தமிழர் - முஸ்லிம் உறவு இறுக்கமடைய வேண்டும்
2017-12-05 11:30:46 | General

கடந்த கால வரலாற்றை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வதன் மூலம் விட்ட தவறுகள் இருப்பின் அவற்றை ஆய்வு செய்து திருத்திக் கொள்வதற்கும் அதேபோல் நல்லவற்றைத் தொடர்ந்து இறுகப் பிடித்து முன்னேறவும் வழி கிடைக்கும்.

அதனாலேயே வரலாற்று முக்கியத்தும் பெறுகின்றது. இவ்வாறுள்ள போது தற்போது தமிழ்ப் பேசும் மக்களென்ற அடிப்படையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இணைப்பை அதாவது அரசியல் ரீதியாக இணைப்பை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாதகக் கூறப்படுகின்றது. முயற்சி வரவேற்கத்தக்கது தான்.

அரசியல்வாதிகள் மத்தியில் அரசியல் கட்சிகள் மத்தியில் அரசியல் அமைப்புகளில் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வதாலும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதாலும் இரு சமுதாயங்களும் அதாவது தமிழ் முஸ்லிம் சமுதாயங்கள் பெறப் போவது என்ன? விடை ஒன்றுமே இல்லை என்பதேயாகும்.

அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத கூட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியிலே அடி மட்டத்திலிருந்து நட்புறவை, நல்லெணத்தை, புரிந்துணர்வை கட்டியெழுப்ப வேண்டும். அடிமட்ட உறவை வலுப்படுத்த வேண்டும். சந்தேகங்களையும் பகைமை உணர்வுகளையும் அச்சத்தையும் போக்க வேண்டும்.

ஒரே மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட  ஒரே மொழியைப் பேசும் சகோதர சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் புதிதாக நட்புறவைப் பேண, உருவாக்க வேண்டும் என்று கூறப்படுவது தேவையற்றது ஏற்புடையதுமல்ல. ஏனெனில் ஏற்கனவே எதுவித வேறுபாடுமின்றி இணைந்து வாழ்ந்த வரலாற்றைக் கொண்டவர்கள் தமிழர்களும் முஸ்லிம்கள் என்பதை வரலாறு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. பதிவு செய்துள்ளது. 

அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற சுயநலச் செயற்பாடுகளே தமிழ் முஸ்லிம் உறவுக்கு உலை வைத்தன என்பதும் தெளிவான பதிவாகும். இந்த உண்மையை இன்றைய இளம் சமூகம் தெரிந்து கொள்ளாமலிருப்பது கவலைக்குரியது. நடந்தவற்றை மறைப்பதும் கண்டனத்திற்குரியது.

எருதுக் கூட்டம் ஒன்றாயிருந்தால் அவற்றைக் கொன்று உண்ண முடியாதென்று சிந்தித்த சிங்கம் ஒன்றை ஒன்று பகைக்கச் செய்து தனிமைப் படுத்தி உண்டு மகிழ்ந்த பஞ்சதந்திரக் கதையை நாம் தமிழ், முஸ்லிம் உறவில் பிரிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் யதார்த்தம் புரியும். அதுவே நடந்தது  நடக்கின்றது.

அந்நிலை தொடராமல் தடுக்கப்பட வேண்டிய  பொறுப்பை தமிழ், முஸ்லிம் சமூகத் தலைவர்கள், கல்விமான்கள், சமயத் தலைவர்கள், ஆசிரியர் சமூகம், மாணவர் சமூகம், சாதாரண பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் எற்க வேண்டும்.

சுமக்க வேண்டும் எமது சமூகங்களின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளிடம் அடகுவைத்துவிட்டு ஒதுங்கியிருக்கக்கூடாது. கடந்கால அரசியல்வாதிகளின் வரலாற்றை, மனப்போக்கை இன்றும் புரிந்து  கொள்ளாதவர்களாக நாம் அதாவது இந்துத் தமிழர்களும் இஸ்லாமியத் தமிழர்களும் கிறிஸ்தவ தமிழர்களும்  இருக்கும் வரை நமது எதிர்காலம் வலுவிழந்தே காணப்படும். நம் ஒவ்வொருவரையும் தனித்தனியே சீண்டிப்பார்க்க, தீண்டிப்பார்க்க நாமே வழி செய்து கொடுத்த பாவிகளாவோம்.

இலங்கையர் எமது அடையளம்,  பன்மைத்துவம் எமது சக்தி என்று இன்று குரல் எழுப்பப்படுகின்றது. நாம் அதாவது சிறுபான்மையினர். அதுவும் ஒரே மொழி பேசுவோர் இந்நாட்டில் அச்சமின்றி நிம்மதியாக மற்றவர்களும் மதிக்கும்படி வாழ வேண்டுமானால் மொழி ரீதியான நமது பிணைப்பை வலுப்படுத்தி மற்றவர்களுடன் சமத்துவமாக தலைநிமிர்ந்து கைகொடுக்க வேண்டும். மாறாக தனித்தனியாகப் பிரிந்து நிற்பதன் மூலம் சிங்கத்தின் ஆலோசனைகளைக் கேட்ட எருதுகளில் கதையை யதார்த்தமாக்கியவர்களாவோம்.

ஆம் வரலாற்று ரீதியாகச் சிந்திப்போம்.  விட்ட தவறுகளை அறிந்து கொள்வோம் எங்கே தவறு நடந்தது? யார் தவறிழைத்தவர்கள்? என்பதைப் புரிந்து கொள்வோம். எனது கூற்றுகள் பக்கச் சார்பானவையல்ல. நடந்த உண்மைகளே அவை. வரலாற்றிலும் தெளிவாகப் பதிவாகியுள்ள மறைக்க முடியாத உண்மைகள்.

இலங்கை சுதந்திரமடைந்த போது இந்நாட்டிலிருந்த சமூகங்கள் முக்கிய மூன்று பிரிவுகளாகக் குறிப்பிடப்பட்டன. அவை கண்டிச் சிங்களவர் அதாவது மலைநாட்டுச் சிங்களவர் மற்றையது கரைநாட்டுச் சிங்களவர். காலப் போக்கில் அரசியல் தேவைகளுக்காக  கரை நாட்டுச் சிங்களவரும் கண்டிச் சிங்களவர்களும் ஓரினமாக சிங்களவர்களை அடையாளம் காட்டப்பட்டனர்.

மற்றைய  மூன்றாவது சமூகம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் ஆகியோர் அடங்கிய தமிழர்கள் என்ற சமூகம் அல்லது இனக்குழு. பல்வேறு மாறுபட்ட பின்னணிகளைக் கொண்டு இரு சமூகங்களாக வெளிப்படுத்தப்பட்ட கரைநாட்டுச் சிங்களவர்களும் கண்டிச் சிங்களவர்களும் ஒரே இனக்குழுவாக இணைத்து வெளிப்படுத்தப்பட்ட நிலையில் தமிழர் சமூகத்திலிருந்து முதலில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வேறாக்கப்பட்டனர். அவர்களது குடியுரிமை வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டு நாட்டின் உரிமையற்ற சமூகமாகத் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அடுத்து தமிழர் என்ற இனக் குழுமத்திலிருந்து இஸ்லாமியத் தமிழரை அதாவது முஸ்லிம்களை வேறுபடுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் பயன்படுத்தப்பட்டனர். இராமன் ஆண்டாலென்ற இராவணன் ஆண்டால் என்ன என்ற சிந்தனையுடன் தமது அரசியல் பிரதிநிதிகள் நல்லதையே செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தாமுண்டு தம்பாடுண்டு என்றிருந்த சாதாரண முஸ்லிம் மக்கள் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டனர்.

1958 ஆம் ஆண்டு தமிழருக்கெதிரான இனக் கலவரம் நிகழ்ந்த போது கொழும்பு போன்ற பகுதிகளில் தமிழருக்குப் பாதுகாப்பாக முஸ்லிம்கள் செயற்பட்டதை பொறுக்க முடியாத நாட்டின் அதிகாரத்திலிருந்த முக்கிய தலைவர் ஒருவர் தென்னிலங்கையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் ஒருவரை அழைத்து தமிழர்கள் வேறு முஸ்லிம்கள் வேறு என்றும் அதை முஸ்லிம்களுக்கு தெளிவுபடுத்தி தமிழர்களுக்கு சார்பாக நடக்க வேண்டாம் என்று கூறியதும் அதை ஏற்று முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் கூட்டம் நடத்தி தமிழ் முஸ்லிம் சமூகப் பிளவுக்கு வழிவகுக்கப்பட்டமையும் அறுபது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வாகக் கூறப்படுகின்றது.

அதன் தொடர்ச்சியாக தமிழர் வேறு சமூகம் முஸ்லிம் வேறு சமூகம் என்ற வாதம் கட்டியெழுப்பப்பட்டது. தொடர்ந்து தமிழ்ப் பாடசாலைகளென்று இயங்கிய பாடசாலைகள் தமிழ்ப் பாடசாலைகளென்றும் முஸ்லிம் பாடசாலைகளென்றும் வேறுபடுத்தப்பட்டன.

இவ்வாறு கல்வியில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டாலும் தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவ மாணவியரும் அதேபோல் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவ மாணவியரும் கற்பதையும் அதேபோல் முஸ்லிம் ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளிலும் தமிழ் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகளிலும் கற்பிப்பதையும் எவராலும் தடுக்க முடியவில்லை.

ஏனெனில் இரு சாராரும் ஒரே மொழிக்கு உரிமையுள்ளவர்கள். பேருவளை போன்ற தூர இடங்களிலிருந்து முஸ்லிம் பிள்ளைகள் இந்துக் கல்லூரிகளையும் இந்து மகளிர் கல்லூரிகளையும் சைவ மங்கையர் கல்லூரிகளையும் நாடி வருவது, பெற்றோர் அதாவது முஸ்லிம் பெற்றோர் தமது பிள்ளைகளைத் தமிழ் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவது தமிழரும் முஸ்லிம்களும் ஒரே மொழியான தமிழ் மொழியின் உரித்தாளர்கள் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

நிலைமை இவ்வாறிருக்க மேற்படி இரு சமூகத்தவரையும் வேறுபடுத்த பிளவு படுத்த பல சக்திகள் பின்னணியிலிருந்து செயற்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் முதலாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக கொண்ட மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் முஸ்லிம் பிரமுகரொருவரையே தமிழர்கள் தெரிவு செய்தமை வரலாறு. முஸ்லிம் என்றாலும் அவர் தமிழரே என்பது அன்றைய நிலை. அவரும் தமிழ் மக்களின் உணர்வை மதித்துச் செயலாற்றியுள்ளார்.

1956 ஆம் ஆண்டின் பின் வாக்களித்த மக்களைப் புறந்தள்ளி அதிகாரத் தரப்பினரின் ஆட்சியாளர்களின் பக்கம் தாவும் அரசியல் மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர இலங்கையின் மூன்றாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தமிழர்களதும் முஸ்லிம்களதும் அமோக  ஆதரவுடன் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற  கல்முனை கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மற்றும் நிந்தவூரிலிருந்து தெரிவான எம்.எம். முஸ்தபாவும் தமிழ் மொழி உரிமைக்காக குரல் எழுப்பிய தரப்பிலிருந்து ஆண்ட சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்து தமிழைப் புறக்கணித்த ஆட்சியாளர் பக்கம் சேர்ந்தனர். 

அதேபோல் தொடர்ந்து தமிழர் தரப்பில் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற பொத்துவில் அப்துல் மஜீத், நிந்தவூர் அப்துல் மஜீத் கல்முனை எம்.சி. அகமது, மூதூர் எம்.ஈ.எச்.முகமதலி, மன்னார் அப்துல் ரஹீம், மட்டக்களப்பு பசீர் சேகுதாவூத் என்று பலரும் ஆளும் தரப்புகளுடன் இணைத்தமை வரலாற்றுப் பதிவுகளாகும்.

தமிழ் மக்களால் தம் தலைவராக கொள்ளப்பட்ட கல்முனை மருதமுனையைச் சேர்ந்த மசூர் மௌலானவை முன்னைய மூதவை  என்ற செனட் சபைக்குத் தமிழரசுக் கட்சி நியமித்தது. அவர் பதவி பெற்ற சில தினங்களிலேயே ஆளும் கட்சியில் இணைந்து விட்டார். நிலையான கொள்கையில்லாதவர்களை தேர்தல்களில் நிறுத்தி வெற்றி பெறச் செய்த குற்றவாளிகள் தமிழர் தரப்பு என்றும் கூறுவதில் தவறில்லை அல்லவா?
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக  சம்சுதீனை நியமனம் பெறச் செய்யப் பாடுபட்டவர் மன்னார் வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் என்பதும் பதிவிலுள்ளது.

தமிழர் பகுதியான திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராகத் தமிழர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே சம்சுதீன் நியமனம் பெற வழி ஏற்பட்டது என்பதை ஏற்க வேண்டும். தமிழர்கள் நிறைந்து வாழும் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக முதல்வராக சுல்தானும் அதேபோல் அதன் பிரதி முதல்வர்களாக எம்.ஜி.பஸீர் மற்றும் அப்துல் காதர் போன்றோர் தமிழ் மாநகர சபை உறுப்பினர்களாலேயே தெரிவு செய்யப்பட்டனர் என்பது வரலாற்றுப் பதிவாகும். 

நம்மவர் என்ற உணர்வுடன் புத்தளத்தில் நெய்னா மரிக்காரையும் பலாங்கொடையில் எம்.எல்.எம்.அபுசாலியையும் களுத்துறையில் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரையும் கண்டியில் பைசர் முஸ்தபாவையும் தமிழர்கள் ஆதரித்தமையை மறக்க முடியுமா? முஸ்லிம்கள் எங்கெங்கு பாராளுமன்றத்திற்கோ உள்ளூராட்சி சபைகளுக்கோ போட்டியிடும் போது கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் என்ற இன உணர்வுடன் தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். வாக்களித்து வருகின்றமையை ஆய்வு செய்தால் புரிந்து கொள்ள முடியும்.

மொழி ரீதியாக ஒன்றுபட்டிருந்த சமுதாயம் இன்று மதத்தை முன்னிலைப்படுத்தி பிளவு படுத்தப்பட்டுள்ளமை வேதனையானது. அநாகரிகமானது. அரசியல்வாதிகளின் சுயநலச் செயற்பாடுகளால் சமூகங்களிடையே பகைமை வலுப் பெற வழி செய்யப்படுகின்றதேயன்றி சாதாரண பொதுமக்கள் பெற்றது ஒன்றுமில்லை.

அன்று தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்த பிளவுபடுத்திய அரசியல் வாதிகள் இன்று தம் மத்தியிலேயே ஒற்றுமையின்றி  பிளவுபட்டு செயற்படுகின்றனர். அரசாங்கத்திற்கு எஜமான விசுவாசத்தைக் காட்டுகின்றனர். தம்மத்தியிலே மோதல் போக்கை, பகைமையை வளர்க்கின்றனர். சுயலாபம் ஈட்டுகின்றனர்.

இந்நாட்டில் சிறுபான்மை இனத்தவரான மொழியின் உரித்துடையவர்களாக தமிழர்களைத் தமிழர், முஸ்லிம்களென்று பிளவுபடுத்தி வலுவிலக்கச் செய்து அதன் மூலம் ஆதாயம் பெறுவது யார் என்பதை சமூகத்தின் கல்விமான்களும் பொது மக்களும் புரிந்துகொண்டு விட்ட, விடுபட்ட தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பெருமைமிகு ஜனாதிபதியாகவிருந்த அப்துல் கலாம், கம்பராமாயணச் சிறப்பு சொற்பொழிவாளராகவிருந்த நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில், இந்துவாக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற புகழ் பெற்றவர்கள் மதத்தால் தம்மை இஸ்லாமியராகக் கொண்டாலும் தாம் இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வு கொண்டவர்கள் என்பதை உலகிற்கு காட்டி உதாரணமாகத் திகழ்கின்றனர். மொழியே மனிதனின் மூச்சு தமிழே தமிழ் பேசுவோரின் சக்தி இதை உணர்ந்து ஒன்றுபட்டால் அதுவே நமக்கு வலு சேர்க்கும்.

TOTAL VIEWS : 727
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
sfpz3
  PLEASE ENTER CAPTA VALUE.