மகிந்தவுக்கு எதிர்வினை புரியத் தவறிய தமிழ்த்தரப்பு
2017-11-06 11:29:59 | General

இளையதம்பி தம்பையா

பாராளுமன்ற வழிகாட்டல் குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு சம்பந்தமான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட நகர்வு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பின்பே தெரியவரும்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 2 ஆம் திகதிவரை நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் அறிக்கையை எதிர்ப்பவர்கள் அவ்வறிக்கையில் இல்லாத விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து பேசியுள்ளனர். அதாவது நாடு பிளவடையும் என்றும், பாராளுமன்றம் செயலிழக்கும் என்றும் பௌத்த மதத்திற்குரிய முதன்மையான இடமில்லாது போதும் என்றும் சிங்கள மக்களை அச்சுறுத்துவதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போது குருநாகல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷவும் அவரது கூட்டாளிகளும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக மகிந்த ராஜபக்ஷ அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை கைவிடும்படி கோரியுள்ளார்.


தான் ஒருபோதும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று மாகாணங்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதாக உறுதியளிக்கவில்லை என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது சபையொன்றை அமைப்பதாக மட்டுமே கூறினேன் என்றும் அது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள செனட்சபையை போன்றதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணங்களுக்கு இனரீதியாக அதிகாரங்களை பகிரும்போது நாடு பிளவடையும் என்றும் மாகாணங்களில் சிறுபான்மையாக இருப்பவர்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்றும், பாராளுமன்றம் தலைமையான சட்டவாக்க சபையாக இருக்க முடியாது போகும் என்றும்.

அதனால் இந்த அறிக்கையில் கூறப்படும்  விடயங்கள் புதிய அரசியல் யாப்பில் உருவாக்கப்பட்டால் இனிவரும் காலங்களில் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதற்கான அக்கறை குறைந்துவிடுவதுடன், எல்லோரும் மாகாண சபைகளுக்கே போட்டியிடுவர் என்று கவலை தெரிவித்துள்ளார்.


தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கருதுவாராயின், தேசிய இனங்களுக்கே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமேயன்றி, மாகாணங்கள் என்ற நிலப்பரப்புகளுக்கல்ல என்பதை அவர் ஏற்றுக் கொள்வார். அவர் மட்டுமன்றி ஜே.வி.பி. யும் கூட தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரங்கள் பகிரப்படும் போது இனரீதியாக அல்லது தேசிய இனங்களுக்கே அதிகாரங்களை பகிரப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

எனினும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் கையளிக்கப்படுவதை ஜே.வி.பி. கடுமையாக எதிர்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மாகாணங்களுக்கு அதிகாரங்கள் கையளிக்கப்படும் போது வடக்கு கிழக்கிற்கு மட்டுமன்றி ஏனைய மாகாணங்களுக்கும் அதாவது சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களுக்கும் கையளிக்கப்படும் என்பதற்கு மாறான ஏற்பாடுகள், இடைக்கால அறிக்கையில் இல்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தின்படியும் எல்லா மாகாணங்களுக்கும் சமமான ஏற்பாடுகளே இருக்கின்றன. அதிகாரப்பகிர்வின் உண்மையான ஜனநாயகத்தன்மை அதிகாரங்கள் உயர்ந்தபட்சம் மாகாணங்களுக்கு அல்லது விளிம்புகளுக்கு பகிரப்படுவதிலேயே தங்கியுள்ளது.

அத்துடன் அடக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு அல்லது சிறுபான்மையாக இருக்கும் தேசிய இனங்களுக்கு பெரும்பான்மையாக இருக்கும் தேசிய இனத்தை விடக் கூடிய அதிகாரங்கள் (சமச்சீரற்ற அதிகாரப்பகிர்வு) பகிரப்படுவது தேசிய இனங்களுக்கிடையே சமத்துவமின்மையையும், சந்தேகத்தையும் போக்குவதுடன் அவற்றிடையே ஐக்கியத்தை மேம்படுத்தும்.

மாகாணங்களுக்கு கூடிய அதிகாரங்களை பகிர்வதால் மாகாண எல்லைக்குள் வாழும் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என்று மகிந்த உண்மையில் கவலையடைவாராயின் அதற்கும் அதிகாரப்பகிர்வு கோட்பாட்டில் இடமிருப்பதை அவர் அறிய வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென அவர் முன்மொழியலாம்.

மகிந்தவை மிகவும் நேசிக்கும், சீனாவில் ஒரு பிராந்திய சுயாட்சி அமைப்பிற்குள் சிறுபான்மையாக இருக்கும் தேசிய இனங்களுக்கு உபசுயாட்சி அமைப்புகள் இருக்கின்றன. பிராந்திய சுயாட்சியின் கீழுள்ள மக்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் ஒரு விடயம் தொடர்பாக முரண்பாடு ஏற்படும் போது அதனை தீர்க்க சட்ட ஏற்பாடும், பொறிமுறையும் இருப்பது போன்று பிராந்திய சுயாட்சிக்கும் அதன் எல்லைக்குள் வாழும் சிறுபான்மையினருக்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை தீர்க்க சட்ட ஏற்பாடும் பொறிமுறையும் இருக்கின்றன என்பதை அவர் கேட்டறியலாம்.

சீனாவின் துறைமுக நகரம், தாமரைக் கோபுரம் போன்றவற்றிலிருந்து பாடங்களைப் படிப்பதை விட ஒப்பீட்டு ரீதியில் திருப்திகரமான 59 தேசிய இனங்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தியுள்ள அதன் அரசியல் யாப்பையும், சுயாட்சி தொடர்பான சட்டங்களையும் படிப்பதும் நேரில் அவதானிப்பதும் நன்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கான உத்தியோகப்பூர்வமாக அழைக்கப்பட்டு அங்கு சென்றிருக்கும் சுதந்திரக் கட்சி, ஐ.தே. கட்சி உறுப்பினர்கள் அவற்றை அறிந்து வருவது நல்லது.

சீனா தற்போது சோஷலிஸ நாடாக இல்லாவிட்டாலும் சோஷலிஸ சீனாவில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன. இதைவிட நிக்கரகுவாவிடமிருந்தும் கற்கலாம். மேற்கு நாடுகளில் குறிப்பாக சுவிற்சலாந்து, பெல்ஜியம், ஒஸ்திரியா போன்றவையும் கவனத்திற்குரியன. 


மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் போது பாராளுமன்றம் செயலிழக்கும் என்ற மகிந்தவின் பயம் நியாயமற்றது. எனெனில் பாராளுமன்றம் மாகாணசபைகள் மீது மேலான கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் ஏற்பாடுகள் இடைக்கால அறிக்கையில் நீக்கப்பட்டிருக்கவில்லை. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு எதிரான மகிந்தவின் நிலைப்பாடானது தமிழ் மக்களுக்கெதிரானது மட்டுமன்றி சிங்கள மக்களுக்கு எதிரானதும்தான்.

ஏனேனில் மாகாணங்களுக்கு அல்லது விளிம்புகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவது ஒருவகையில் மக்களின் கைகளுக்கு அருகில் அதிகாரங்கள் செல்வதாகும். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் போது அது தமிழ் மக்களுக்கு அருகில் மட்டுமன்றி சிங்கள மக்களுக்கு அருகிலும் தான் செல்கிறது. மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதை எதிர்ப்பது அதிகாரங்கள் குறிப்பிட்ட ஒரு பிரிவினரிடம் குடும்பத்தினரிடம் குவிந்திருக்க வேண்டுமென்ற மேலாதிக்க அல்லது சர்வாதிகார நிலைப்பாடாகும்.

பாராளுமன்றம் கூட மத்தியத்துவப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி மேலாதிக்க அதிகாரம் கொண்டதாக இருக்கக் கூடாது. சட்டவாக்க சபை என்ற ரீதியில் பாராளுமன்றம் சட்டவாக்க மேலாதிக்கத்தை கொண்டிருப்பதும் ஜனநாயகத்திற்கு முரணானதே. நாட்டு மக்களின் ஜனநாயகம் உறுதிசெய்யப்பட வேண்டுமானால் ஆட்சி நிறுவனங்கள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டுமென்றால் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் விளிம்புகளுக்கு அல்லது ஏனைய நிறுவனங்களுக்கு பகிரப்பட வேண்டும். இதனை எதிர்க்கும் மகிந்த ஜனநாயகவாதியல்ல என்பது சிங்கள மக்களுக்கு மேலும் தெளிவாக வேண்டும்.


மகிந்த முன்வைக்கும் இன்னொரு பயம்தான் பௌத்த மதத்திற்குரிய முதன்மை நிலை இல்லாமல் போகும் என்பதாகும். இதன் முதன்மை நிலைமையை இல்லாமல் செய்யும் எந்த ஏற்பாடும் இடைக்கால அறிக்கையில் கிடையாது.

பௌத்த மதத்திற்கு முதன்மையான நிலையை இலங்கை அரசு உறுதி செய்வதுடன், அதனை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பது பௌத்த உயர் பீடங்களையா அல்லது பௌத்த குருமாரின் சங்க சபைகளையா அல்லது பௌத்த தத்துவார்த்த நாகரீகத்தின் அடிப்படையிலான இலங்கை மக்களின் வாழ்க்கையையும் ஆட்சியையுமா என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.

மகிந்த போன்றவர்களின் எண்ணமானது அவர்களது அரசியல் இருப்பை உறுதி செய்வதாக பௌத்தபீடங்களின் முதன்நிலையை உறுதி செய்து பேணி பாதுகாப்பதாகும். 1972  ஆண்டு முதல் பௌத்த மதத்தின் மேலாண்மை இலங்கை அரசினால் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், குற்றச் செயல்களின் அதிகரிப்பு தனிமனித போட்டி பொறமை கூடியுள்ளமை, ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம், சமூகங்களுக்கிடையேயான அதிகரித்துள்ள முரண்பாடு, பௌத்த பிக்குமாரின் ஒழுக்கத்திற்கு மாறான தனிமனித, பொது வாழ்க்கை போன்ற பௌத்த நாகரீகம் மேலாண்மை செலுத்தி இருக்கவில்லை என்றும் பௌத்தத்தின் பேரிலான சிலரின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளதென பௌத்த பிக்குகளில் முக்கியமானவர்களே விமர்சிக்கின்றனர். அவர்கள் முன்வைத்திருக்கும் மேற்படி எதிரிடை விளைவுகளினால் , அரசின் விசேட கவனமும், பாதுகாப்பும் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் பௌத்த நாகரீகம் வளர்ச்சியடையவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது எனலாம்.


இடைக்கால அறிக்கை தொடர்பாக நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் பலரும் பல விடயங்கள் பற்றி உரையாற்றியுள்ள போதிலும் மகிந்தவின் கருத்துகள் பற்றி இங்கு அலசப்படுவதற்கு காரணம் அவரின் கருத்துக்கள் பெரும்பான்மை சிங்கள மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதாலாகும்.


அவரின் கருத்துகளை முறியடிக்கும் அளவிற்கு பாராளுமன்றத்தில் எதிர்வினைகள் அமையவில்லை. தமிழ்த்தரப்பிற்கு இருந்த இரண்டு கடமைகளும் சரிவர நிறைவேற்றப்படவில்லை. சம்பந்தனும், சுமந்திரனும் இடைக்கால அறிக்கையின் பங்காளிகளை போன்றே உரையாற்றியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் யாப்பு தேவைகள் பற்றி தர்க்கபூர்வமான கருத்துகளை முன்வைக்கவில்லை என்பது மட்டுமன்றி மகிந்த போன்றவர்களின் கருத்துக்களை முறியடிக்கும் வகையிலும் எதிர்கருத்துக்களை முன்வைக்கவும் தவறிவிட்டனர்.


இந்த விவாதத்தில் தமிழ்த் தரப்பிற்கு இரண்டு கடமைகள் இருந்தன.  ஒன்று தமிழர்கள் ஏன் ஒற்றை ஆட்சியை மறுத்து வடக்கு, கிழக்க இணைப்பை வலியுறுத்தி, மாகாணங்களுக்கு கூடிய அதிகாரங்களை கேட்கின்றனர் என்பதாகும். இரண்டாவது, தமிழ் மக்களின் அக்கோரிக்கைகள் நாட்டை பிளவுபடுத்துவதோ, சிங்கள பௌத்தர்களின் இருப்பை பாதிப்பதோ அல்லது என்பதுடன் நாட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் மேலும் ஜனநாயகத்தை உறுதி செய்யும் புதிய அரசியல் யாப்பு தேவை என்பதையும் எடுத்துக் கூறி தேசிய இனப்பிரச்சினைக்கு அப்பால் புதிய அரசியல் யாப்பில் கவனிக்கப்பட வேண்டிய பிற பல விடயங்கள் பற்றி பேசியிருக்க வேண்டும்.


மேற்படி விடயங்கள் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கருத்துக்களை சிலர் முன்வைத்திருந்த போதும் ஒரு முறைமைக்குள்நின்று பொது இணக்கப்பாட்டுடன் தமிழ்த்தரப்பு அதனது கருத்துக்களை முன்வைக்கத் தவறிவிட்டது.  பாராளுமன்ற விவாதத்தை தமிழ்த்தரப்பு தமிழ் மக்களின் இன்னொரு போராட்டமாக முன்னெடுத்திருக்க வேண்டும். எனினும் அது தவறவிடப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கை பற்றி மேலும் விவாதங்கள் நடைபெறலாம். அப்போது அவை பற்றி தமிழ்த்தரப்பு பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவது நன்று.


மகிந்தவிற்கு எதிர்வினை புரிவதுதான் பிரதான இலக்கல்ல. ஆனால் அதிகாரப்பகிர்வுடன் கூடிய புதிய அரசியல் யாப்பிற்கு பாரிய முட்டுக்கட்டையாக இருப்பது, இருக்கப்போவது மகிந்தவின் கருத்துக்களே. அவை பேரினவாத சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் பிரபலமானவையும், பலமானவையுமாகும். அவற்றை அரசியல், சட்ட, தர்க்க ஞானத்தை கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.


அதேவேளை மகிந்தவிற்கு எதிர்வினை புரிவது என்பது இடைக்கால அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அல்லது குறைவானவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கு சப்பைக் கட்டுவதன்று. ஒரு புறம் மகிந்தவிற்கு எதிர்வினை புரிவதுடன் மறுபுறம் இடைக்கால அறிக்கைக்கு அப்பால் செல்லும் குறிக்கோளை கொண்டதாக விவாதங்களை முன்னெடுக்கலாம்.

இந்த போராட்டம் இடைக்காலத்திற்குரிய உரிமைகள் தொடர்பானவையே நீண்டகால இலக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான இணைப்பாட்சி அல்லது ஐக்கிய கூட்டாட்சியாக இருக்கலாம்.


தற்போதைக்கு இன்னொரு ஆயுதப் போராட்டம், கட்டலோனியா, ஈராக்கிய குர்தீஷ்தான் என்பவற்றுக்கான பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்புகள் போன்றவற்றை காட்டி பேரினவாதத்தை பயமுறுத்த முடியாது. இலங்கை சூழலும், இலங்கை மீதான சர்வதேச சூழலும், தமிழ் மக்களின் சூழலும் கட்டலோனியா, குர்தீஷ்தான் பற்றி சிந்திக்க முடியாது.

TOTAL VIEWS : 1098
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
6sifl
  PLEASE ENTER CAPTA VALUE.