விக்னேஸ்வரன் சமஷ்டி பற்றி கூறுவது தேசத்துரோகமானால் சமஷ்டி சிந்தனையை ஊட்டிய பண்டாரநாயக்கவை எப்படி நோக்குவது?
2016-10-05 10:08:10 | General

நாகரிகம், பண்பாடு, மனிதத் தன்மை என்பன இன்று பேணப்படுகின்றன என்ற மாயை காணப்படுகின்றது. அதற்கு அர்த்தம் என்ன என்ற விளக்கமற்ற நிலையும் காணப்படுகின்றது. மனிதகுலம் நாகரிகமடைந்துள்ளது, பண்பாட்டில் மேன்மையுற்றுள்ளது.

மனிதத் தன்மையைப் பேணிப்பாதுகாத்து வளர்த்து வருகின்றது என்பதை வெற்றுப் பேச்சாகவே உலக அரங்கில் காணமுடிகின்றது. நமது நாடும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதைக் கவலையுடன் ஏற்றேயாக வேண்டும்.


பசியோடு இருப்பவனது பசியைப் போக்குவது தர்மம். பசியோடு இருப்பவனுக்கு முதலில் உணவு வழங்கிப் பசியாற்ற வேண்டும்.  அதன் பின்னரே போதனை செய்ய வேண்டும் என்றார் புத்தபெருமான். பசித்திருப்பவன் காதில் போதனை புகாது.

மனதில் பதியாது என்ற உண்மையைப் புத்தபெருமான் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாக எடுத்தியம்பி மனித குலத்திற்கு அருள்மொழி பகன்றுள்ளார்.


நமது நாட்டில் இன்று நடைபெறும் பல நிகழ்வுகளை நோக்கும்போது புத்த பெருமானின் அருள்வாக்கு அலட்சியப்படுத்தப்பட்டுவருவது உறுதியாகின்றது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று முழங்கும் நம்நாட்டில் இந்த நிலை நிலவுவது அந்த மகானை வெறும் காட்சிப் பொருளாக மாற்றிவிட்டதையே காட்டுகின்றது.


ஆம், இன்று நாட்டிலே பொங்கியெழும் இனபேதத்தையே சுட்டிக்காட்டுகிறேன். புத்தபகவானின் அறிவுரையில் தொக்கிநிற்பது பசித்தவனுக்கு உணவு வழங்குவது மட்டுமே தர்மம் என்பதல்ல, அதற்கும் அப்பால் வேறு பலவும் உள்ளன. அதாவது மனிதன் வாழ வேண்டிய, அவனுக்கு தேவையான சகல அத்தியாவசிய உரிமைகளையும் அவன் அனுபவிக்க வழி செய்து கொடுப்பது நாகரிகம். மனிதப்பண்பு என்பவையவை.


அண்மையில் வடபுலத்தில் இடம்பெற்ற "எழுக தமிழ்' நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இன்று நாட்டிலே இன உறவுகளுக்கு ஆப்புவைக்கும் செயற்பாடுகள் கட்டி வளர்க்கப்படுகின்றன. பல்வேறு தரப்புகள் தாம் இந்நாட்டில் செய்த, செய்துவரும், இனியும் செய்ய முனைந்துள்ள குற்றங்களையும் தப்புகளையும் மறைக்கும் போர்வையாக, நாட்டு மக்களின் கண்களில் மண்ணைத் தூவும் முயற்சியுடன் அந்நிகழ்வைப் பாதகமாக வர்ணிக்கின்றன.

அதுவே உண்மை. இது அரசியல் நாகரிகமற்ற, நாட்டுப்பற்றற்ற, இனவுறவுகளை விரும்பாத பதவிப் பற்றாளர்களின் முனைப்பாகவுள்ளதை சிந்தித்தால் புரிந்துகொள்ளமுடியும்.


தமிழ் என்ற வார்த்தைக்கு இனிமை, அழகு, கருணை என்ற பொருளுமுண்டு  என்பர். இந்நாட்டில் தமிழ் என்பது பூதம், பிசாசு போன்று வர்ணிக்கப்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சித் தொடரில் இன்று அரசியலரங்கிலிருந்து காணாமல்போயுள்ள மெத்தப்படித்த மேதாவியான புத்தபிக்கு ஒருவர் தொடர்ச்சியாக சிங்கள மொழியில் தமிழ் என்பதையும் தமிழர் என்பதையும் குறித்து புதுமையான விளக்கமளித்தார்.

அதை நானும் இப்பத்திகளிலே பலமுறை குறிப்பிட்டிருந்தேன்.
தமிழ் என்பது ஒரு மொழியையோ, தமிழர் என்பது ஒரு இனத்தையோ குறிப்பதல்ல. அவை அந்நியர், எதிரி, ஆக்கிரமிப்பாளர் என்ற பெருமை கொண்டவை என்பது, புதைகுழி தோண்டுவதில் கீர்த்தி பெற்ற சக்கரவர்த்தியாகக் கூறப்படும் அந்த மெத்தப்படித்த ஆனந்த துறவியின் கூற்றாகவிருந்தது. அதையிட்டு எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. அதுவே இன்று "எழுக தமிழ்' என்னும் போது எதிரியே எழுக, அந்நியனே எழுக, ஆக்கிரமிப்பாளனே எழுக என்று சிங்கள மக்களைத் தூண்டவைக்கிறதோ தெரியவில்லை.


உலகின் மூத்தமொழியை, மொழியினரை, இந்நாட்டின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்துவது இனவாதமா, இனவுறவுக்கானதா, பண்பட்ட சிந்தனையா, நாகரிகமானதா என்பதைப் புத்தியுள்ள எவரும் புரிந்துகொள்வார்கள்.


இவை இவ்வாறுள்ள நிலையிலே "எழுக தமிழ்' நிகழ்வை தலைமையேற்று நடத்திய வடமாகாண முதலமைச்சரை இனவாதியாக, மொழி வெறியராக, பௌத்தத்திற்கு மாறானவராகக் காட்ட முற்படுவது வேடிக்கையானது மட்டுமல்ல, கீழ்த்தரமானதுமாகும். பெரும்பான்மையினத்தவர் மட்டுமல்ல சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம்களும்கூட தறிகெட்ட இந்த நிலைப்பாட்டிலிருப்பது இந்நாட்டின் வளமான எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளுவதாயுள்ளது;

உலக அரங்கில் நம் நாட்டைத் தொடர்ந்தும் கண்காணிப்புக்குள் வைத்திருக்கும் நிலைக்குத் தள்ளுவதாகவும் உள்ளதென்பதை எவருமே புரிந்துகொள்ளாமலிருப்பது நாட்டின் விதியாகிவிட்டது. சிங்கள  தமிழ் உறவையும், பௌத்த  இந்து உறவையும் தனது குடும்பத்திலேயே வரிந்துள்ள நமது நாட்டிலுள்ள ஒரே அரசியல்வாதி வடமாகாண முதலமைச்சரே. அதாவது தமிழ், சிங்கள தேசிய இனங்களின் இணைத் தலைவராக, தேசியத் தலைவராக வெளிப்படுத்திப் பெருமைப்படுத்தப்பட வேண்டியவரைத் தூற்றுவது நாட்டில் இனவுறவுக்குச் சாவுமணியடிக்கக் கங்கணம் கட்டியுள்ள பதவிப்பற்றாளர்களது நோக்கமேயன்றி வேறல்ல.


"எழுக தமிழ்' நிகழ்வின் ஆரம்பத்திலேயே இந்நிகழ்வு சிங்கள மக்களுக்கோ, பௌத்த சமயத்திற்கோ எதிரானதல்ல என்பதையும் தமிழ் மக்களின் தேவைகளை வெளிப்படுத்துவதே நோக்கமென்றும் முதலமைச்சர் பகிரங்கப்படுத்தியுள்ளார். அக்கூற்றை மறைத்து கோரிக்கைகளை விமர்சிப்பது அறிவுசார்ந்த செயற்பாடல்ல. நடவடிக்கையுமல்ல.


நிர்வாணமாக, உடம்பை மறைக்க உடையின்றி இருப்பவனை ஆபாசமாக நிற்கின்றான் என்போம். விசர் முற்றிவிட்டது என்போம். அருவருப்புடன் நோக்குவோம். மறுபக்கம் சிலர் ஆடையின்றி அலங்கோலமாக இருப்பவனை, இருப்பவளைப் பார்த்து இரசிக்கும் பண்பிழந்த நிலையிலும் இருப்பதுண்டு. மனவிகாரம் கொண்ட காமாந்தகர்களாக அவ்வாறானவர்களை மதிப்பிடுவதும் உண்டு.


மனிதனுக்குரிய அடிப்படை உரிமைகளை, சர்வதேசம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ள, புத்த சமயம் உட்பட உலகிலுள்ள பண்பட்ட சமயங்களின் கொள்கையாகவுள்ளவற்றை வழங்குவதும், அனுபவிக்க  விடுவதும், தடை செய்யாதிருப்பதும் மனிதகுல நாகரிகத்தின்பாற்பட்டது. அவற்றை மறுப்பது, தடுப்பது, அனுபவிக்க முடியாது செய்வது அநாகரிகமானது.


இந்நாட்டில் ஒருசாரார் அதாவது, தமிழர்களில் ஒரு பகுதியினர், தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறாது தடுக்கப்படுவது, கல்வி, தொழில் வாய்ப்புகளின்றித் அவலப்படுவது, குடியிருக்க வீடுவாசலின்றித் துன்பப்படுவது, மொழியுரிமை பயன்படுத்தப்படாது தடை செய்யப்படுவது உட்பட பல அடிப்படை, உலகம் அங்கீகரித்துள்ள மனிதகுலத் தேவைகளை நாமும் அனுபவிக்க வழிவேண்டுமென்ற கோரிக்கையை பிரிவினைவாதமென்றும் இனவாதம் என்றும் ஏற்றுக்கொள்ள முடியுமா? சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் தமிழினம் பல வழிகளில் நிர்வாணமாக்கப்பட்டுள்ளது. அதுவே உண்மை. குடியுரிமை, வாக்குரிமை பறிப்பு, மொழியுரிமை பறிப்பு, கல்வி, தொழில், நிலவுரிமைகள் பறிப்பு, பாதுகாப்புக் குறைபாடுகள் என்ற மனிதனுக்குரிய ஆடைகள் கடந்த கால இலங்கை வரலாற்றில் திட்டமிட்டே களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டமை வரலாறு.


மனிதனாக, சமத்துவமாக வாழ, களையப்பட்ட உரிமைகளைக் கேட்பது நியாயமில்லையென்று எவராலும் பகர முடியுமா? நிர்வாணமாக நிற்பவனை, நிற்பவளைப் பார்த்து இரசிக்கும் காமாந்தகனாக நிற்பவனுக்கும் மற்றவர்களின் உரிய உரிமைகளை மறுப்பவனுக்கும் என்ன வேறுபாடு? உரிமைகளை அனுபவிக்க வழி தேடுபவனை விமர்சிப்பவன் உடலில் ஆடையின்றி நிர்வாணமாக நிற்பவனைப் பார்த்து @ரசிக்கும் காமுகனுக்கே இணையாகக்கூடியவன்.

"வாழு, வாழவிடு' என்ற கோட்பாட்டின் பொருள் புரியா அறிவற்றவன். சமஷ்டி அல்லது கூட்டாட்சி ஏற்பட்டால், அதற்கு வழி செய்தால் பதவியைத் துறப்போம், வீதியிலிறங்கிப் போராடுவோம் என்று பூச்சாண்டி காண்டுகின்றனர் சிலர். அவர்களே காலஞ்சென்ற பிரதமர் பண்டாரநாயக்கவின் சிந்தனைகளைப் பாராட்டுகின்றனர்.


இந்நாட்டுக்கு கூட்டாட்சி முறைமை அதாவது சமஷ்டி முறைமை ஏற்றது என்று முதன்முதலில் கூறியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க. விக்னேஸ்வரன் சமஷ்டி பற்றிக் கூறுவது தேசத்துரோகமானால் அவருக்கு அந்தச் சிந்தனையை ஊட்டிய பண்டாரநாயக்கவை எப்படி நோக்குவது?


"எழுமின், விழுமின், கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்' என்றார் சுவாமி விவேகானந்தர். எழுமின் என்பதும் எழுக என்பதும் ஒரே பொருள் கொண்டவை. சுவாமி விவேகானந்தர் இன்றிருந்தால் அவர் மக்களை எழுக, விழிப்பாக இருந்து கருதிய கருமம் கைகூடும் வரை உழையுங்கள் என்று விழிப்பூட்டியதற்கும் தப்பபிப்பிராயம், தவறான விளக்கம் சொல்லவும் கூடும். இந்த நாட்டிலே இனங்களுக்கிடையே குறிப்பாக தமிழ்  சிங்கள இனங்களுக்கிடையேயும், பௌத்த இந்து மதத்தவரிடையேயும் உறவு வலுப்படுத்தப்பட வேண்டியது காலத்தில் கட்டாயம். குறித்த இரு இனத்தவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்த, இலாபம் பெற்றவர்கள் வரலாறு தொடரக்கூடாது.


தமது அரசியல் அதிகாரத்தைப் பெறவும் உள்ளதைத் தக்கவைத்துக் கொள்ளவும் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டி நாட்டையே அவலப்படுத்தும் மனிதகுலத் துரோகிகளின் கை மேலோங்குவது நாட்டுக்கு ஆபத்து. நமக்கும் ஆபத்து. ஆடுகள் இரண்டு மோதிக் கொள்ளும்போது வழியும் இரத்தத்தை ருசிபார்த்த நரியைப்போன்று இனமோதல்களில் சுகம் காண்போர் அரசியலிலும் ஏனைய பல துறைகளிலும் உள்ளனர் என்பதை மறுதலிக்க முடியாது. சரியாக, நேர்மையாக சிந்தித்தால் இனவாதம் எது என்பது புலப்படும். நாடும் நலம் பெறும்.

TOTAL VIEWS : 1355
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
tb7mv
  PLEASE ENTER CAPTA VALUE.