை கலப்பு தேர்தல் முறைமை என்று கூறப்படுகின்றது. இதிலும் அரசியல் கட்சிகளின் ஆதிக்கமே மக்களின் விருப்பையும் விஞ்சிநிற்கின்றது.

ஆரம்பத்திலிருந்தது போன்று வட்டாரமொன்றில் செல்வாக்குள்ளவர் ஒருவர் அவ்வட்டாரத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படக் கூடிய முறைமை விகிதாசாரப் பிதிநிதித்துவ முறைமையில் இல்லாது செய்யப்பட்டது போன்றே நடைமுறைக்கு வந்துள்ள தேர்தல் முறையிலுமுள்ளது.

சுயேச்சையாக ஒருவர் போட்டியிட முன்வந்தால் அவர் முழு உள்ளூராட்சிச்சபை வட்டாரங்களுக்கும் தனக்குச் சார்பானவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதுடன் மேலதிகமாக மேலும் நாற்பது வீதத்தினரைப் பட்டியலிட வேண்டும். அத்துடன் இருபத்தைந்து வீத பெண்களை அவற்றில் உள்ளடக்க வேண்டும்.

இதனால் செல்வாக்கு, தகைமையும் திறமையும் உள்ள தனிநபர் அரசியலில் ஈடுபடுவதோ, மக்களுக்கு தனது பிரதேசத்திற்கு சேவை செய்வதோ தடுக்கப்படுகின்றது. அரசியல் கட்சிகளின் அரவணைப்பில்லாது எவரும் அரசியலில் ஈடுபடுவது முடியாத காரியமாகிவிட்டது. தனது பிரதேசத்திற்கு மக்கள் பணியாற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருணையை எதிர்பார்க்கும் நிலைக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை ஆக்கிவிட்டுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூராட்சித சபைகளுக்கான தேர்தல் முறைமையின்படி அறுபது வீதம் வட்டார அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும். குறித்த வட்டாரத்தில் அரசியல் கட்சிகள் அல்லது தாம் விரும்பிய, தமக்குச் சார்பானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும். அவர்களில் ஒருவருக்கே வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அவர்களில் எவரும் தகுதியவற்றவர்களென்று கண்டால் வாக்காளர்கள் வாக்களிப்பிலிருந்து தம்மை தவிர்த்துக் கொள்கின்றனர். இவ்வாறு வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் இருபத்தைந்து வீதத்திற்கும் அதிகம் என்பதை கடந்தகால தேர்தல்களில் வாக்களித்தோர் எண்ணிக்கையிலிருந்து அறியலாம்.

இத் தேர்தலில் வாக்களிப்போர் எண்ணிக்கைக்கேற்ப வழங்கப்படும் நியமனங்கள் வாக்காளர்களுக்கான உரிமையற்றதாகின்றது. குறித்த நாற்பது வீத நியமனங்களும் அரசியல் கட்சிகளின் தலைமைகளின் விருப்புக் கேற்றதான தெரிவுகளாகவே அமைகின்றன.

தேர்தல் நிலைமை இவ்வாறாகவுள்ள நிலையில் சிறுபான்மையினராக ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளுக்குள் வாழும் வாக்காளர்கள் அப்பிரதேசத்தில் தமக்குரிய சமூக, இனத்துவ பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். தவறாது தமது வாக்குகள் சிதறாது வாக்களிக்க வேண்டும்.

பிளவுபட்டு பிரிந்து செயற்படுவதால் தமது சமூகப் பிரதிநிதித்துவம் இழக்கப்படும், தமது சமூகத்தின் இருப்பு குறிப்பிட்ட பிரதேசத்தில், வட்டாரத்தில் இழக்கப்படும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரிந்து நின்று வாக்களிப்பதன் மூலம் பிரதிநிதித்துவங்களை இழப்பதன் மூலம் அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு அப்பிரதேசத்தில் அரசியல் அநாதைகளாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இன்று ஒரு மலசல கூடம் கட்டுவதற்குக் கூட அரசியல் அதிகாரம் தேவைப்படுகிற நிலைக்கு நாட்டின் நிலை ஆகிவிட்டது. 

உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகமானது குறித்த சபைகளின் எல்லைக்குட்பட்ட பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும் தேவைகளை நிறைவேற்றுவதற்குமானது. அச்சபைக்குட்பட்ட அடிப்படைத் தேவைகளான, சுகாதாரம், வடிகால் கட்டமைப்பு, தாய் சேய் நலன், ஆரம்பபாடசாலை, வைத்தியவசதி, புண்ணிய சம்பளம் போன்ற பலவற்றை நிறைவேற்றுவதற்கே அச்சபைக்கு அதிகாரமுள்ளது.

அதைவிடுத்து நாட்டின் தேசிய கொள்கைகளை வகுப்பதற்கோ மாற்றியமைப்பதற்கோ எதுவித அதிகாரமுமில்லை.
பாராளுமன்றத்திற்குள்ள அதிகாரம் வேறு. மாகாணசபைகளுக்கான அதிகாரம் வேறு. அதுபோல் மாநகரச, நகர, பிரதேச சபைகளுக்கான அதிகாரங்கள் வேறுபட்டவை.

இன்று எல்லாவற்றையும் குழப்பி தாமும் குழம்பி மக்களையும் குழப்பும் கைங்கரியத்தில் நாம் நாட்டு அரசியல் நடப்பது கவலைக்குரியது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்தவும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் கூடிய ஆளுமையும், செயற்றிறனும் கொண்டவர்களை இனங்கண்டு வாக்களிப்பது வாக்காளர்களின் பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களாக இருந்து செயற்பட்டவர்களின் பணிகளை எடைபோட்டு சீர்தூக்கி ஆராய்ந்து ஏற்றவர்களை தெரிவு செய்தும், பொருத்தமற்றவர்களை நிராகரித்தும் பிரதேச நலனுக்கு உகந்ததை ஆற்றவேண்டியது வாக்காளர் பொறுப்பு.

அதேபோல் புதியவர்களாகத் தேர்தல் களமிறங்கியுள்ளவர்களின் நடத்தை, நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும் பொறுப்பும் வாக்காளர்களுக்குள்ள பாரிய பொறுப்பாகும். குதிரை ஓடிய பின் லாயத்தை மூடுவது போலின்றி பின் விளைவுகளை முன்கூட்டியே சிந்திக்க வேண்டும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது நமக்கு வழிகாட்டும் கூற்றல்லவா?

 

TOTAL VIEWS : 621
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5ygfi
  PLEASE ENTER CAPTA VALUE.