சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம்; நாடு கடந்த தமிழீழ அரசு அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும்
2017-11-06 11:23:59 | General

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாக தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்வது அவசியமான விடயமெனவும்  அவர்கள் அளிக்கும் தீர்ப்பை நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலான அந்த அமைப்பின் பிரதமர் என அழைக்கப்படும் சட்டத்தரணி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் மின்னஞ்சல் மூலம் "சிலோன் டுடே' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். பேட்டி வருமாறு;

கேள்வி: தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் உட்பட நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக குறிப்பாக உள்நாட்டு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் இந்த விடயத்தில் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்தும் உலகத் தமிழர் பேரவை போன்ற குறிப்பிட்ட சில புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலான குழுக்களினால் நல்லிணக்கம் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் அண்மைய சாதகமான முயற்சிகள் குறித்தும்  கவனத்திற்கெடுக்கப்படும் போது  இலங்கையுடன் தொடர்புபட்டதாக நாடு கடந்த தமிழீழ அரசினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் எவை?

பதில்: தமிழ் மக்களின் இறைமை அவர்களிலேயே பொதிந்துள்ளது என்பது நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடாக உள்ளது. அதாவது 1972 அல்லது  1978 அரசியலமைப்பை தயாரிக்கும் நடவடிக்கைகளில் தமிழர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு தமது இறைமையை அவர்கள் வழங்கியிருக்கவில்லை. இன்று எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயமாக இருப்பது அவர்களே என்ன வடிவத்தில் பங்கேற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகும். ஆரம்பத்திலிருந்து இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழும் தமிழினம் தமது அரசியல் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டும்.

தமது விருப்பத்தை சமாதானமான ஜனநாயக வழிமுறைகளில் வெளிப்படுத்த வேண்டும்.  சர்வஜன வாக்கெடுப்பினூடாக இதனை தீர்மானிக்க வேண்டும் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடாகும். நாங்கள் நோக்கும் சர்வஜன வாக்கெடுப்பானது  சுதந்திரமான அரசொன்றிற்காக வெறுமனே ஆம் அல்லது இல்லை என்பதற்கு வாக்களிப்பதல்ல. ஒற்றையாட்சி அரசா? சமஷ்டி அரசா? சம்மேளனமான அல்லது சுதந்திரமான அரசா போன்ற தெரிவுகளை உள்ளடக்கிய சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றையே நாங்கள் நோக்குகின்றோம். 

கேள்வி: அண்மைக் காலத்தில் அங்கு பல ஏற்றத்தாழ்வான எதிர்ப்பைக் கொண்டுள்ள விடயங்கள் காணப்படுகின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கொள்கை ரீதியாக பிரிவுகள் உள்ளன. எதிர்மறையான புலிகள் ஆதரவைக் கொண்ட  தன்மையைக் கொண்டவையாக அவை காணப்படுகின்றன. உள்நாட்டில் எவ்வாறாயினும் சிங்களவர்கள் மத்தியில் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது பிரிவினைவாதிகள் மற்றும் ஈழம் வாதிகளின் நோக்கத்திற்கான முன்னணியாளர்களாக அறியப்பட்டிருக்கின்றது. இப்போதும் நாடு கடந்த தமிழீழ அரசு வலுவான பிரிவினைவாத அல்லது தேசியவாதக் கருத்துகளையா கொண்டிருக்கிறது?

பதில்: சகல புலம்பெயர்ந்த குழுக்கள் மத்தியிலும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினூடாக தீர்வு காணப்பட வேண்டும் என கருத்தொருமைப்பாடு காணப்படுவதை நம்பிக்கையுடன் என்னால் கூற முடியும். சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினூடாக எமது அரசியல் தலைவிதியை நாங்கள் தீர்மானிப்பது அடிப்படை மனித உரிமையாகும்.

இது அரசியல் விவகாரமாக மட்டுமன்றி மனித உரிமைகள் விவகாரமாகவும் அதிகளவுக்கு முக்கியமான விடயமாக அமைந்திருக்கிறது. சர்வதேச நடைமுறைகளும் இதனைக் கொண்டிருக்கின்றன. தென்சூடானாகவோ அல்லது பெரியவெள்ளி உடன்படிக்கையாகவோ அல்லது சேர்பிய  மொன்டிநீக்கிரின்  உடன்படிக்கையாகவோ அல்லது பப்புவா நியூகினியா  போகன்வில்லே சமாதான உடன்படிக்கையாகவோ இருந்தாலும் சர்வஜன வாக்கெடுப்பினூடாகஅந்த தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற சகல ஆணைகளையும் அவை கொண்டிருந்தன.

சர்வஜன வாக்கெடுப்பு என்று நான் கூறும் போது முழு நாட்டுக்குமான ஒன்றல்ல என்பதையும் குறிப்பிட்டதொரு இனத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்பதனையும்  அர்த்தப்படுத்துகிறேன் என்பதை நான் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். கியூபெக் சர்வஜன வாக்கெடுப்பை நாங்கள் மதிக்கிறோம். உதாரணமாக கனடா முழுவதும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கனேடிய உயர்நீதிமன்றம் கூறியிருக்கவில்லை. கியூபெக்கில் மட்டுமே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அந்நாட்டு உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 


அதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசு இலங்கை அரசின் கடும்போக்கு சிங்கள, பௌத்த இனத் தன்மையின் காரணமாக சுதந்திரத்தினூடாக மட்டும் இலங்கைத் தீவில் நாங்கள் சமாதானமாகவும் கௌரவத்துடனும் வாழ முடியும் என  நம்புகிறது. 
1958, 1977, 1983 கலவரங்கள், 2009 இல் முள்ளிவாய்க்கால் மற்றும் இலங்கை இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான வல்லுறவு  முகாம்கள் குறித்த பிந்திய செய்திகள், தமிழர்கள் படுகொலைகள், பாரியளவிலான தமிழ்ப் பெண்கள் மீதான வல்லுறவு என்பவற்றால் இந்த நம்பிக்கை மற்றும் எண்ணப்பாட்டுக்கான சாட்சியமாக காணப்படுகின்றது.

தார்சி வித்தாச்சி என்ற மறைந்த இதழியலாளரின் "அவசரகால நிலை 58; இலங்கை இனக்கலவரங்களின் கதை' என்ற நூலை கவனத்திற்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன். 1958 இல் தமிழர்கள் பாரியளவில் கொல்லப்பட்ட பின்னர் அந்த நூல் உடனடியாக எழுதப்பட்டிருந்தது. சிங்களவர்களும் தமிழர்களும் தமது பாதைகளில் பிரிந்து செல்கின்றார்களா? என்ற கேள்வியுடன் அந்த நூலை அவர் நிறைவு செய்திருந்தார்.


1958 இல் இடம்பெற்ற பாரிய கொலைகளைத் தொடர்ந்து தமிழர்கள் இந்தக் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.  1977 பொதுத் தேர்தலில் சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதற்கு ஆதரவளித்து அவர்கள் வாக்களித்திருந்தனர். எவ்வாறாயினும் ஒற்றையாட்சி ஒன்று அல்லது சமஷ்டி அல்லது சமஷ்டியற்ற சமஷ்டி என்பது தொடர்பாக தமிழ் மக்கள் வாக்களிப்பாளர்களேயானால் நாங்கள் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றோம் என்று நான் கூறுகிறேன்.

கேள்வி: பிரிவினைவாதத்துடன் தொடர்புபட்டதாக பதிலானது "ஆம்' என அமைந்தால் நாட்டில் வாழும் சகல சமூகங்கள் உட்பட தேசத்தின் சிறப்பான நலன்களுக்கு இது முரண்பாடாக அமையுமென நாடு கடந்த தமிழீழ அரசு கருதவில்லையா?

பதில்: இலங்கைத் தீவில் வாழும் சகல சமூகங்களுக்குமிடையில் நட்புறவைக் கொண்டிருக்க சுதந்திர தமிழீழ அரசு பங்களிப்பு செய்யுமென நாங்கள் நம்புகிறோம். முடிவானது தற்போதிருக்கும் எல்லைகளை பாதுகாப்பதோ அல்லது அந்தஸ்தை பாதுகாப்பதோ அல்ல. சமாதானத்தையும் நட்புறவையும் தீவில் வாழும் மக்கள் மத்தியில் உருவாக்குவதேயாகும்.

யாவற்றுக்கும் மேலாக  சுதந்திர அரசின் வடிவத்தில் நிரந்தர தீர்வொன்றைக் கொண்டிருப்பது குறித்து நாங்கள் நம்புகிறோம். சிங்கள அரசியல் அரங்கிற்குள் இனவாத கேள்வி கோரலை அகற்ற முடியும். பொது மக்களின் அன்றாட பிரச்சினைகள் மீது சிங்களத் தலைவர்கள் கவனத்தைச் செலுத்த முடியும். அத்துடன் ஜனநாயகத்திற்கும் அபிவிருத்திக்கும் இது பங்களிப்பை வழங்கும்.

ஸ்ரீலங்காவிற்கும் தமிழீழத்திற்குமிடையில் எப்போதுமே பதற்றமாக இருக்குமென்ற தர்க்கமொன்றையும்  வைக்க முடியும். ஆனால் அவ்வாறு இருக்கத் தேவையில்லையென நாங்கள் நம்புகிறோம்.நோர்வே  சுவீடன் அல்லது சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்குமிடையில் பதற்றம் எதுவும் இல்லை. அவ்வாறு சில பதற்றங்கள் இருந்தாலும் கூட சர்வதேச சட்ட ரீதியான விதிமுறைகள் உள்ளன. அரசுகளுக்கிடையிலான வன்முறையைக் கட்டுப்படுத்த சர்வதேச பொறிமுறை உள்ளது. 

கேள்வி: புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிளவு அல்லது பிளவுகள் உள்ளனவா?

பதில்: நான் முன்பு கூறியிருந்தேன். தமிழர்களின் உரிமை தொடர்பான அடிப்படை விவகாரங்களில் அதாவது இலங்கைத் தீவின் வட கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக உள்ளன. தமிழர்கள் அவர்களின் சுயநிர்ணய உரிமையை  கொண்டிருக்க இடமளிக்கப்பட வேண்டும். அந்த அபிப்பிராயம் தொடர்பாக வேறுபாடு இல்லை. தற்போதுள்ள எல்லைக்குள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க முடியுமென புலம்பெயர்ந்த தமிழ்க் குழுக்கள் சில நம்புகின்றன.


கேள்வி: நாடு கடந்த தமிழீழ அரசு எத்தகைய முயற்சிகளை (நிதி மற்றும் இராஜதந்திர ரீதியாக) மேற்கொண்டுள்ளது?

பதில்: எந்தவொரு அரசியல் முன்னகர்விற்கும் அதிகாரம் அவசியமானதென நாடு கடந்த தமிழீழ அரசு உறுதியாக நம்புகிறது. தற்போதைய சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச சட்டத்தில் அதனை நாங்கள் பார்த்துள்ளோம். அரசு சாராத செயற்பாட்டாளர்கள் அதிகாரமாக உருவாகியுள்ளார்கள்.

நாங்கள் சர்வதேச சமூகத்தை அணிதிரட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த விடயத்தில் 16 இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் போராட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக ஆரம்பித்திருந்தோம். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு அழைப்பு விடுத்து அந்தக் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. 

கேள்வி: விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி குறித்து நாடு கடந்த தமிழீழ அரசு இப்போதும் நம்புகின்றதா? பயங்கரவாதத்தை நாடு கடந்த தமிழீழ அரசு ஆதரிக்கின்றதா?

பதில்: சமாதான வழிமூலம் அரசியல் இலக்குகள் எட்டப்பட வேண்டும் என்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியலமைப்பு ஆணை வழங்குகின்றது. உண்மையில்  வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் நாடுகடந்த தமிழீழ அரசுடன் நேரடியாக செயற்பட்டுள்ளனர். 

கேள்வி: நாடு தொடர்பாக மேற்குலகினதும் ஐ.நா.வினதும் பிந்திய நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகங்களை நாடு கடந்த தமிழீழ அரசு எவ்வாறு தயார்படுத்தியுள்ளது?

பதில்: முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தொடர்ந்து உடனடியாக தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாக இருந்தது. சர்வதேச குற்றங்களை இழைத்தோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடாகும். எவ்வாறாயினும் முன்னைய ஆட்சியின் தலைவர்களினால் இது முன்னெடுக்கப்பட்டது என்ற கருத்தை அவர்கள் கொண்டிருந்தனர்.

ஆதலால் அவர்கள் சிறிசேன ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தனர்.  பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு அவர் தீர்வு காண்பார் என்ற எதிர்பார்பபுடன் அவர்கள் கொண்டு வந்தனர்.

எவ்வாறாயினும் ஐ.நா.வின் பயங்கரவாத எதிர்ப்பு மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளரின் அறிக்கையானது இந்த எண்ணப்பாட்டை இல்லாமல் செய்திருக்கின்றது. தற்போது சர்வதேச சமூகம் தமிழர்களின் இனப்படுகொலை தண்டனை விலக்கீட்டுச் சிறப்புரிமை என்பனவற்றுக்கான காரணமாக அரசே இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. 

கேள்வி: இலங்கை ஆயுதப் படைகளினால் இழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தொடர்பான பிரச்சினையில் புலிகளினால் இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கான பதிலளிக்கும் கடப்பாடு எவ்வாறு அமையும்?  இந்த விடயம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசினால் எத்தகைய தலையீடு மேற்கொள்ளப்படும்?

பதில்: முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்ட இனப் படுகொலைக்கு 
நீதியை நாடுவதே தமிழர்களின் உறுதியான எதிர்பார்ப்பாகும். 

கேள்வி:  நாட்டின் தற்போதைய நிலைவரத்தில் குறிப்பாக நல்லிணக்கத்தின் நிலைவரம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்: தமிழர்களின் நிலைவரத்தைப் பொறுத்தவரை நாங்கள் பாரியளவில் பார்க்கும் போது கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை இப்போதும் தொடர்கின்றது. யுத்தக் கைதிகள் இப்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்களின் தாயகத்தில் இராணுவம் இப்போதும் நிலை கொண்டிருக்கிறது. காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் இல்லை. சித்திரவதையும் பாலியல் வன்கொடுமைகளும் இப்போதும் தொடர்கின்றன. தெற்கில் சிறிசேன ஆட்சியின் ஆரம்பத்தில் ஜனநாயக நடவடிக்கைகள் சில அறிமுகப்படுத்தப்பட்டன. எவ்வாறாயினும் தெற்கிலுள்ள சிறிசேன ஆட்சி இப்போது ராஜபக்ஷ போன்று ஜனநாயக வலுப்படுத்தலை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.

கேள்வி: தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தில் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் முற்போக்கு கூட்டமைப்பு) நாடு கடந்த தமிழீழ அரசு திருப்தி படுகின்றதா?

பதில்: அரசியலமைப்பின் 6 ஆவது திருத்தத்தின் காரணமாக தமிழ் அரசியல் அபிலாஷைகளை முழுமையாக வெளிப்படுத்துவதில் உள்நாட்டு தலைமைத்துவத்தின் மீதான சட்ட ரீதியான நெருக்குவாரங்களை நாங்கள் புரிந்து கொள்கின்றோம்.

சுதந்திர தேசமென அழைக்கப்படுவதை ஆறாவது திருத்தம் தடுக்கின்றது. ஆனால் இது ஆறாவது திருத்தத்தை அகற்றுவதற்கு அழைப்பு விடுப்பதை தடுப்பதாக அமைந்திருக்கவில்லை.  ஆதலால் உள்நாட்டிலுள்ள தமிழ் அரசியல் தலைமைத்துவம் இந்த விடயத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.

சுதந்திர அரசொன்றை தமிழர்கள் நீண்டகாலத்திற்கு கோரவில்லை என்ற தவறான பிரதிமையை வழங்குவதிலும் பார்க்க இதனை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். இது உண்மையல்ல என்பதை அவர்களே அறிவார்கள். சுதந்திரமான அரசொன்றுக்கான அழைப்பை முள்ளிவாய்க்கால் வலுப்படுத்தியுள்ளது.

எவராவது விசேடமாக முள்ளிவாய்க்காலின் பின்னர் சுதந்திரமான அரசொன்றுக்கான கோரிக்கையை தமிழர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று உரிமை கோரினால் அது போலியானதாகும். யாவற்றுக்கும் மேலாக வெனிசூலாவிலுள்ள எதிரணிக் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வஜன வாக்கெடுப்புகளை ஒத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென உள்நாட்டு தலைமைத்துவங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் ஈராக்கின் குர்திஸ்தான் மற்றும் கட்டலோனியா போன்ற நாடுகளின் சர்வஜன வாக்கெடுப்புகள் பிரேரிக்கப்பட்டன.இந்த சர்வஜன வாக்கெடுப்புகள் ஐ.நா.வினால் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல. அல்லது எந்தவொரு வெளிநாட்டினாலும் ஏற்பாடு செய்யப்பட்டவையல்ல. இந்த சர்வஜன வாக்கெடுப்புகள் உள்ளூர் தலைமைத்துவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டவை.

கேள்வி:  இலங்கையில் எதிர்காலத்தில் எந்தவொரு தேசிய மட்டத்திலான தேர்தலிலும் போட்டியிடுவதற்கான திட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசு கொண்டிருக்கின்றதா?

பதில்: முன்னைய சந்தர்ப்பங்களில் நான் குறிப்பிட்டிருந்தேன்.  அதாவது இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் தமது இறைமையை வழங்கியிருக்கவில்லை. இதனால் இலங்கைத் தேர்தல் சட்டபூர்வமானவை என நாங்கள் கருதுவதில்லை. எவ்வாறாயினும் இந்தத் தேர்தல்களை எமது இலக்குகளை வென்றெடுப்பதற்கான களமாக பயன்படுத்த நாங்கள் விரும்புகிறோம். எம்மைப்பொறுத்தவரை ஆறாவது திருத்தம் அகற்றப்பட வேண்டும்.

கேள்வி: இலங்கை அரசாங்கத்துடன் தற்போது நீங்கள் செயற்படுகின்றீர்களா? எதிர்காலத்தில் அவ்வாறு செய்வதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளீர்களா?

பதில்: சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கான இடம் மற்றும் காலவரையறை போன்ற விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் செயற்படுவதை நாங்கள் நோக்கமாக கொண்டிருக்கின்றோம் என்று நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். 

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உத்தேச புதிய அரசியலமைப்பு ஒன்றினூடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்று கொண்டுவரப்பட்டால் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடு நாட்டை அபிவிருத்தி செய்வதன் நோக்கத்திற்காக வரும் என்பதற்கு தாங்கள் உத்தரவாதம் அளிப்பதாக ஊடகங்களுக்கு கூறியிருந்தார். நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் முதலீடு செய்ய விரும்புவது என்ன? அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக தற்போதைய நிலைவரம் என்ன? இதில் புலம்பெயர்ந்தவர்களின் வகிபாகம் என்ன?

பதில்: நான் இதனை முதலில் குறிப்பிட்டிருந்தேன். தமிழினமொன்றுக்காக சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிரந்தர அரசியல் தீர்வொன்று பெற வேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். அதன்பின்னர் புலம்பெயர்ந்தவர்கள் பலதரப்பட்ட துறைகளில் தமது நிபுணத்துவம் மற்றும் நிதி முதலீடுகளை கொண்டு வருவார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் சுதந்திர சாசனத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. சுதந்திர சாசனத்தில் முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சகலருக்கும் கல்வி கட்டாயமாக இருக்கும்.

தமிழீழத்தின் உத்தியோகபூர்வமாக மொழிகளாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் இருக்கும். யாவற்றுக்கும் மேலாக இந்து சமுத்திரத்தில் தமிழீழம் கேந்திரோபாய அமைவிடத்தை கொண்டிருக்கின்றது. இந்து சமுத்திரத்தின் சமாதானத்திற்கும் சௌஜன்யத்துக்கும் அது பங்களிப்பைச் செலுத்தும். 

கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு யோசனை குறித்தும் வட மாகாண சபையால் செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத அதாவது நீங்கள் எந்த வழிமுறையில் நோக்கினாலும் அது குறித்து? 

பதில்:  வட மாகாண சபை தேர்தலின் போது மாகாண சபையினால் அர்த்தபுஷ்டியாக எதனையாவது வழங்க முடியும் என நாங்கள் கருதியிருக்கவில்லை என்று கூறியிருந்தோம். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனே இதற்கு ஒத்த கருத்தை இப்போது கொண்டுள்ளார்.

இணைப்பைப் பொறுத்தவரை இந்திய  இலங்கை உடன்படிக்கையில் இலங்கையின் வட கிழக்குப் பகுதி தமிழர்களின் தாயகம் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. நுட்ப ரீதியாக இணைப்பு பிரிக்கப்பட்டமை இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கம் உட்பட இலங்கை அரசாங்கம் தமிழர்களின் அபிலாஷைகள் பற்றி இதயசுத்தியுடன் இருந்தால் சாதாரணமான பெரும்பான்மையுடன் இவற்றை திரும்பவும் இணைத்துக் கொள்ள முடியும். இணைப்புக்கு 2/3 பெரும்பான்மை தேவையானதல்ல. 

TOTAL VIEWS : 1183
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
s5crp
  PLEASE ENTER CAPTA VALUE.