'வத்தளையில் தமிழ் பாடசாலை' என்னுடைய கனவு; அது நிறைவேறும் வரை அரசியலிலிருந்து ஓயமாட்டேன்
2017-11-20 18:50:15 | General

ராஜ்

வத்தளையில் ஒரு தமிழ்ப்பாடசாலை அமைய வேண்டும் என்பது என்னுடைய நீண்டகாலக் கனவு.  கம்பஹா வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பாடசாலையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்குள் வந்தேன். 

இன்றும் அரசியல் பயணத்தில் இணைந்திருப்பதும் அந்த கனவுக்காகத் தான், அது நிறைவேறும் வரை நான் அரசியலில் இருப்பேன்' என்கிறார் வத்தளை நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ராமையா விஜயகுமார். ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்;

கடந்த ஏழு வருடங்களாக அரசியலில் பயணித்து வருகிறீர்கள்.  உங்களுடைய அரசியல் பிரவேசம் பற்றி கூறுங்களேன்...?

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டதன் ஊடாக என்னுடைய அரசியல் பிரவேசம் ஆரம்பித்தது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வத்தளை நகரசபையின் உறுப்பினரானேன். 

தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு 17,730 வாக்குகளை பெற்று உறுப்பினர் பதவியை இழந்தேன்.


கம்பஹா மாவட்டத்தில் 17,730 வாக்குகளை பெற்ற முதல் சிறுபான்மையின உறுப்பினர் நான் மாத்திரம் தான்.


அதைத் தொடர்ந்து மீண்டும் நகரசபையில் இணைந்து மக்களுக்கு சேவையாற்றி வந்ததுடன், நகரசபை கலைக்கப்பட்ட பின்னரும் என்னுடைய சேவைகள், வேலைத்திட்டங்களை இன்றுவரை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றேன்.

இந்த ஏழு வருடங்களில் வத்தளை பிரதேசத்தில் நீங்கள் இனங்கண்ட மக்களுடைய பிரச்சினைகள் எவை?

வத்தளையில் மாத்திரமல்ல, கம்பஹா மாவட்டம் முழுவதும் நான் அரசியல் பயணம் சென்றிருக்கிறேன்.  அத்துடன் என்னுடைய சேவைகளை கம்பஹா மாவட்டம் முழுவதும் செய்து வருகிறேன்.


வத்தளையில் மூவின மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடைய தேவைகள் என்பது அளவுக்கதிகமாக இருக்கிறது.  கடந்த பல வருடங்களாக அரசியல் அநாதைகளாக வாழ்ந்து வந்த இந்த மக்களுடைய தேவைகள் என்பது எண்ணிலடங்காதவை.


வீடு தேவை, குடிநீர் தேவை, பாதை, தொழில், வாழ்வாதாரத் தேவை, பாடசாலை தேவை என இந்தப் பிரதேச மக்களுடைய தேவைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.


வத்தளை நகரசபையில் ஐந்து வருடங்கள் உறுப்பினராக இருந்த காரணத்தினால் இந்தப் பிரதேச மக்களுடைய தேவைகளை நான் நன்கறிவேன்.  அக்காலத்தில் அவர்களுடைய தேவைகளை இனங்கண்டதன் அடிப்படையில் தான் கடந்த ஏழு வருடங்களாக என்னுடைய சேவைகளை மூவின மக்களுக்கும் செய்து வருகின்றேன்.

இவற்றில் உங்களுடைய இந்த ஏழு வருட பயணத்தில் தீர்க்க முடிந்த பிரச்சினைகள் எவை?

என்னுடைய இந்த ஏழு வருட பயணத்தில் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். என்னுடைய சொந்த பணத்தில் கூட பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன்.


அவற்றில், ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் ஆறுகொட்டுவ பிரதேசத்தில் நீண்ட காலமாக கவனிப்பாரின்றி மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்த பாதை ஒரு கோடி ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.  இதற்கான நிதியை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் நிதியொதுக்கீட்டை பெற்று அதனை செய்து வருகிறேன்.  மிகவிரைவில் அந்த பாதை மக்களிடம் கையளிக்கப்படவிருக்கிறது. 

அதேபோல், ஏக்கித்த ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், ஐயப்பன் சுவாமி கோயில், கம்பஹா மாவட்டத்தில் இருக்கின்ற பௌத்த, கிறிஸ்தவ, இந்து ஆலயங்கள் பலவற்றுக்கு பாரிய சேவைகளை ஆற்றியுள்ளேன்.  மூவின மக்களும் செறிந்து வாழும் கம்பஹா மாவட்டத்தில் தமிழனாக இருந்து கொண்டு இனமத பேதமின்றி அனைத்து சமூகத்தினருக்கும் இதுவரை எவரும்  செய்திராத பல சேவைகளை செய்திருக்கின்றேன்.


அத்துடன், மூன்று சிறிய கிறிஸ்தவ மத ஸ்தலங்களையும் என்னுடைய சொந்த நிதியில் அமைத்திருக்கின்றேன். அதேபோல், வறிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கென கட்டிடப் பொருட்களை வழங்கியிருக்கிறேன்.  பல வீதிகள், வடிகால்களை புனரமைத்து கொடுத்திருப்பதுடன், குடிநீர், மின்சார வசதிகளை பலருக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.


மேலும், நீண்டகாலமாக அதாவது 40 வருடங்களுக்கு மேலாக இழுபறியிலிருந்த வத்தளை தமிழ் பொதுநல மன்றத்தின் கட்டிட வரைபடத்தை என்னுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து அதனை பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.  இன்று அந்த கட்டிடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மக்களுக்கு பல சேவைகள் அதனூடாக கிடைக்கப் பெற்றுக்கொண்டிருக்கிறது.


வத்தளையில் "சிறகுகள்' என்ற அமைப்பை ஸ்தாபித்து அதன் காப்பாளராக நான் செயற்பட்டு வருகிறேன். "சிறகுகள்' அமைப்பு பல வேலைத்திட்டங்களை வத்தளை வாழ் மூவின மக்களுக்கும் ஆற்றிவருகிறது.


வத்தளை பிரதேச மக்கள் நீண்டகாலமாக அரசியல் அநாதைகளாக இருந்தவர்கள்.  எனவே, அவர்களுடைய தேவைகள் என்பது மிகப் பெரிதாக இருக்கிறது.  நான் நகர சபைக்கு தேர்வானதன் பின்னர் தான் அவர்கள் அரசியல் அநாதைகள் என்ற ஏக்கத்திலிருந்து விடுபட்டார்கள்.


அதற்கேற்ப நானும் என்னால் முயன்ற அனைத்து உதவிகளையும்  இன்றுவரை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.  சுயதொழில் ஊக்குவிப்புக்கென பல உதவிகளைச் செய்து வருகின்றேன்.  தையல் இயந்திரங்களை வழங்கி சுயதொழிலை ஊக்குவித்திருக்கும் அதேவேளை, 2000 இற்கும் அதிகமானவர்கள் சுயதொழில் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி வழங்கியிருக்கிறேன். அத்துடன் பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.  அவை மிக விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க இருக்கின்றேன்.

வத்தளை தமிழ்ப் பாடசாலை விவகாரம் நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வருகிறது.  இது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன?

என்னுடைய கனவுஇலட்சியம் எல்லாமே இந்த பாடசாலை தான்.  நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கமும் அதுதான்.


நான் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்த பாடசாலை ஒரு சில அரசியல் வாதிகளின் சுயநல அரசியல் தலையீட்டினால் அது தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும். 

பெரிய கனவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையின் திட்டத்திற்கு இன்று ஒரு சில அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக தடைகளை போட்டுவருகிறார்கள்.


வத்தளையில் ஒரு தமிழ்ப்பாடசாலை அமைய வேண்டும் என்பது என்னுடைய நீண்டகாலக் கனவு.  கம்பஹா வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பாடசாலையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்குள் வந்தேன்.  இன்றும் அரசியல் பயணத்தில் இணைந்திருப்பதும் அந்த கனவுக்காகத் தான், அது நிறைவேறும் வரை நான் அரசியலில் இருப்பேன்.


நீண்டகாலமாக வத்தளை பாடசாலைகளில் பௌதீக வளங்கள் மிகவும் குறைவாக காணப்படுகிறது.  இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்ப் பிள்ளைகள்.  இங்கு தமிழ் மக்களுக்கென்று ஒரேயொரு பாடசாலை தான் இருக்கிறது. 

இந்த பாடசாலைக்கு ஒவ்வொரு ஆண்டும் 600 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கின்ற போதிலும் அவற்றில் 190200 மாணவர்கள் தான் தரம் ஒன்றுக்கு உள்வாங்கப்படுகின்றார்கள்.  ஏனைய மாணவர்கள் வெளிமாவட்ட பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.  இதனால் அந்த மாணவர்களும் பெற்றோரும் மிகப்பெரிய கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கும் சூழ்நிலை நீண்டகாலமாக நிலவி வருகிறது.


எனவே, இவற்றுக்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமானால் வத்தளையில் தமிழ் பாடசாலை ஒன்று கட்டியெழுப்புவதே சிறப்பானதாக இருக்கும்.  இவற்றை கருத்திற் கொண்டு தான் நான் இந்தப் பாடசாலை விடயத்தில் என்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி, இருந்து வந்த தடைகளை தகர்த்து, சிக்கல்களை களைந்து 80 விதமான வேலைகளை முடித்திருந்தேன். 

மிகுதியாக இருக்கும் 20 விதமான வேலைகளுக்குத் தான் இன்று முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்து என்னுடைய கனவை நிறைவேற்றுவேன்.


இன்று என்னுடைய இந்த முயற்சிக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரகாஸ் நற்பணி மன்றத் தலைவர் பிரகாஸ், தர்மா ஆகியோர் பக்கபலமாக இருக்கின்றார்கள்.  எங்களுடைய முயற்சி மிக விரைவில் வெற்றியளிக்கும்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் ஏதாவது இருக்கின்றதா?

கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தேன்.  அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் அழைப்பையேற்று அன்று அந்த முடிவை எடுத்தேன். 

அதற்கிணங்க என்னுடைய இணைவு ஐ.தே.கட்சிக்கு பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.  இதுவரை காலமும் ஐக்கிய தேசியக் கட்சி வத்தளை தொகுதியை 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்த வரலாறு இருந்ததில்லை.  ஆனால், என்னுடைய வருகை அந்த வரலாற்றை மாற்றிக்காட்டியது.


அந்த அடிப்படையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வத்தளைபலகல தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளராக என்னை தெரிவு செய்திருக்கிறார்கள்.  அங்கு நான் போட்டியிட காத்திருக்கிறேன்.  


அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு கம்பஹா வாழ் மக்களுடைய அனைத்து பிரச்சினைகளும் தெரியும்.  அத்துடன் எங்களுடைய பிரதேச மக்களுடைய தேவைகள் என்ன என்பதை அவர் நன்கறிவார்.  அவ்வாறு எங்களுடைய மக்களுடைய பிரச்சினைகள், தேவைகளைத் தெரிந்து ஒருவருடன் பயணிப்பதே எங்களுடைய மக்களின் விடிவுக்கு காத்திரமாக இருக்கும்.

அதனால் தான் அவருடன் என்னுடைய அரசியல் பயணத்தை பயணிக்க முடிவு செய்து பயணித்து வருகின்றேன். அவரிடத்தில் எங்களுடைய மக்களுடைய பிரச்சினைகளை மேலும் மேலும் எடுத்துக்கூறி அவருடன் இணைந்து என்னுடைய 
சேவையை மூவின மக்களுக்கும் தொடர்ந்தும் செய்வேன் என்பதுடன், என்னுடைய கனவு இலட்சியத்தையும் வெகு விரைவில் நிறைவேற்றுவேன் என்பதை இந்த நேர்காணலினூடாக கம்பஹா வாழ் மூவின மக்களுக்கும் நான் போட்டியிடவிருக்கும் பலகல மக்களுக்கும் கூறிவைக்கின்றேன். 


படங்கள்: லியாகத் அலிகான்

TOTAL VIEWS : 1141
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
d3jod
  PLEASE ENTER CAPTA VALUE.